Published : 19 Aug 2022 07:38 AM
Last Updated : 19 Aug 2022 07:38 AM
நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர் கோவையைச் சேர்ந்த தி.சு. அவினாசிலிங்கம். இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் அவருக்கு முக்கிய இடம் உண்டு.
எளிமை, தூய்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுக்கு உழைத்தல், தியாகச் சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்தவர் அவினாசிலிங்கம். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூரில், 5-5-1903 அன்று கே.சுப்பிரமணியம் - பழனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தை சிறந்த வணிகராக இருந்ததோடு, சொந்த வங்கி ஒன்றையும் அக்காலத்தில் நடத்திவந்தார். 5-ஆம் வகுப்புவரை திருப்பூரில் படித்து முடித்த பின்னர், கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1920-23ஆம் ஆண்டுகாலகட்டத்தி்ல் பி.ஏ. பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கோவையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவந்தார்.
மகாத்மாவுடன் நெருக்கம்
1934 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்ட தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு ரூபாய் இரண்டரை லட்சம் நிதி திரட்டிக் கொடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவினாசிலிங்கம், 1941இல் நடந்த தனிநபர் சத்தியாகிரகம், 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் பங்கேற்று 21 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையையும், சிறைச்சாலைகொடுமைகளையும் தாங்கிக் கொண்டார். 1920இல் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது மகாத்மா காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்த அவினாசிலிங்கம், அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆங்கிலேய அரசின் உப்பு வரிக்கு எதிராக 1930 ஜூலை 5 அன்று ராகவாச்சாரியருடன் இணைந்து அவினாசிலிங்கம் கோவை வாலாங்குளத்தில் உப்பு காய்ச்சினார்.
ஆங்கிலேய அரசு இருவரையும் கைதுசெய்து கோவை மத்திய சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைத்தது. தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்துக்காக கோவை மாவட்டத்துக்கு வருகை தந்த காந்தியடிகளோடு அவினாசிலிங்கம் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பட்டிதொட்டி எங்கும் சென்று சுதந்திரப் போராட்டம் குறித்துப் பேசினார்.
கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர், சுதந்திர இந்தியாவின் மதராஸ் மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சர், இந்தியக் குடியரசின் முதலாவது மக்களவையில் உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை அவினாசிலிங்கம் வகித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு கோவை, கடலூர், வேலூர், திருச்சி, மதுரை போன்ற பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தபோது பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘இந்திய பொருளாதாரம்’, ‘கல்வி’, ‘நான் கண்ட மகாத்மா’ உள்ளிட்டவை முக்கியமானவை. அனைவரும் கல்வி கற்க வேண்டும், குறிப்பாக பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முனைப்புடன் செயல்பட்டார். 1991 நவம்பர் 21 அன்று 88 வயதில் மறைந்தார்.
பாடநூலில் திருக்குறளைச் சேர்த்தவர் அவினாசிலிங்கம் குறித்து புலவர் செந்தலை ந.கவுதமன் கூறுகையில்,‘‘ மத்திய, மாநில அரசுகளில் தி.சு. அவினாசிலிங்கம் அமைச்சராக இருந்துள்ளார். அவர், கல்வி அமைச்சராக இருந்த வேளையில் பாடநூலில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்புவரை பாடநூல்களில் திருக்குறள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. நாட்டிலேயே முதன்முதலாக ‘தமிழ் கலைக் களஞ்சியம்’, ‘சிறுவர் கலைக்களஞ்சியம்’ உருவாக்குவதற்கான முழு முயற்சியை மேற்கொண்டார். போத்தனூரில் அவர் நிறுவிய ராமகிருஷ்ணா வித்யாலயாவுக்கு அடிக்கல் நாட்டியவர் காந்தியடிகள். ராமகிருஷ்ணா வித்யாலயா முதலில் போத்தனூரிலும், பின்னர் ரேஸ்கோர்ஸிலும், தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையத்துக்கும் மாற்றப்பட்டு இன்றுவரை இயங்கிருகிறது. தொடர்ந்து மனையியல் கல்லூரியும், பல்கலைக்கழகமும் உருவாகின,’’ என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT