

பிரபல தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி காலமாகிவிட்டார் (87). இந்தச் செய்தியை சரோஜ் நாராயண் ஸ்வாமி வாசித்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றுகிறது. தன் உணர்வுகளைச் செய்தி வாசிப்பில் வெளிப்படுத்தாமல், அகில இந்திய வானொலியின் முத்திரையுடன் அவர் வாசிக்கும் செய்தி, மனதுக்குள் ஒலிக்கிறது.
என்ன செய்தியாக இருந்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார். ஆனால், அந்தச் செய்தியின் இயல்புக்கேற்ற உணர்வுகளைக் கேட்பவர் இதயங்களில் பாயச் செய்யும் வல்லமை அவர் குரலுக்கு உண்டு. நெருக்கடி நிலைப் பிரகடனம் போன்ற செய்தியை அவர் வாசித்தபோது, அவரே அந்த நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியது போன்ற உணர்வு உண்டானது. சிறந்த தமிழ் உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கம், கம்பீரமான குரல் என அவரது செய்தி வாசிப்பானது தனித்துவம் வாய்ந்தது. அயல் மொழி சார்ந்த வார்த்தைகளையோ பெயர்களையோ உச்சரிக்கிறபோது அந்த மொழிக்குரியவர்களிடம் கேட்டு, அதே மொழியின் ஒலித் தன்மையோடு அந்த வார்த்தையை அவர் உச்சரிப்பார். செய்தியை வழங்கும் தன்மையிலேயே செய்தியின் நம்பகத்தன்மை முழுமையாகப் பிரதிபலிக்கும்.
ஆணா, பெண்ணா?: செய்தி என்றால் வானொலியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் அதிகாலை வேளையில் பணிக்கு வந்து, ஆங்கிலத்திலிருந்து பல செய்திகளை நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்து காலைச் செய்திகளோடு மக்களை விழிக்கவைத்தவர். தமிழின் மிகப் பெரிய ஆளுமைகளைத் தன் குரல் வளத்தால் ஈர்த்தவர். அவரது கம்பீரக் குரல்வழி மட்டுமே அறிந்த பலருக்கும் அவர் ஆணா பெண்ணா என்பது தெரிந்திருக்கவில்லை. 1980-களில் சரோஜ் நாராயண் ஸ்வாமி செய்தி வாசிப்பைப் போலப் பேசி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிமிக்ரி செய்வதுண்டு. மொழிபெயர்ப்பு, செய்தி வாசிப்பென ஒலிபரப்புத் துறைக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்தவர் சரோஜ். செய்தி வாசிப்புத் திறனால் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு அளிக்கப்பட்டது. இவரது கீர்த்தி மிகு ஒலிபரப்புப் பணிக்காக 2013இல் அகில இந்திய வானொலியின் தமிழ் செய்திப் பிரிவின் பவள விழா கொண்டாட்டத்தின்போது நினைவுப் பரிசு வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆரின் பாராட்டு: இவரது குடும்பத்தின் பூர்விகம், தஞ்சாவூர். மும்பையில் பிறந்து வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின் டெல்லி சென்றவர் 50 வருடங்கள் டெல்லி வாசியாக இருந்தார். சுமார் பத்து மொழிகளுக்கு மேல் புரிந்துகொள்கிற அளவுக்குப் பரிச்சயம் கொண்டவர். அவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பவர், கணவர் நாராயண் ஸ்வாமி என அடிக்கடி பெருமிதமாகக் கூறுவார். முதன்முதலில் டெல்லி நாடாளுமன்றச் சாலையில் யுனைடெட் கமர்ஷியல் வங்கியில் சரோஜ் பணியாற்றினார். அதன்பின் அடுத்திருந்த அகில இந்திய வானொலியின் தென் கிழக்காசிய ஒலிபரப்புப் பிரிவில் செய்திகள் வாசித்தார். ஒலிவாங்கி மோகம் அவரை வங்கியிலிருந்து அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஈர்த்தது. தமிழிலிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழென அவரது மொழிபெயர்ப்புத் திறன் பணிக்கு உரிய தனித் திறனை அளித்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் டெல்லியில் திட்டக்குழு கூட்டத்திற்கு வரும்போதெல்லாம், இவரே எம்.ஜி.ஆரின் உரையைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியிருக்கிறார். அதை எம்.ஜி.ஆர். சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.
அடுத்த தலைமுறையை உருவாக்கியவர்: பல்வேறு பிரபல தமிழ்த் திரைப்படங்கள், ஆவணப் படங்கள், விளம்பரப் படங்களெனப் பலவற்றிலும் தனது குரல்வழி முத்திரை பதித்தார் சரோஜ். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், பி.வி. நரசிம்ம ராவ் உட்பட்ட முக்கியத் தலைவர்களை நேர்முகம் கண்டு ஒலிபரப்பியிருக்கிறார். இந்திரா காந்தியின் மரணத்தைத் தமிழுலகிற்கு அறிவித்த அந்தச் சோக தருணத்தை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. பாரதியின் கவிதைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் சரோஜ். அறிவுபூர்வமான நகைச்சுவை அவரது உரையாடலின்போது வெளிப்படும்.
அரசியல் ஆளுமைகளான இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உட்பட பல அரசியல் ஆளுமைகளின் அன்பைப் பெற்றிருந்தார். ஒலிப் பிழையின்றி ஒலிபரப்புத் துறையில் பல உன்னதங்கள் புரிந்து டெல்லியில் அடுத்த தலைமுறை நல்ல தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். 34 ஆண்டுகள் சீரிய பணியாற்றி, பணி ஓய்விற்குப் பின் தான் பிறந்த மும்பைக்கே திரும்பினார். வானொலிவழி வானலைகளில் வலம் வந்து மக்களின் இதயங்களில் இறுகத்ச் தடம் பதித்த சரோஜ் நாராயண் ஸ்வாமி, தற்போது வானலைகளிலேயே கலந்துவிட்டார்.
தொடர்புக்கு: punarthan@gmail.com