

திரையிசைப் பாடல்கள் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக மாறிவிட்டன. தொடக்கக் காலத் திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர்கள் பாடும் நையாண்டிப் பாடல்களாகத்தான் கிராமிய மெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இளையராஜாவின் வருகை அந்த மெட்டுகளுக்குத் தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டுத் தந்தது. 1992-ல், கிராமத்துப் பின்னணியில் படமாக்கப்பட்ட ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. ஆனாலும், அந்தப் பாடல் நகரத்து இளைஞர்களின் விருப்பப் பாடலாகத்தான் அமைந்தது.
அதற்கடுத்த ஆண்டில் வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ ரஹ்மானை கிராமத்துத் தெருக்களுக்குள் அழைத்துவந்தது. இன்னமும் கிராமங்களில் தாய்மாமன் சீர் சுமந்து வரும்போது ‘மானூத்து மந்தையிலே…’ பாடல்தான் ஒலிபெருக்கிகளில் உறவாடிக்கொண்டிருக்கிறது. திருமண வீடுகளில், ‘பாசமலர்’ படத்தின் ‘வாராயென் தோழி... வாராயோ...’ ஒலிப்பதைப் போல நீராட்டு விழாக்களில் ரஹ்மானே நிறைந்திருக்கிறார். கிராமத்துத் திருவிழாக்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் எதுவும் ‘உழவன்’ படத்தின் ‘ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு..’ இல்லாமல் முழுமை பெறுவதில்லை. ரஹ்மானின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘புதிய முகம்’, ‘மே மாதம்’, ‘என் சுவாசக்காற்றே’, ‘மின்சாரக்கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ரிதம்’ போன்ற படங்களின் இசைப் பாடல் தொகுப்புகளை இசை வடிவிலான கவிதைத் தொகுப்புகள் என்றே சொல்லலாம்.
புது அடையாளம்: தை மாதம் பிறந்தால், ‘வருஷம்-16’படத்தின் ‘பூப்பூக்கும் மாசம்’ என்று வானொலி அலைவரிசைகளில் இளையராஜாவின் பாடல் ஒலிப்பதைப் போல, மார்கழி முதல் நாளன்று ‘மார்கழிப் பூவே’ தொடர்கிறது. நமக்கு முந்தைய தலைமுறையின் ‘பாடித் திரிந்த பறவைகளே’ பாடலை 90-களின் பிற்பாதியில் ‘காதல் தேச’த்தின் ‘முஸ்தபா... முஸ்தபா...’ பாடல் மாற்றீடு செய்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஊர் என்றாலும் தூறல் விழுந்தவுடனே பண்பலை வானொலியில், ‘நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ’ என்று குமாரின் குரலே கேட்கிறது.
கலைஞர்களுக்கு மரியாதை: இந்தி உள்பட மற்ற மொழிகளில் பாடிக்கொண்டிருந்த பாடகர்களை மட்டுமல்ல, சாஸ்திரிய இசையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களையும் திரைக்கு அழைத்துவந்தவர் ரஹ்மான். ஆபேரி என்றவுடன் டி.கே.பட்டம்மாளின் ‘எப்படிப் பாடினரோ’ நினைவுக்கு வந்துவிடும். இப்போது அவரது பேத்தி நித்யயின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலும் கூடவே நினைவுக்குவருகிறது. ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலின் தவில் கைவண்ணமும் அந்தப் பாடலில் பேசப்பட்டது. ‘டூயட்’ படப் பாடல்களுக்குப் பிறகு கத்ரி கோபால்நாத் வெகுமக்களிடமும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இன்னும் உன்னிகிருஷ்ணன், சீர்காழி சிவசிதம்பரம், ஓ.எஸ்.அருண் போன்ற பல கர்னாடக இசைக் கலைஞர்களும் ரஹ்மானின் பிரபலப் பாடல்களில் தங்களுக்கான தனித்துவத்தோடு பங்கெடுத்தனர். ரஹ்மான் இசையமைக்க வந்த பிறகுதான் வாத்தியக் கலைஞர்கள் தனிக் கவனம் பெற்றனர். டிரம்ஸ் சிவமணி, சுரேஷ் பீட்டர்ஸ், நவீன் குமார், ரஞ்சித் பரோட், கீத் பீட்டர் என்று அந்தப் பட்டியல் நீளமானது.
அயல் இசைத் தாக்கம்: கர்னாடக இசையில் அமைந்த பாடல்களில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்த ரஹ்மான், வட இந்திய இசை வடிவங்களையும் தமிழில் பிரபலப்படுத்தியிருக்கிறார். கஸல் இசையின் குழைவும் ஹவாலி இசையின் கம்பீரமும் அவரது பாடல்களில் குறுக்கும் நெடுக்குமாக இழையோடின. பம்பாய் படத்தில் ‘கண்ணாளனே’ எனும் காதல் பாடலின் நடுவே ரஹ்மானின் குரலில் சூபிக்களின் ஹவாலி இசை வடிவம் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மதுரை நாயக்கர் மஹால், ரஹ்மானின் பாடல் பெற்ற தலமாகிப் போனது. கேரளத்தின் அதிரப்பள்ளி பேரருவியின் அருகே ஆயிரக்கணக்கான பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. எனினும், அருவியின் அருகில் நின்றால் மனதுக்குள் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘நறுமுகையே நறுமுகையே’ பாடல்கள்தான் ஒலிக்கின்றன. ஊட்டி ரயில் என்றால் கூடவே ரஹ்மானின் ‘தைய தையா’தான். இதற்கு மணிரத்னம், வைரமுத்து ஆகியோருக்கும் பங்கிருக்கிறது என்றாலும் ராகமும் தாளமும் ரஹ்மானுக்கே சொந்தம் அல்லவா?
மே மாதம் மூன்றாவது வாரத்தில் சமூக ஊடகங்களில் ரஹ்மான் இசையமைத்த ‘விடைகொடு எங்கள் நாடே’ பாடல் பெருமளவில் பகிரப்படுகிறது. தமிழகத்தின் கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டங்களில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் உறக்கம்வராத பின்னிரவுகளிலும் ரஹ்மானே துணையிருக்கிறார். ஆனால், அவருடைய முதல் பத்தாண்டுகளுக்குப் பிறகு விழுந்த இடைவெளி இன்னும் சரிசெய்யப்படவில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளின் வாய்கள் ‘வெறித்தனம்’ பாடலைத்தான் முணுமுணுக்கின்றன. கல்லூரி மாணவியரின் செல்பேசிஅழைப்புகளில் ‘சிங்கப்பெண்ணே’ என்று ரஹ்மான் அறைகூவல் விடுக்கிறார். அடுத்த தலைமுறையோடு அவர் புதிய இசைமொழியில் உரையாடத் தொடங்கிவிட்டார். 90-களின் குழந்தைகள் இன்னும் அவரது பழைய பாடல்களிலேயே ஆழ்ந்திருக்கிறார்கள்.
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in