

1975, ஜூன் 25 அன்று புது டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். கவிஞர் ராம்தாரி சிங் தின்கர் எழுதிய ‘சிங்காசன் காலி கரோ கி ஜனதா ஆத்தி ஹை’ (சிம்மாசனத்திலிருந்து ஆட்சியாளர்களைத் துரத்த மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்) எனும் கவிதையை மேற்கோள் காட்டி சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் உரையாற்றினார். இந்திரா காந்திக்கு எதிராக நாம் அனைவரும் ஒரு எழுச்சிமிகுந்த சவாலை முன்னெடுக்க வேண்டும் என்று ஜேபி அப்போது வலியுறுத்தினார். அந்த உரைக்கு சில மணி நேரத்துக்குப் பின்னர் நள்ளிரவில், நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிறப்பித்தார்.