

சுதந்திரப் பொன்விழாவை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் இசை ரசிகர்களும் மறுபடியும் மறுபடியும் கேட்டுப் பரவசமடைந்த இசை ஆல்பமாக வெளி வந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் `வந்தே மாதரம்'. ஆல்பத்தின் முகப்பு பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்த `மா துஜே சலாம்' (இந்தி வடிவம்), ‘தாய்மண்ணே வணக்கம்’ (தமிழ் வடிவம்) இளைஞர்களைப் பெரிதும் வசீகரித்தது.
இசைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான சோனி, ஏ.ஆர்.ரஹ்மான் உடனான இந்த ஆல்பத்தின் வழியாகத்தான் இந்தியாவில் கால்பதித்தது.
"இந்த ஆல்பத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, எந்த நாட்டு இசைக் கலைஞர் தேவைப்பட்டாலும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் சோனி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அந்த ஆல்பத்தின் `குருஸ் ஆஃப் பீஸ்' (Gurus of Peace) என்னும் பாடலைப் பாடுவதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல சூஃபி பாடகர் நுஸ்ரத் ஃபதே அலிகானைத் தேர்ந்தெடுத்தார். நுஸ்ரத்தின் சூஃபி பாடல்களுக்கு ஏற்கெனவே ரசிகராக இருந்த ரஹ்மான், `சந்தா சூரஜ் லாக்கோன் தாரே... ஹேய்ன் ஜப் தேரே ஹியே ஸாரே..' எனத் தொடங்கும் பாடலை பாகிஸ்தானுக்குச் சென்று நஸ்ரத் ஃபதே அலிகானைப் பாடவைத்துப் பதிவு செய்துவந்தார்.
திரையிசை அல்லாத இசை ஆல்பங்களில் விற்பனையில் சாதனை படைத்தது ‘வந்தே மாதரம்’. சர்வதேச அளவில் அதிகமானோரை ஈர்க்கவும் செய்தது. ஓர் இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்த முதல் இசை ஆல்பம் `வந்தே மாதரம்' என்பது இந்த ஆல்பத்தின் மற்றுமொரு சாதனை!
- வா.ரவிக்குமார்