

சுதந்திர இந்தியாவில்தான் நாடகம் தன் மரபுத் தளைகளை உடைத்துப் புதிய பாணியில் பார்வையளர்களிடம் நெருங்கி வந்தது. சமூகக் கருத்துகள், நவீன வாழ்க்கை போன்றவை நாடகங்களில் வெளிப்படத் தொடங்கின.
டச்சு நாடகக் கலைஞரான யூஜெனியோ பார்பா தொடங்கிய மூன்றாம் நாடக அரங்கு (Third Theatre) இயக்கத்தை உத்வேகமாகக் கொண்டு இந்தியாவில் புதிய நாடக பாணி உருவானது.
நாடக முன்னோடிகளில் ஒருவரான பாதல் சர்கார், புதுமையான நாடக வடிவத்தின் தேவையை உணர்ந்தார். மரபான மேடை நாடகங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில், அதை விட்டுவிட்டு பரிசோதனை முயற்சிகளில் அவர் இறங்கினார்.
யூஜெனியோ பார்பா, போலந்து நாடக முன்னோடி ஜெர்சி க்ரோடோவ்ஸ்கி ஆகியோரை உந்துதலாகக் கொண்டு இந்தியாவுக்கு ஏற்ற ஒரு நவீன நாடக பாணியை அவர் உருவாக்கினார்.
அதுவே மூன்றாம் நாடக அரங்கு. வீதி நாடகம், மனித நாடக அரங்கு என்கிற பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. மரபான நாடக வடிவத்தை முதல் அரங்கம், மேடை நாடகத்தை இரண்டாம் அரங்கம் எனக் கொள்வதால் மேடைகள், மரபுகளற்ற புதிய வடிவம் மூன்றாம் அரங்கம் எனப் பெயர் பெற்றது.
பார்வையாளர்களுக்கு அருகிலும் பார்வையாளர்களைச் சுற்றிலும் பார்வையாளர்களை சேர்த்துக்கொண்டும் நிகழ்த்தப்படுவதால், இதை மனித அரங்கு என்றும் சொல்லலாம்.
கிரேக்கத்தில் அடிமையாக்கப்பட்டிருந்த ஸ்பார்டகஸின் கதையை அடிப்படையாகக் கொண்டு பாதல் சர்கார் எழுதிய மூன்றாம் அரங்கத்துக்கான நாடகம் முக்கியமானது.
மேடை நாடகங்களில் முகபாவங்களைக் காட்டிலும் குரலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், பார்வையாளர்களுக்கு அருகில் நிகழ்த்தப்படும் இந்த நாடகத்தில் உணர்ச்சிகளை நெருக்கமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தது.
பார்வையாளர்களையும் நாடகத்தின் ஓர் அம்சமாக மாற்றிக்கொள்ள முடியும். மரபான நாடகப் பாணியிலிருந்த இடைவெளி இந்தப் புதிய பாணியில் களையப்பட்டது. நாடகம் மக்கள்மயப்படுத்தப்பட்டது.
பாதல் சர்காரின் இந்தப் பாணி இந்திய நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய பாணிக்கான பயிலரங்குகளை பாதல் சர்கார் நடத்தினார். தமிழ் நவீன நாடகத்தில் பாதல் சர்கார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அரங்கு, பொருள்கள், மைக், தொழில்நுட்பக் கருவிகள் போன்ற யாவுமின்றித் தமிழ்நாட்டில் உருவான சமூகக் கருத்துகள் மிக்க வீதி நாடகங்களுக்கு இதுவே உந்துதலாக இருந்தது.
- விபின்