Published : 18 Aug 2022 07:25 AM
Last Updated : 18 Aug 2022 07:25 AM

இந்தியா 75: வளர்ச்சி வியக்கவைக்கிறது; எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறதா?

காலனியத்தின் கடும் சுரண்டலுக்கு உள்ளான இந்தியா, சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் பொருளாதார நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவந்தாலும்கூட உலகளவில் மிகப் பெரிய அளவிலான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் முதல் 30 ஆண்டுகளில் 3.5% ஆக இருந்த நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் அது சுமார் 5.5% ஆகவும் 2010-களில் 7%-8% ஆகவும் உயர்ந்தது.

விடுதலை பெற்றபோது ரூ.2.7 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.150 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வாங்கும் சக்தியைக் கொண்டு மதிப்பிட்டால், இந்தியா உலகத்திலேயே மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம். அந்நியச் செலாவணி கையிருப்பிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் உலகளவில் ஐந்தாவது இடம்.

வளர்ச்சி விகித இலக்குகளை முன்கூட்டியே எட்ட முடிந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்ளேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ந்துவிடும் என்றும் சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் மனிதவளம், உற்பத்தித் தொழில் துறை, ஏற்றுமதி, இந்திய ரூபாயின் சர்வதேச மதிப்பு ஆகியவை முக்கிய இயக்குவிசைகளாக இருக்கும்.

உருமாறும் கொள்கைகள்: ஜே.ஆர்.டி.டாடா, ஜி.டி.பிர்லா உள்ளிட்ட சுதேசப் பெருமுதலாளிகள் சுதந்திரத்திற்கு முன்பே உருவாக்கித் தந்த ‘பம்பாய் திட்ட’த்தின்படியே இந்தியாவின் முதலாவது தொழிற்கொள்கை தீட்டப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களோடு தனியாரையும் ஆதரிக்கும் கலப்புப் பொருளாதாரமாக அது மலர்ந்தது.

1953-ல் 9 விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அரசின் முழுப் பொறுப்பானது ரயில்வே. ஆயுள் காப்பீடு, சுரங்கங்கள் ஆகியவையும் தேசியமயமாகின. ஜவாஹர்லால் நேருவின் வழியில் இந்திராவும் தொடர்ந்தார். 1969-ல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

1980-ல் மேலும் 6 வங்கிகள் தேசியமயமாகின. அப்போது, இந்திய வங்கித் துறை ஏறக்குறைய 91% அரசின் வசம் இருந்தது. முக்கியத் தொழில் துறைகளை அரசே ஏற்று நடத்தும் இந்தக் கொள்கை 1990-களுக்குப் பிறகு நேரெதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இன்று, நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளையும் பங்குகளையும் அரசு விற்கிறது. அத்துடன், தனியார் பெருநிறுவனங்களையும் ஆதரிக்கிறது.

சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் முதலாவது விவசாயத்துக்கும் இரண்டாவது பெருந்தொழிற்சாலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தன. ஒரு பக்கம் உணவுப் பற்றாக்குறையைப் போக்கியாக வேண்டும்.

இன்னொரு பக்கம் அடிப்படைத் தொழிற்சாலைகளை உருவாக்கினால்தான் தொழில் துறையை வளர்த்தெடுக்க முடியும் என்ற நிலையில், அதன் கவனங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக மாறி நின்றது. வறுமை ஒழிப்புக்குத் தீவிர முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நீடித்த வளர்ச்சி என்கிற தொலைநோக்கு இலக்கை நோக்கி அது பயணித்தது. இன்று திட்டக் குழு என்ற அமைப்பே கலைக்கப்பட்டுவிட்டது.

உணவுப் பாதுகாப்பு: 1950-களில், 34.7 கோடி மக்கள்தொகைக்கு 5 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக வெளிநாடுகளின் உதவிகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் ஒரு நெருக்கடியாகவும் நீடித்தது.

