

இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைகொள்ள வைத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் (இயற்பெயர் முகமது யூசுப் கான்), இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே ஒரு பழ வியாபாரியின் 12 குழந்தைகளில் ஒருவராக 1922இல் பிறந்தவர். பின்னர் அவருடைய குடும்பம் மகாராஷ்டிரத்தில் குடியேறிவிட்டது.
பழ வணிகத்தை கவனித்துவந்த யூசுப், திலீப் குமார் என்னும் புனைபெயருடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த முதல் மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. ’ஜுக்னூ’ (1947), ‘ஷாஹீத்’ (1948) ஆகிய படங்களின் வெற்றி பாலிவுட்டில் அவரை நிலைநிறுத்தியது. 1950-களில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். துயரம் நிரம்பிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்ததால், இவர் ‘டிராஜடி கிங்’ (துயரக் கதை அரசன்) என்னும் பெயரைப் பெற்றார். அதே நேரம் வாள்சண்டைப் படமான ‘ஆன்’ (1952), நகைச்சுவைப் படங்களான ‘ஆசாத்’ (1955), ‘ராம் அவுர் ஷ்யாம்’ (1967) ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்திருந்தார். 1980-களில் குணச்சித்திர நடிகராகத் தன் நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.
முறைசார்ந்த நடிப்பு (Method Acting) என்னும் நடிப்பு வகைமையை இந்தியாவில் பிரபலப்படுத்திய முன்னோடி திலீப் குமார். எந்த நடிப்புப் பள்ளியிலும் பயிலாமல், அவரே தன் பாணியில் அதை வடிவமைத்துக்கொண்டார். பெருமதிப்புக்குரிய இயக்குநர் சத்யஜித் ராய், திலீப் குமாருடன் பணியாற்றியதில்லை என்றாலும் அவரை மிகச் சிறந்த ’முறைசார்ந்த நடிகர்’ என்று புகழ்ந்துள்ளார். அமிதாப் பச்சன். நஸீருதின் ஷா, கமல் ஹாசன், ஷாருக் கான், ஆமீர் கான், இர்ஃபான் கான், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் பலர், திலீப் குமாரைத் தமது ஆதர்சமாகக் கொண்டவர்கள். நிறைவாழ்வு வாழ்ந்த திலீப் குமார், கடந்த ஆண்டு காலமானார்.
- நந்தன்