ஒரு கலைச்சொல் எப்போது சொல்லாகிறது?

ஒரு கலைச்சொல் எப்போது சொல்லாகிறது?
Updated on
3 min read

பெருகிவரும் அறிவுப் புலங்களுக்கு ஈடுகொடுத்துத் தமிழ், தன் சொல் இருப்பைப் பெருக்கிக்கொள்கிறது. அறிவுப் புலங்கள் நமக்கு ஆங்கிலம் வழியாகவே எட்டுவதால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான கலைச் சொற்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

“ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்தார்கள்” என்று அம்மா சொல்கிறார். “குழாய் மாத்திரையா, வில்லை மாத்திரையா?” என்று மகள் கேட்கிறார். ‘ஊசி’யின் பழைய பொருளை விரிவாக்கி, அப்படி விரிவாக்கியதை வினைச்சொல்லாக்கி, ‘மாத்திரை’க்கும் கீழ்நிலையில் அதற்கு வகைச் சொற்களை உருவாக்கிப் புதிய சூழலை வசப்படுத்திக்கொள்கிறார்கள். தேவை ஏற்படும்போது சாதாரண மக்களும் நூதனமான பொருட்களுக்கு இப்படிப் புதுச் சொற்களைப் படைத்துக்கொள்வார்கள்.

வல்லுநர்களின் நிரந்தரம்

தன்முனைப்பில் தமிழ் இவ்வாறு சொற்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கும். இந்த முனைப்போடு ஒரு இணைச் செயலாகக் கலைச் சொல்லாக்கத்துக்கு என வல்லுநர் குழுக்களையும் அமைக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படி வல்லுநர் குழுக்கள் சொற்களை உருவாக்கிவருகின்றன.

ஆனாலும், நம் சொல் இருப்புக்கும் அறிவுப் புலங்களுக்கும் நிரந்தர இடைவெளி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பின்னால் ஓடிக்கொண்டே இருந்தாலும், நமக்கு முன்னால் செல்வதை எட்டிப்பிடித்து அதனோடு நாம் பயணிக்க முடிவதில்லை. இந்த நிலைமை ஏன் நீடிக்கிறது? சொற்களை உருவாக்கும் வல்லுநர் குழு, ஏன் நம் நிரந்தரத் தேவையாகிறது? உருவாக்கும் சொற்களில் பாதிக்கு மேல் நிலைப்பதில்லையே; அது ஏன்? நிலைப்பவையும் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி ஏன் பரவலான புழக்கத்துக்கு வருவதில்லை? கலைச் சொல்லாக்கம் என்கிற நம் நடவடிக்கையின் அடிப்படைத் தன்மை என்ன?

மொழியியல் அறிஞர்கள், மொழித் தத்துவம் அறிந்தவர்கள் இவற்றுக்கு என்ன விடை சொல்வார்கள் என்று பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடச் சொல்லாக்கத்தின் நிலைமை இப்போது நன்கு முன்னேறியிருக்கிறது. தமிழ்வழியாகப் புது அறிவுப் புலங்களைப் பழகிக்கொள்ள விரும்பும் மக்கள்தொகையும் இன்று அதிகம்.

இதனால் வரும் தூண்டுதலாலும் தன்னார்வத்தாலும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் தமிழ் நாளிதழ்களும், இதர ஊடகங்களும், எழுத்தாளர்களும் அதிகம். இவை வல்லுநர் குழுக்களின் கலைச் சொல்லாக்கத்துக்காகக் காத்திருக்கவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கான இணைச்சொல் உருவாகும் வரை அவர்களால் காத்திருக்கவும் இயலாது.

சொல்ல வேண்டிய செய்தியை மையமாக வைத்து ஆங்கிலத்தின் வழியாக அல்லாமல், நேரடியாகத் தமிழில் அவர்கள் எழுதுகிறார்கள். எழுதஎழுத, புழங்கப்புழங்கக் கருத்துக்கான சொல்லோ தொடரோ பிறக்கிறது. மொழியுடன் புழங்குவதால், நாம் எழுதும் காரணத்தால், சொல் என்ற விளைவு கிடைக்கிறது.

ஆயத்தச் சொற்கள்

இந்த யதார்த்த நிலவரத்தோடு தமிழில் கலைச்சொற்களின் தேவையை நாம் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். கலைச் சொற்கள் முன்பே உருவாகி இருந்தால்தான், எழுதவே முடியும் என்று நினைக்கிறோம். ஆயத்தச் சொற்களைப் போல் அவை தயாராக இருந்தால்தான் கட்டுரை எழுத முடியும் என்பவர்கள் விளைவை, காரியத்தைக் காரணமாகக் கொள்ளும் தர்க்கக் குளறுபடியில் சிக்கியவர்கள் என்கிறார் பேராசிரியர் இ.அண்ணாமலை (Social Dimensions of Modern Tamil, 2011).

