Published : 23 Aug 2022 05:11 AM
Last Updated : 23 Aug 2022 05:11 AM

சுதந்திரச் சுடர்கள் | காந்தியடிகளுக்கு செய்ய வேண்டிய கைம்மாறு

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்துவிட்டார். கொல்லப்பட்ட விதம், மீண்டும் நினைவுகூர முடியாதபடிக்கு மிகவும் துக்ககரமானது. அவருடைய மறைவால் நாட்டைச் சோக இருள் சூழ்ந்திருக்கிறது, இதிலிருந்து விடுபடுவது எளிதல்ல.

இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கான வானொலி உரையில் கூறியதைப் போல, காந்தியடிகள் நமக்கு போதித்த அறிவுரைகள், துணிச்சலான வழிகாட்டுதல், ஈடு இணையற்ற தீர்க்க சிந்தனை, எளிதில் குலையாத பொறுமை, தாங்கொணாத பேரிடர் காலங்களிலும் காக்க வேண்டிய அமைதி ஆகியவற்றை - நெடிய இந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத - இந்தச் சூழலில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

தேசப் பிரிவினையால் ஏற்பட்ட கொந்தளிப்பான இந்தச் சூழலிலும் காந்தியடிகளின் உறுதியான வழிகாட்டுதல், தவறேதும் இல்லாத முடிவுகள், தோல்வி ஏற்படாது என்ற நிச்சயமான உளப்பாங்கு ஆகியவை நமக்கு வழிகாட்ட வேண்டும்.

உலகமெங்கும் அவருடைய மறைவை அடுத்து ஆயிரக்கணக்கான இரங்கல் செய்திகளும் புகழஞ்சலிகளும் வானொலிகளிலும் தந்திக் கம்பிகளிலும் இடையறாது ஒலித்துக்கொண்டிருப்பது, எப்படித் தன்னுடைய கீர்த்தியால் ஒரு சமாதானத் தூதராக உலகையே அவர் வசப்படுத்தியிருந்தார் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தான் உலக மக்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கவந்த இரண்டாவது ரட்சகர் என்று அவரைப் போற்றுகிறார்கள்.

உலகம் முழுவதும் பாராட்டும்படியான அவருடைய புகழுக்கும் செல்வாக்குக்கும் பின்னுள்ள ரகசியம்தான் என்ன? அதற்குக் காரணம் அவருடைய பண்பாடு – எல்லாவிதமான நற்குணங்களுக்கும் உறைவிடமான பண்பாடு. எந்த ஒரு விஷயத்தையும் அவர் நெருங்கியும் ஆழ்ந்தும் சிந்தித்தார்.

எந்த ஒன்றிலும் சத்தியத்தையே அவர் தெளிவாகவும் துணிச்சலாகவும் நாடினார். மற்றவர்கள் வாய்மொழியாகச் சொல்வதை மட்டும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. வெற்றிபெறுவதற்கான கூறுகள் எவை என்று என்றைக்குமே அவர் ஆராய்ந்ததில்லை. உண்மையான நம்பிக்கையுடனேயே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகினார், நண்பர்களின் வற்புறுத்தலோ, எதிரிகளின் கூர்வாள்களோ அவரைப் பலவீனப்படுத்தியதில்லை.

அவருடைய வாழ்நாள் முழுவதும் எந்தக் கண்டமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எப்படிப்பட்ட தட்ப-வெப்பநிலை நிலவும் பிரதேசமாக இருந்தாலும் – தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சபர்மதி அல்லது பிஹாரின் மலை அடிவாரத்தில் உள்ள சம்பாரண் மாவட்ட அவுரி சாகுபடியாளர்கள் மத்தியிலாக இருந்தாலும் - அவரை முழுமையாக நம்பலாம் என்ற உணர்வோடு விசுவாசத்துடன்தான் மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்தியதால்தான், மக்களுடைய எண்ணங்களை உருவாக்குவதிலும் அதை வழிநடத்துவதிலும் அவர் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார்.