இன்று 130 கோடி மக்கள்தொகைக்கு 30 கோடி டன் உணவுதானியங்களை உற்பத்திசெய்து உணவு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். 1951-ல், சராசரியாகத் தனிநபர் ஒருவருக்குக் கிடைத்த உணவின் அளவு, நாள் ஒன்றுக்கு 334 கிராம் ஆக இருந்த நிலையில், இன்று அது 500 கிராம் ஆக அதிகரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பை ஓரளவு உறுதிசெய்ய முடிந்திருந்தாலும் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதிகளை வழங்குவது இன்னும் நீண்ட கால இலக்குகளாகவே தொடர்கின்றன. இந்தியாவின் பொருளாதாரம் சமச்சீரற்ற வளர்ச்சியாகவே இன்னும் இருக்கிறது. 10% பேரின் மிதமிஞ்சிய வளர்ச்சியாக மட்டுமே அது இருந்துவரும் நிலையில், ஒட்டுமொத்த மக்களின் மேம்பாடு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

மத்திய - மாநில அரசுகளின் சமூகநலத் திட்டங்கள் அந்தக் குறையைச் சரிசெய்ய முயன்றுவருகின்றன. தேர்தலில் வாக்குகளைக் கவரும் நோக்கிலான இலவசத் திட்டங்களுக்கும் பொருளாதார மேம்பாட்டை எட்டுவதற்கான சமூகநலத் திட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த ஓர் விவாதமும் தற்போது தொடங்கியிருக்கிறது.

வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியா, தனது இலக்குகளில் நிலையான வளர்ச்சி என்ற குறிக்கோளை முதன்மையானதாக வரித்துக்கொண்டிருக்கிறது. தொழில் துறையின் பங்களிப்பை வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதும் அதற்காகப் பேரளவிலான முதலீடுகளைச் செய்வதும் அடுத்து வரும் சில 10 ஆண்டுகளின் முக்கியமான திட்டங்களாக இருக்கும். பணவியலும் வரியியலும்: பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ரிசர்வ் வங்கி மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது.

பணவியல் கொள்கையை வகுப்பது, வங்கி - வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது என இரண்டு முக்கியப் பொறுப்புகளை ரிசர்வ் வங்கி வகித்துவருகிறது. எனினும், பணவீக்கமும் வாராக் கடன்களின் அளவும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. அதே நேரம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் இது வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

வரியியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 2017 ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதற்கும் ஒரே அளவிலான வரிவிதிப்பு முறையைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இழப்பீட்டுக் காலத்தை நீடிப்பது, வரிப் பகிர்வு தொடர்பிலான மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. அதே நேரம் விற்பனை வரிகள் உள்ளிட்ட மறைமுக வரிகள், சாமானியர்களின் மீது சுமையாக மாறிவிடக் கூடாது என்ற கருத்து சமீப காலமாக அழுத்தம்பெற்று வருகின்றது.

உடனடி நெருக்கடி: இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய உடனடி நெருக்கடி என்பது தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மைதான். கடந்த 7 ஆண்டுகளில், 7 லட்சம் எண்ணிக்கையிலான வேலைகளுக்கு மொத்தம் 22 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகச் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு.

இந்தியாவின் அண்மைக் கால வளர்ச்சிக்கு சேவைப் பணித் தொழில் துறைகள் முக்கியப் பங்காற்றிவருகின்றன. மென்பொருள் தொழில்நுட்பமும் அயல்பணி ஒப்படைப்புகளும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் அந்நியச் செலாவணியையும் அதிகரித்துள்ளன. ஆனாலும், தொழில் துறையின் வளர்ச்சியால் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

அதன் காரணமாகவே, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க மத்திய - மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அதே நேரத்தில், சிறு குறு தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதன் அவசியமும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவ்வப்போது அதிரடியாக அறிவிக்கப்படும் நிதிக் கொள்கைகளாலும் பணக் கொள்கைகளாலும் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாத நிலையை உறுதிப்படுத்தினால்தான் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் செயல்பட முடியும்.

தொழில் துறையில் 10% வளர்ச்சியை எட்டினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையின் பங்களிப்பு 25% ஆக உயரும். அதற்காகத் திறன்மிக்க தொழிலாளர்களைப் பல்லாயிரக்கணக்கில் உருவாக்க வேண்டும்.

தானியங்கி இயந்திரங்களைப் பெருமளவில் பயன்படுத்தவிருக்கும் தொழிற்புரட்சி 4.0-ஐ எதிர்நோக்கிக் காத்திருக்கும் வேளையில், இந்தியாவின் மனிதவளத்தை முழுமையாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்குவதே தேசத்தை எதிர்நோக்கியுள்ள முதன்மையான பொருளாதாரச் சவால்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

To Read this in English: Development, of course, awe-inspiring but does future inspire hope?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x