

22 ஆகஸ்ட் 1639 அன்று மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயர் வந்திறங்கியதிலிருந்து சென்னையின் நவீன வரலாறு தொடங்குகிறது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அந்த வகையில், சென்னைக்கு இப்போது வயது 383. வந்தாரை வாழவைத்து, ‘தருமமிகு சென்னை’யாக விளங்கும் இந்நகரைப் பற்றித் தமிழில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான நூல்கள் சிலவற்றைப் பற்றிய தொகுப்பு:
சென்னை மாநகர், மா.சு.சம்பந்தன்: தமிழில் சென்னை வரலாற்றெழுத்தின் தொடக்கமாக, தமிழறிஞர் மா.சு.சம்பந்தன் எழுதி ஜூலை 1955-இல் வெளியான நூல் ‘சென்னை மாநகர்’ (தமிழர் பதிப்பகம்). வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு, நூல் எழுதப்பட்ட காலம் வரையிலான சென்னையின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் சம்பந்தன் பதிவுசெய்திருக்கிறார். “சென்னையைச் சுற்றியுள்ள பழைய ஊர்களின் பெருமையும், நகரின் படிப்படியான வளர்ச்சியும், சென்னை நகருக்கு இந்தியாவிலும் உலகிலும் கிடைத்துள்ள சிறப்புகளும் ஆங்காங்கே சுட்டப்பட்டும், ஒருங்கே தொகுத்துக் கூறப்பட்டும் உள்ள இதைப் படிப்பவர்கள் போற்றுவார்கள்” என்று 1978இல் வெளியான இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் சம்பந்தன் எழுதியுள்ளார். சென்னையின் வரலாறு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அளவுக்குத் தமிழில் இதுவரை விரிவாக எழுதப்படவில்லை. அதற்கு ஓர் தொடக்கமாக அமைந்த சம்பந்தனின் நூல் இரண்டாம் பதிப்புக்குப் பிறகு மறுபதிப்புக் காணவில்லை.
சென்னப்பட்டணம்: மண்ணும் மக்களும், ராமச்சந்திர வைத்தியநாத்: சென்னை நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னணியில் தொடங்கிப் பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதையாகத் தொடர்ந்தாலும், சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இந்நூல் விளங்குகிறது (பாரதி புத்தகாலயம் வெளியீடு). “சென்னையின் சுமார் 300 ஆண்டு கால வரலாற்றில் அனைத்து முக்கிய மக்கள் இயக்கங்களையும், 650 பக்கத்தில் நல்ல மொழியில் கொண்டுவந்திருக்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத்” என்று சென்னையின் ‘எல்லாப் பேட்டைகளிலும் வாழ்ந்தவர்’ என்ற சிறப்புடைய பிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியுள்ள குறிப்பு இந்நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு, தே.வீரராகவன்: ஐஐடி மெட்ராஸில் பேராசிரியராகப் பணியாற்றிய தே.வீரராகவன், மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு அதே பெயரில் நூலாக்கம் பெற்றது. சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றும் முன்னர் நடைபெற்ற போராட்டங்களையும் விரிவாக முன்வைக்கும் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு: தோற்றமும் வளர்ச்சியும்: கி.பி. 1918-1939’. (மொழிபெயர்ப்பு: சு.சீ.கண்ணன், புதுவை ஞானம், அலைகள் வெளியீட்டகம் வெளியீடு) மீனவக் கிராமமாக இருந்த சென்னை, ஆங்கிலேயரின் வருகையால் தொழில்நகரமாக உருப்பெற்றதைப் பேசும் முக்கியமான ஆவணம் இந்நூல்.
சென்னைக்கு வந்தேன், தொகுப்பாசிரியர்: பழ. அதியமான்: இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பெரும்பான்மையானவை 1958-59 காலகட்டத்தில் ‘சரஸ்வதி’ இதழில் ‘பட்டினப் பிரவேசம்’ பகுதியில் வெளியாகியிருக்கின்றன. தமிழிலக்கிய ஆளுமைகள், சென்னைக்கு வந்த கதையைப் பதிவுசெய்திருக்கிறார்கள். “நான் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில், ‘மதிமோசக் களஞ்சியம்’ என்று ஒரு புஸ்தகம் வழக்கிலிருந்தது. சென்னைக்கு வருபவன் எந்தெந்த விதங்களில் ஏமாற்றப்படுவான் என்பதை விஸ்தாரமாக விவரிக்கும் நூல் அது. அந்த நூலை ஐயந்திரிபறக் கற்றறிந்து கொண்டுதான் நான் சென்னைக்கு வந்தேன்” என்ற சுவாரசியம் கொப்பளிக்கும் க.நா.சுப்பிரமண்யத்தின் குறிப்பைப் போன்ற தகவல்களாலும் உருக்கமான அனுபவங்களாலும் நூல் நிறைந்திருக்கிறது (காலச்சுவடு வெளியீடு).