இனிக்கஇனிக்கப் பேசும் வழக்கம் அவரிடமில்லை, ஆனால், செயல்திட்டங்கள் இருந்தன. மற்றவர்களிடம் இல்லாத முக்கிய அம்சம் - ஆக்கபூர்வமான திட்டங்களோடு அவர் இருந்தார் என்பதுதான். அடுத்தவர்களுடைய திட்டங்களையும் பேச்சுகளையும் வெறுமனே அவர் கண்டித்துக் கொண்டிருக்க மாட்டார். அவர்களுடைய வழிமுறையைவிட சிறந்ததொரு வழிமுறை இருப்பதை அவர்களுக்கே சுட்டிக்காட்டுவார்.

காந்தியடிகள் தனித்துவமான சிந்தனையைக் கொண்டிருந்தார், அவருடைய வாழ்க்கை சனாதன தர்மத்தை வழிமுறையாகக் கொண்டிருந்தது. அவருடைய சிந்தனையையும் வாழ்க்கை முறையையும் - நவீன சிந்தனைக்குத் தடையாக இருப்பது என்று கண்டித்து ஒதுக்கிவிட முடியாது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த அவர் காலத்திய தலைவர்கள் பலரும், அவருடைய எளிமையான வாழ்க்கை முறை, உயர்ந்த சிந்தனை, கடுமையான அடக்குமுறைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் முழுமையான அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போராட்டம், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை என்ற அவருடைய சிந்தனை – செயல்களால் பெரிதும் கவரப்பட்டனர்.

தேசத்தின் தந்தை நம்மைவிட்டுப் போய்விட்டார். நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? இனி நம்முடைய கடமைகள் என்ன? காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர்களான நம்முடைய தலைவர்கள் பண்டிட் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும், மறைந்த தலைவர் நமக்குக் காட்டியுள்ள வழியில் நடக்க, ஞானம் என்ற கைவிளக்கை ஏந்தி நிற்கின்றனர். இசக்கியேலால் சுட்டிக்காட்டப்பட்ட இஸ்ரவேலர்களின் காவல்காரரைப் போன்றவர் காந்தியடிகள்.

காந்தியடிகள் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டார். நம்மை எதிர்நோக்கியுள்ள

தூண்டுதல்கள், ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரித்திருக்கிறார். தன்னுடைய ஆன்மாவையே தன்னைப் படைத்த இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டார். பிரதமரும் படேலும் வானொலி உரையில் கூறியதைப் போல இனி நாம் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். முதலில் நாம் மதமாச்சரிய விஷம் தோய்ந்த இந்தச் சூழலிலிருந்து வெளிவருவோம். பிரதமர் சுட்டிக்காட்டியபடி, நம்மைச் சூழ்ந்துள்ள பேரிடர்களிலிருந்து மீளுவோம்.

அந்தத் தீமைகள் ஒன்றல்ல பல, சாதாரணமானவை அல்ல மிகப் பெரியவை. மனம்போன போக்கிலோ, மோசமான வகையிலோ இவற்றிலிருந்து மீள முயலக் கூடாது. நம்முடைய அன்புக்குரிய தலைவர் நமக்கு போதித்த வகையிலேயே இதிலிருந்து மீள வேண்டும். நம்முடைய பார்வையைக் கோபம் மறைத்துவிடக் கூடாது.

பகுத்தறிவற்ற சிந்தனைகள் நம்முடைய மனங்களைத் திசைதிருப்பிவிடக் கூடாது. குறுகிய கண்ணோட்டம், குழு சார்ந்த சிந்தனை, பொறாமை போன்றவை நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

அனைத்து வர்க்கத்தாரும் மதத்தாரும், சாதியாரும் ஒரே கடவுளின் குழந்தைகள்தான். அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு, அனைவருக்கும் சமமான கடமைகளும் உண்டு, ஒற்றுமையுணர்வுடனும் தூய அன்புடனும் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்தில்கொண்டு இணைந்தே வாழ்வோம் என்கிற உறுதிமொழியை இந்நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அசோகரின் இந்தியா, அக்பரின் இந்தியா என்று உலக மக்களிடம் காலங்காலமாக பெருமையுடன் சொல்லிவரும் நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும், தொடரச்செய்யவும் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

(1948 பிப்ரவரி 1 அன்று வெளியான ‘தி இந்து’ தலையங்கம்)

நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x