

கடன் வசூலிக்கும் முகவர்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அண்மையில் அளித்துள்ள அறிவுறுத்தல்கள் வரவேற்புக்குரியவை. பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த சூழலில், இந்த அறிவுறுத்தல்கள் காலத்தின் தேவையாக அமைந்துள்ளன.
வங்கிகளும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் தங்களது வாராக் கடன்களை வசூலிக்கும் பணிகளை முகவர்களிடம் ஒப்படைத்துவருகின்றன. இந்த முகவர்கள், கடன் வாங்கியவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்தே ரிசர்வ் வங்கி, புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடன் வசூலில் ஈடுபடும் முகவர்கள், கடன் வாங்கியவர்களை வாய்மொழியாகவோ உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்பது இந்த அறிவுரைகளில் முக்கியமானது.
அநாகரிகமான குறுஞ்செய்திகள், தொலைபேசி மிரட்டல்கள் ஆகியவற்றை விடுக்கக் கூடாது; தவணைகளைச் செலுத்துமாறு இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடாது ஆகியவையும் இந்த அறிவுரைகளில் அடக்கம்.
கடன் வசூல் முகவர்கள் குறித்து ஏற்கெனவே ரிசர்வ் வங்கி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. கடன் வசூலிக்கும் நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் கடன் வாங்கியவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.
வசூலுக்குச் செல்லும் முகவர், கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கிய அத்தாட்சிக் கடிதத்தையும் தம்முடன் கொண்டுசெல்ல வேண்டும்.
கடன் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அந்த வழக்கு முடிவுசெய்யப்படுவதற்குள், அக்கடனை வசூலிப்பதற்காக முகவர்களை நியமிக்கக் கூடாது.
கடன் வசூல் தொடர்பாக கடன் வாங்கியவரிடமிருந்து எழும் புகார்களைத் தொடர்புடைய வங்கி அல்லது நிதி நிறுவனம் உரியவகையில் அணுக வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்த அறிவுறுத்தல்கள் பெரிதும் பின்பற்றப்படுவதில்லை.
பெருந்தொற்றையடுத்து சிறு குறு தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் சிறு வியாபாரிகளும் அமைப்புசாராத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கத்தால் பணப்புழக்கம் முற்றிலும் தடைப்பட்டு, அவர்களது கடன் தவணைகளை உரிய கால அவகாசத்தில் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பிறகும், அதைச் செலுத்த முடியாத நிலையிலேயே பலரும் உள்ளனர். இந்நிலையில், தாமதமாகும் கடன் தவணைகளுக்காக அவர்களை முகவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுவதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்தன.
கடன் வாங்கியவர்களின் குடும்ப உறுப்பினர்களும்கூட இந்தத் தொலைபேசி வழி தொல்லைகளை எதிர்கொள்கின்றனர்.
ஒருபக்கம், பெருநிறுவனங்களின் தொழிற்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பின்னடைவிலிருந்து அவை மீட்கப்படுகின்றன. இன்னொருபக்கம், சாமானிய மனிதர்கள் தாங்கள் வாங்கிய தனிநபர்க் கடன்களையும் வீடு, வாகனக் கடன்களையும் தவணை தப்பிச் செலுத்துவதற்காக அவமதிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
வாராக் கடன்களை வசூலிப்பது வங்கித் துறைக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னமும்கூட முழுதாக நீங்காத நிலையில், கடன் வசூலிப்பு நடவடிக்கைகளைத் தனிமனித கண்ணியம் குறையாது மேற்கொள்வதே முறையானது.