சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மகத்தான மதிய உணவுத் திட்டம்

சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மகத்தான மதிய உணவுத் திட்டம்
Updated on
1 min read

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் ஒரு மகத்தான மக்கள் திட்டமாக உருவெடுத்தது. பசியோடு இருக்கும் ஏழை, எளிய குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்கவும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும்தான் மதிய உணவுத் திட்டம் உருவானது.

நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பே 1923 இல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி அரசு தொடங்கி வைத்தது.

சுதந்திரத்துக்குப் பிறகு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமாக தமிழகம் முழுவதும் முழுமை அடையச் செய்தவர் காமராஜர்தான்.

அதன் தொடர்ச்சியாக 1982இல் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. அவருடைய ஆட்சிகாலத்தில்தான் ‘சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாக இத்திட்டம் செயல்படத் தொடங்கியது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இத்திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்களும் 2000க்குப் பிறகு மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தின. அந்த வகையில் இத்திட்டத்தைத் தொடங்கி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in