வேர்ச்சொல்லைக் கண்டு, சொல்லின் பொருட்கூறு அடிப்படையில் ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்து, கலைச்சொற்களை உருவாக்குவது நாம் பெருவாரியாகப் பின்பற்றும் வழி. இந்த ஒரு வழியை நாம் அதீதமாகச் சார்ந்திருக்கிறோம் என்கிறார் அண்ணாமலை. இந்தப் பொதுவான போக்குக்கு, நமக்கே உரிய ஒரு தனித்தன்மையையும் சேர்த்துக் கொடுத்துள்ளோம். நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சில கட்டுப்பாடுகளும் இதனோடு சேர்ந்து சொல்லாக்கச் சுதந்திரத்தைக் குறைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

உருவாக்கப்படும் புதுச் சொற்கள் சங்கத் தமிழ்ச் சாயலில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். காலத்தின் தொலைவால் ஒருவகை அந்நியம் பிறக்கிறது. அதன் வழியாக ஆங்கிலத்துக்கு நிகரான கலைச்சொல் பரிமாணத்தை எட்டிவிடுகிறோம் என்பது நம் நினைப்பு.

இது ஓர் உளவியல் காரணமாக இருக்கலாம். மொழியியல் காரணங்களைவிட, அறிவுப் புலத்துக்குப் பொருந்தாத உளவியல் காரணங்களே இங்கு அதிகம் தொழில்படுகின்றன. பல்கலைக்கழகங்களின் ‘வேந்தரும்’, ‘துணைவேந்தரும்’ பொருள் நீட்சி பெற்றதால்தான் மக்களாட்சியிலும்கூட ‘வேந்தர்’ என்ற முரண் தொனிக்காத சொற்களாகப் புழங்குகின்றனவா? பழந்தமிழின் விசித்திரக் கவர்ச்சிதானே அந்த முரணையும் தேய்த்துப் போக்கிவிடுகிறது

மொழித்தூய்மைக் கோட்பாட்டுக்கு இசைவாக நம் கலைச்சொல் இருக்க வேண்டும் என்பது நாம் விதித்துக்கொள்ளும் ஒரு கட்டுப்பாடு. தேவைக்கு ஈடுகொடுத்து புதுச் சொற்கள் விரைவாகப் பெருகாததற்கு இதுவும் ஒரு காரணம். ‘பேனா’, ‘திரவநிலை’ போன்றவற்றையும் ‘கோர்ட்’ என்பதையும் ஒரே தரத்தவையாக மதிப்பிட்டு மூன்றாவதோடு முன் இரண்டையும்கூட ஒதுக்கிவிடுகிறோம்.

தனியொருவருக்கு மொழி ஏது?

வல்லுநர் குழுவின் கலைச்சொற்கள் பல நேரங்களில், பேராசிரியர் செ.வே.காசிநாதன் சொல்லும் ‘பிரத்தியேக மொழி’யை ஒத்திருக்கிறது (விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம், 2021). மொழித் தத்துவம் பற்றிப் பேசும் காசிநாதன், ‘தனியே பெயரிடுதலும், அர்த்தங்களை நியமித்துக்கொள்வதும் சாத்தியமா’ என்று கேட்கிறார்.

கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது என்று அவர் சொல்லும் பிரத்தியேக மொழியை ஒத்தவையே வல்லுநர் குழு உருவாக்கும் கலைச்சொற்கள். வாசிப்பவரையும் கேட்பவரையும் குறைந்தபட்சம் கற்பிதம் செய்துகொண்டாவது ஒருவர் கலைச்சொற்களை உருவாக்குகிறாரா என்பதும் சந்தேகமே. அவர் மனிதக் கூட்டத்தில் அல்லாமல் தனிமையில் செயல்படுகிறார்.

‘இன்குடி நீர்மம்’ என்றால் என்ன புரிகிறது என்று சோதித்துப் பாருங்களேன். உங்களுக்குப் புரியாவிட்டாலும் அந்தத் தொடரைச் செய்தவருக்கு, அது ‘மென்பானம்’ என்று தெளிவாகப் புரிந்திருக்கும்.

வல்லுநர் குழு ஒரு சொல்லை உருவாக்குவதும் அதனை இன்னொரு வல்லுநர் குழு ஏற்றுக்கொள்வதும் என்ன விளைவைத் தரும்? இதை காசிநாதன் கேட்கும் ஒரு கேள்வியாக நாம் பார்க்க இயலும்: “எனது வலது கை எனது இடது கைக்குப் பணம் தருவது கைமாற்று தருவதாகுமா?” ஒரு சொல் எதைச் சுட்டுகிறது என்று அதை முன்மொழிந்தவர் சொல்வதால், அதற்கு அர்த்தம் உருவாகாது.

அர்த்தம் எப்படி உருவாகும் என்பதையும் காசிநாதன் பேசும் மொழித் தத்துவம் சொல்கிறது. சொல் ஒரு கருத்துப் பின்னலில் பொருந்தும்போதும், அந்தப் பின்னலை நாம் முழுமையாகக் காணும்போதும் சொல் அர்த்தம் பெறுகிறது.

இப்போது ‘எழுதுவதால்தான் சொற்கள் சொற்களாகின்றன’ என்கிற நம்முடைய தொடக்கப் புள்ளிக்கு நாம் வந்துவிடுகிறோம். சொற்களுக்காகக் காத்திருக்காத சொல்லாடல்தான் இன்றைய முதல் தேவை.

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in