ஒரு பார்வையில் சென்னை நகரம், அசோகமித்திரன்: 1948-ல் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டிலிருந்து அசோகமித்திரனின் சென்னை வாசம் தொடங்குகிறது. அன்றிலிருந்து சென்னையைப் பார்க்கத் தொடங்கிய அவர், சரியாக 50 ஆண்டுகள் கழித்து, 1998-ல் ‘ஆறாம் திணை’ என்ற இணையதளத்துக்காகத் தான் பார்த்தவற்றைப் பதிவுசெய்யத் தொடங்கினார். அதுவே, மற்றொரு நீண்ட கால சென்னைவாசியான ஓவியர் மனோகர் தேவதாஸின் கோட்டோவியங்களுடன் ‘ஒரு பார்வையில் சென்னை நகர’மாக நூலாக்கம் பெற்றிருக்கிறது (கவிதா பப்ளிகேஷன்).
வாழ்வின் சில உன்னதங்கள்..., விட்டல் ராவ்: 80 வயதை நிறைவு செய்திருக்கும் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான விட்டல் ராவ், தன் இளமைக் காலத்தில் சென்னையின் பழைய புத்தகக் கடைகளில் சேகரித்த புத்தகங்கள், அனுபவங்களைப் பற்றிய ஆவணமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். 60 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் பழைய புத்தகக் கடைகள் பற்றிய ஏறக்குறைய ஒரே ஆவணமாக விளங்கும் இந்நூலுக்கு இதைவிடப் பொருத்தமான ஒரு தலைப்பு இருக்க முடியாது. விட்டல் ராவின் பன்முக ஆளுமை அவரது இந்த அனுபவங்கள் வழி உருப்பெற்றிருக்கிறது என்பதை இந்நூலில் பரந்துகிடக்கும் தகவல்கள், அனுபவங்கள் வழி அறிய முடிகிறது (நர்மதா பதிப்பகம் வெளியீடு).
அன்றைய சென்னைப் பிரமுகர்கள் (2 பாகங்கள்), ராண்டர் கை: 19ஆம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த பிரமுகர்களைப் பற்றி 1990-களில் ஒரு வார இதழில் 104 வாரங்கள் ராண்டர் கை எழுதிய தொடர் இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது (மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு). பல்துறைகளைச் சேர்ந்த 83 பிரமுகர்களைப் பற்றி, “அவர்கள் எங்கு பிறந்தார்கள், எவ்வாறு சென்னை வந்தார்கள். சென்னையில் அவர்கள் செய்த வேலை என்ன? அவர்களுடைய நிறை-குறை, மேடு-பள்ளம், வெற்றி-தோல்வி பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் எழுதினேன்” என்று முன்னுரையில் ராண்டர் கை எழுதியிருக்கிறார். பிரபலங்களின் வாழ்க்கை வழி அக்காலகட்டத்து ‘மெட்ராஸி’ன் வரலாற்றை இக்கட்டுரைகள்வழி அறியலாம். இவற்றைத் தவிர்த்து, சென்னையின் முக்கிய வரலாற்றாய்வாளராக விளங்கிய எஸ்.முத்தையாவின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ (தமிழில்: சி.வி.கார்த்திக் நாராயணன்; கிழக்கு பதிப்பகம்), நரசய்யாவின் ‘மதராசப்பட்டினம்’ (பழனியப்பா பிரதர்ஸ்) ஆகியவை சென்னையின் வரலாறு குறித்து பரவலாகச் சுட்டப்படும் நூல்கள். சென்னையின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை என்றாலும், இந்தப் புத்தகங்கள்வழி சென்னையின் வரலாறு குறித்த ஒரு பார்வை கிடைக்கும் என்பது நிச்சயம்.
- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in