

கலையுலகத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவை, திராவிட இயக்கங்களுக்கு முன்னரே கட்டியெழுப்பிய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி. வழக்கறிஞரான அவரது பேச்சாற்றல், ஆங்கில மொழி யறிவு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் தேசியப் பிரிவுக்கு தலைவர் ஆக்கப்பட்டவர்.
சுகுண விலாச சபாவின் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தவரான சத்தியமூர்த்தி, பிரிட்டிஷ் அரசின் கொள்கை களைச் சாடுவதற்கும், தேசிய உணர்வைப் பரப்புவதற்கும் நாடக மேடையும் நாடகப் பாடல்களும் சக்தி வாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருந்தார். அதனால் நாடக, சினிமா கலைஞர்களுடன் இணைந்து இயங்கத் தொடங்கினார்.
1920இல் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கெடுத்தபோது நாடக, சினிமா கலைஞர் களையும் போராட்டத்துக்குள் இழுத்தார். 1923இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது கலையுலகைச் சேர்ந்த பலரையும் கள அரசியலுக்கு அழைத்துவந்தார்.
பிரிட்டிஷ் அரசு சில நாடகக் குழுக்களுக்கு தடை விதித்தபோது, சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி, நாடக் கலைஞர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.
சினிமா பேசத் தொடங்கியதும், சமூக மாற்றத்துக்கான மகத்தான சாதனமாக அதைக் கண்ட சத்தியமூர்த்தி, ‘இந்திய மறுமலர்ச்சியில் பங்களிப்பு செய்யும்படி திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்’ என்று கட்டுரை எழுதினார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட துடன், அந்த அமைப்புக்கான கொள்கைகளையும் அவர் வடித்துக்கொடுத்தார். அதேபோல் சுதந்திரத் துக்கு முன்னர் பம்பாயில் நடைபெற்ற முதல் இந்தியத் திரையுலக மாநாட்டுக்கு தலைமை வகித்து, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.
பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்த எம்.ஜி.ராமசந்திரன், ‘கதரின் வெற்றி’ நாடகத்தில் நடித்ததும் காங்கிரஸ் அனுதாபியாக இருந்ததும் தீரர் சத்தியமூர்த்தி உருவாக்கிய தாக்கத்தின் நீட்சியே.
- ஜெயந்தன்