

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய பல்கலைக்கழகங்களின் நிலை குறித்து ஆராய்வதற்கும் பல்கலைக்கழக கல்வியில் இந்தியாவின் நிகழ்கால, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மேம்பாடுகளைப் பரிந்துரைப்பதற்கும் பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் 1948இல் அமைக்கப்பட்டது.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவரும் பிற்காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவரானவருமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், இந்த ஆணையத்துக்குத் தலைமை வகித்தார்.
பல்கலைக்கழகக் கல்வி தொழிற்பயிற்சியை அளிப்பதாகவும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையிலான அறிவையும் ஞானத்தையும் வழங்குவதாகவும் அமைய வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.
விவசாயம், வணிகம், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம் ஆகிய துறைகளுக்கான கல்வியை வழங்குவதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது, ஆசிரியர்களுக்கு மதிப்புக்குரிய ஊதியம் வழங்குதல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளையும் அளித்திருந்தது. கிராமப்புறங்களில் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க வலியுறுத்தியிருந்தது.
1952இல் இடைநிலைக் கல்விக்காக, அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு ‘முதலியார் குழு’ என்றழைக்கப்பட்டது. 11இலிருந்து 17 வயதுவரை ஏழு ஆண்டுகள் இடைநிலைக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும், மூன்றாண்டு இடைநிலை வகுப்புகள், நான்காண்டு உயர்நிலை வகுப்புகளாகப் பகுக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.
இடைநிலைக் கல்வியானது மாணவர்களுக்கு தலைமைப் பண்பு, தொழிற்பயிற்சி, ஜனநாயகக் குடிமகனுக்குரிய தகுதிகள், ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்தியது. மாணவர்களின் திறமை வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இடைநிலைக் கல்வியைப் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடி யினருக்குக் கொண்டுசேர்ப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் தேவைப்படுவதையும் இந்தக் குழு கவனப்படுத்தியது.
- நந்தன்