

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே, இந்தியா ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி கால்வாய்ப் பாசனத்தில் உலகின் முன்னோடி நாடாக இருந்துள்ளது. கால்வாய்ப் பாசனத்தின் முக்கியத்துவம் கருதி சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கி இன்று வரை, இதன் வளா்ச்சிக்கு மத்திய - மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
இதன் காரணமாக, இந்தியா இன்று அதிக அணைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு அதிகம் உள்ள நாடாகவும் திகழ்கிறது.
ஆனால், கால்வாய்ப் பாசனத்தின் வளா்ச்சி சமீப காலமாகக் குறைந்திருப்பதால், ஆராய்ச்சியாளா்களும் அரசின் கொள்கை வகுப்பாளர்களும் இதைக் கடுமையாக விமா்சித்து, இதன் வளா்ச்சிக்குச் செய்யப்படும் முதலீடு வீண் என்று கூறிவருகிறார்கள். கால்வாய்ப் பாசனப் பரப்பளவு உண்மையில் குறைகிறதா; ஏன் இதன் மீது கடுமையான விமா்சனங்கள் வைக்கப்படுகின்றன?
கால்வாய்ப் பாசன முதலீடு: 1950, 60-களில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில், கால்வாய்ப் பாசனம் மூலம் உணவு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்க அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு பெரும் முதலீடுகளைச் செய்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1951-56) மொத்த முதலீட்டில், 85%-த்திற்கு (ரூ.1,960 கோடி) மேல் நடுத்தர, பெரிய அணைகள் கட்டுவதற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 11ஆவது ஐந்தாண்டுத் திட்டம் வரை, மொத்தமாக ரூ.3,50,892 கோடி நடுத்தர, பெரிய அணைகள் கட்டுவதற்குச் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த நீா்ப்பாசன முதலீட்டில் ஏறக்குறைய 73%. 1950இல் 304ஆக இருந்த பெரிய அணைகளின் எண்ணிக்கை, 2019இல் 5,334ஆக உயர்ந்தது. இதனால், அணைகள் மூலமாகச் சேமிக்கக்கூடிய நீா் இருப்பின் கொள்ளளவு 55 பிசிஎம் இலிருந்து 304.58 பிசிஎம் ஆக இதே காலகட்டத்தில் உயா்ந்துள்ளது.
மத்திய நீா் ஆணையத்தின் தரவுகள் நடுத்தர, பெரிய நீா்ப்பாசனத் திட்டங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள பாசனப் பரப்பளவு 97 லட்சம் ஹெக்டேரிலிருந்து (1951இல்) 479.70 லட்சம் ஹெக்டேர்களாக (2012இல்) அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன.
கால்வாய்ப் பாசனப் பரப்பளவு: 1990-க்குப் பிறகு, கால்வாய்ப் பாசன வளா்ச்சியில் தொய்வு ஏற்பட்டாலும், இதன் நிகர பாசனப் பரப்பளவு சுதந்திரத்துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளது. 1950-51இல் 82.90 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த இதன் பரப்பளவு, 2018-19 இல் 159.40 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த வளா்ச்சியைவிட, 1960-63-க்கும் 2016-19-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல மாநிலங்கள் கால்வாய்ப் பாசனத்தில் பெரும் வளா்ச்சி அடைந்துள்ளன.
உதாரணமாக, குஜராத்தில் 89,000 ஹெக்டேரிலிருந்து 7.71 லட்சம், மத்திய பிரதேசத்தில் 4.53 லட்சத்திலிருந்து 18.55 லட்சம், மஹாராஷ்டிரத்தில் 2.47 லட்சத்திலிருந்து 10.52 லட்சம், ராஜஸ்தானில் 5.86 லட்சத்திலிருந்து 19.87 லட்சம், கா்நாடகத்தில் 2.56 லட்சத்திலிருந்து 10.47 லட்சம் ஹெக்டேர்களாகப் பாசனப் பரப்பளவு அதிகரித்துள்ளது.
ஆனால், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பளவு 9.03 லட்சம் ஹெக்டேரிலிருந்து 5.84 லட்சம், பஞ்சாபின் பரப்பளவு 21.53 லட்சம் ஹெக்டேரிலிருந்து 11.57 லட்சம், கேரளத்தில் 1.46 லட்சம் ஹெக்டேரிலிருந்து 75,000 ஹெக்டேர்கள் எனக் குறைந்துள்ளது. இதன் காரணம் ஆராயப்பட வேண்டும்.
பரப்பளவு வீழ்ச்சி உண்மையா?: 1950-51இல் 82.9 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த நிகர கால்வாய்ப் பாசனப் பரப்பளவு, 1990-91இல் 174.53 லட்சம் ஹெக்டேர்கள் என்ற உச்சத்தைத் தொட்டது. இதற்குப் பிறகு, இதன் பாசனப் பரப்பளவு பெரிய வளா்ச்சி அடையவில்லை என மத்திய வேளாண் அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.
ஆனால், மத்திய நீ்ர் ஆணையத்தின் தரவுகளோ, பயன்படுத்தப்பட்டுள்ள கால்வாய்ப் பாசனப் பரப்பளவானது 97.1 (1951-ல்) லட்சம் ஹெக்டேரிலிருந்து 2018இல் 382.8 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. அதாவது, வேளாண் அமைச்சகத்தின் தரவுகளுக்கும், நீர் ஆணையத்தின் தரவுகளுக்கும் இடையே ஏறக்குறைய 140% வித்தியாசம் உள்ளது.
ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்ற கேள்வி எழக்கூடும். பொதுவாக, நீர்ப்பாசன அணைகள் கட்டுகின்றபோது அதற்கென ஒரு அனுமானப் பயிர்த் திட்டம் தயாரிக்கப்பட்டு, அணைகளுக்கான பாசனப் பரப்பளவு கணக்கிடப்படும். இதன்படி, ஒரு அணையின் கீழ் உள்ள கால்வாய்ப் பாசனத் திட்டத்தில், ஒவ்வொரு பயிரும் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பரப்பளவு மட்டுமே பயிரிடப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவில் உள்ள அணைகளில் ஒன்றிலாவது அனுமானப் பயிர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.
கால்வாய்ப் பாசனத்தைப் பற்றிக் கடும் விமா்சனம் செய்பவா்கள் யாரும் ஏன் இதைப் பற்றிப் பேசுவதில்லை? மேலும், கால்வாய்ப் பாசனத்தின் நிகரப் பரப்பளவு பற்றிய தரவுகளை வெளியிடுகின்ற அரசுத் துறைகள், இவற்றின் மொத்தப் பாசனப் பரப்பளவை முறையாக வெளியிடுவதில்லை, வெளியிடப்படும் தரவுகளிலும் பெரும் வித்தியாசம் உள்ளது.
முக்கியக் காரணங்கள்: தரவுகள் பற்றிய பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு குறைந்ததற்குச் சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, 1990-க்குப் பிறகு பொருளாதார வளா்ச்சி, நகா்மயமாக்கலால் பெரிய நகரங்களின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப, நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்ட தண்ணீா், பிற தேவைகளுக்காகப் பெருமளவு திருப்பிவிடப்படுகின்றது.
உதாரணமாக, கடக்வாசலா அணையிலிருந்து பூனே நகருக்கும், கிருஷ்ணசாகா் அணையிலிருந்து பெங்களூரு, மைசூரு நகரங்களுக்கும் தண்ணீா் அதிகளவு எடுக்கப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பூனே நகரின் அருகிலுள்ள பிம்பிரி-சிஞ்வாட் நகராட்சிக்கு, பாவ்வணா அணையிலிருந்து தண்ணீா் அதிகம் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது எனப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, காவலா்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று விவசாயிகள் 2013இல் கொல்லப்பட்டனா்.
