சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: துணிச்சல் என்றால் போஸ்

சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் சந்திர போஸ்
Updated on
2 min read

சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இ.எஃப். ஓட்டன் இனவாதக் கருத்துகளைச் சொல்லி, இந்தியர்களைத் தரம் தாழ்த்திப் பேசினார். இதை போஸும் நண்பர்களும் எதிர்த்தனர்.

இதன் காரணமாக இரண்டு ஆண்டு படிப்பைத் தொடர இயலாத நிலைக்கு போஸ் தள்ளப்பட்டார். பிறகு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தவர், ஜலியான்வாலா பாக் படுகொலையை அறிந்ததும் இந்தியா திரும்பினார்.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் பணியாற்றினார். 1930இல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

பின்னர் ஐரோப்பாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதை நல்லவிதமாகப் பயன்படுத்த முடிவுசெய்து, வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் இந்திய விடுதலைக்கான மையங்களை நிறுவினார். இதனால் அவர் இந்தியாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது, போஸுக்கான தடை நீங்கியது.

காங்கிரஸ் கட்சியில் போஸின் செல்வாக்கு அதிகரித்தது. அதிரடிப் போக்கு கொண்ட போஸ், துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைத்தார். ஒருகட்டத்தில் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போஸின் போக்குக்கு எதிராக இருந்தனர். 1939இல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் இரண்டாவது முறையாக போஸ் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமய்யாவை காந்தி நிறுத்தினார். 1,580 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்காகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போஸ், ‘அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி'யை ஆரம்பித்தார்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் ஆதரவை பிரிட்டன் கேட்டது. இதை எதிர்த்த போஸ், ஜெர்மனியையும் ஜப்பானையும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால், அவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கண்காணிப்பில் வெளியில் விட்டது ஆங்கிலேய அரசு. 1941இல் இரவு கண்காணிப்பைத் தாண்டி மாறுவேடத்தில் போஸ் தப்பிச் சென்றார்.

ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களைத் திரட்டி, பிரிட்டனுக்கு எதிராகப் போராட எண்ணினார்.

1943இல் பர்மாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் படைகளை அனுப்பினார். அவருடைய 'ஜான்சி ராணி' பெண்கள் படைக்கு கேப்டன் லட்சுமி சாகல் தலைமையேற்றார். போஸின் படைகளால் பிரிட்டன் படையை எதிர்கொள்ள முடியவில்லை.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்தை மேற்கொண்டு வழிநடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 1945 ஆகஸ்ட் 18 அன்று 48 வயதில் விமான விபத்தில் போஸ் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது.

- ஸ்நேகா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in