

தமிழகத்தில் உள்ள 163 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஏறத்தாழ 4.07 லட்சம் மாணவர்கள் இணையம் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் தமிழக அரசு, ஒன்றியத்துக்கு ஓர் அரசுக் கலைக் கல்லூரி என்னும் இலக்குடன் புதிதாகக் கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கிவருகிறது.
மேலும், மாநிலப் பல்கலைக்கழகங்களால் தொடங்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளையும் அரசே ஏற்று, கலை அறிவியல் கல்லூரிகளாக நடத்திவருகிறது.
அரசுக் கலைக் கல்லூரிகளில் நடத்தப்படும் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல், வணிகம், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் அனைத்தும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தலித், பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் உயர்கல்விக்குத் தொடக்கப் பாதையாக இருக்கின்றன.
கல்விமுறையில் சுதந்திரம், அரசியல்சார் பிரச்சினையில் முன்னிற்கும் தலைமைப்பண்பு முதலியவை அரசுக் கலைக் கல்லூரிகளின் அடையாளமாக இருக்கின்றன. மேலும் தலைமைப் பாடத்திற்கான முக்கியக் களத்தை இத்தகு கல்லூரிச் சூழல்தான் ஏற்படுத்திக்கொடுக்கிறது. அண்ணா உள்ளிட்ட பல ஆளுமைகள் கலைக் கல்லூரிகளிலிருந்து உருவெடுத்தனர் என்பது வரலாறு.
உயர்ந்துவரும் மதிப்பு
1990-க்குப் பிந்தைய புதிய பொருளாதாரக் கொள்கை, நவதாராளயமாக்கல், 2000-க்கு பிறகு ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஆகிய காரணங்களால் கலைக் கல்லூரிகளில் சேர்க்கை சற்று மந்தமாக இருந்தது.
இருந்தபோதும், தற்போது பெற்றோர்கள் மத்தியில் பொதுக்கல்வி முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு வளரத் தொடங்கியிருக்கிறது.
பள்ளிக் கல்வி மாணவர்களின் இடைநிற்றல் குறைப்பு, அரசுப் பணியாளர் தேர்வாணையப் பாடத்திட்டத்தில் கலைப்புலக் கல்விக்கு முக்கியத்துவம், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு, உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1,000 உதவித்தொகை, கட்டணமில்லாப் பேருந்துச் சலுகை, குடும்ப நிதிநிலைமைக்கு உரிய படிப்புகள் ஆகிய உயர் செயல்திட்டங்களால் கலை, அறிவியல் கல்லூரிகள் புதிய வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
சேவைத் துறையில் வேலைவாய்ப்பு உருவாகிவருவதால் கலைப்புலம் சார்ந்த பாடப்பகுதிகளை, இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய சூழல் அரசுக்கும் கல்வியாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அவல நிலை
கல்லூரிகளின் உட்கட்டமைப்பு, நாக் (NAAC), என்.ஐ.ஆர்.எப் தரவரிசைப் பட்டியல், மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆகியவற்றில் மேன்மை அடைந்து வந்தாலும், அரசுக் கலைக் கல்லூரிகளில் முதன்மை உறுப்பாக இருப்பது ஆசியர்கள்தாம். நிரந்தரப் பேராசியர்கள், விளிம்புநிலை ஆசிரியர்களான கௌரவ விரிவுரையாளர்கள் என்னும் இரு பிரிவினரைக் கொண்டுதான் கலைக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களையும், கற்றல் முறையையும் நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையாக மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மேலும், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் கௌரவ விரிவுரையாளர்கள்.
நிரந்தரப் பேராசிரியர் இல்லாத இடத்தில் மொத்த வேலைப் பளுவையும் இவர்கள்தான் எதிர்கொள்கின்றனர். ஆனால், புதிய ஊதியக் குழு பரிந்துரையின்படி ஒரு நிரந்தரப் பேராசிரியருக்கும் தற்காலிக விரிவுரையாளருக்கும் வழங்கப்படும் ஊதியம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். இந்தக் குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட மாதா மாதம் பெறமுடியாமல் பெரும் உளவியல் அழுத்தத்தை கெளரவ விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தில் ‘தேவை மற்றும் வழங்கல்’ என்னும் சந்தைப் பொருளாதார உத்தியைக் கையாள்வது அறிவுசார் சமூக உருவாக்கத்திற்குப் பின்னடைவாகும். அரசுக் கலைக் கல்லூரிகள் மட்டுமல்லாது பல தனியார் கல்லூரிகளில் பெரும் அறிவுச் சுரண்டல் நடைபெறுகிறது.
ஆசிரியர் சமூகத்தை முறைசாரா தொழிலாளர் நிலையில் வைத்திருக்கின்றனர். முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியராகச் சேரும்போது வெறும் ரூ.5,000 மாத ஊதியம் பெறும் நிலைமை இன்றும் தொடர்கிறது.
புறக்கணிப்பு களையப்படுமா?
உயர் கல்வியில் அந்நிய முதலீட்டு ஒப்பந்தம். நவதாராளமயமாக்கல், சந்தைப் பொருளாதார ஆதிக்கம், கரோனா பெருந்தொற்று, சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் பணியை அதிகப்படுத்துவது, பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்தைக் குறைத்தல், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களால் உயர்கல்வித் துறையில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் முதல் தலைமுறையாக முனைவர் பட்டம் பெற்றவர்கள் நிரந்தரப் பணிக் கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலைக்கு வந்துவிட்டனர்.
கல்வி என்பது பொருளியல் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெறுவது என்பார் அம்பேத்கர். கல்வியில் உச்சம் தொட்ட ஒருவன் இவை இரண்டையும் பெற முடியாமல் போனால், சமூகப் புறக்கணிப்பு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எளிய மாணவனுக்கும் தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்றால், ஓர் ஆசிரியருக்கு ஆளுமை வளர்ச்சியும் மனோதிடமும் மிக முக்கியம். இவை தேங்கியும் உலர்ந்தும் போய்விடாமல் பார்த்துக்கொள்வது அரசின் அடிப்படைக் கடமை.
- வெ.மதியரசன், ‘கவண்கற்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் தொடர்புக்கு: mathi.ppn@gmail.com