நகரங்களின் தேவைக்காக எடுக்கப்படும் தண்ணீா் ஆண்டுக்காண்டு அதிகரித்தாலும், இதைப் பற்றிய தரவுகளை எந்தவொரு மத்திய அமைச்சகமும் வெளியிடுவதில்லை. கால்வாய்ப் பாசனப் பரப்பளவு சமீப காலங்களில் குறைவதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
1990-க்குப் பிறகு, பயிர்களின் விலை அவற்றின் சந்தை தொடா்புடைய காரணங்களால், தண்ணீா் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை, போன்ற பயிர்களை அணையின் முன் பகுதியிலுள்ள விவசாயிகள் அதிகம் பயிரிடுவதால், கடைமடை கால்வாய்ப் பாசனப் பகுதிகளுக்கு உரிய அளவு தண்ணீா் கிடைப்பதில்லை.
இது மட்டுமல்லாமல், சா்க்கரை ஆலைகளின் உந்துதல் காரணமாக மஹாராஷ்டிரத்தில் பெரும்பாலான கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் அதிகம் தண்ணீா் செலவாகும் கரும்பு தொடா்ந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால், மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீரை மொத்த சாகுபடிப் பரப்பளவில் வெறும் 3% கொண்டுள்ள கரும்புப் பயிர் குடித்துவிடுவதாக உலக வங்கியின் (2002) அறிக்கை கூறுகிறது.
கால்வாய்களுக்கு அருகில் சட்டத்திற்குப் புறம்பாகக் கிணறுகள் வெட்டப்படுவதாலும், கால்வாய்களிலிருந்து நீண்ட குழாய்கள் மூலமாக நெடுந்துாரத்திற்குத் தண்ணீா் திருடப்படுவதாலும், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு சமீப காலங்களில் தேக்க நிலையை அடைந்துள்ளது என்பது கால்வாய்ப் பாசனம் பற்றி விமா்சிக்கும் ஆராய்ச்சியாளா்களுக்குத் தெரியாதா?
தீர்வு: கால்வாய்ப் பாசனத்தில் குறைவான முதலீட்டுத் திறன், குறைவான நீா் வருமானம், குறைவான நீா் உபயோகத்திறன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அரசுத் துறைகளாலும், விவசாயிகளாலும் செய்யப்படும் தவறுகளால், கால்வாய்ப் பாசன வளா்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தரவுகளைச் சரிவர ஆய்வு செய்யாமல், கால்வாய்ப் பாசனத்திற்குச் செய்யும் முதலீட்டை வீணடிப்பது எனக் கூறுவது என்ன நியாயம்? கால்வாய்ப் பாசனத்திற்கும், நிலத்தடி நீா்ப்பாசனத்திற்கும் நெருங்கிய தொடா்பு இருக்கிறது. கால்வாய்ப் பாசனம் இல்லாவிடில், நிலத்தடி நீா் சுரத்தல் குறைந்து கிணறுகள் வற்றிவிடும்.
கால்வாய்ப் பாசனம் பற்றி தவறான விமா்சனங்கள் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், நம்மிடம் முறையான நீா் கணக்கியல் முறை கிடையாது. 2000ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலத்தில் கால்வாய் நீா்க் கணக்கியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், நீா் உபயோகத்திறன் பெரிய அளவில் அதிகரித்தது.
எனவே, இந்தியாவிலுள்ள அனைத்து கால்வாய்ப் பாசனத் திட்டங்களிலும் உடனடியாக நீா்க் கணக்கியல் முறை கொண்டுவரப்பட வேண்டும். இதன் மூலமாக அணைகளில் தேக்கப்படும் மொத்த நீா் எந்தெந்தப் பயன்களுக்கு எவ்வளவு அளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பது முழுமையாகத் தெரியவரும், நீா் உபயோகத்திறன் அதிகரிக்கும், கால்வாய்ப் பாசனத்தின் உண்மை நிலையும் புரியவரும்.
- அ.நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர், முன்னாள் முழுநேர உறுப்பினா் - CACP.
தொடர்புக்கு: narayana64@gmail.com