சுதந்திரச் சுடர்கள் | விளையாட்டு: முதல் ஆசிய போட்டி அசத்திய டெல்லி

சுதந்திரச் சுடர்கள் | விளையாட்டு: முதல் ஆசிய போட்டி அசத்திய டெல்லி
Updated on
1 min read

1940-களின் பிற்பகுதியில் ஆசியாவில் பல நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருந்தன. இந்தியாவில் புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நாட்டை நிர்மாணிக்கும் பணிகள் சூடுபிடித்திருந்த வேளையில், தலைநகர் டெல்லியில் 1951இல் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அந்தக் காலகட்டத்தில் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகள் இணைந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்திவந்தன. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டியை ஆசிய அளவில் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் பல நாடுகளுக்கும் ஏற்பட்டது.

அதன் ஒரு பகுதியாக 1949இல் டெல்லியில் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளின் ஆசியப் பொது அவை கூடியது. அதில் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை 1950இல் டெல்லியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், தயாரிப்புப் பணிகள் தாமதமானதால், 1951இல்தான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. டெல்லியில் இர்வின் அம்ஃபி தியேட்டர் என்ற விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அந்த அரங்கத்தின் பெயர் ‘நேஷனல் ஸ்டேடியம்’ என்று மாற்றப்பட்டது. அப்போதே இந்த மைதானத்தைப் புனரமைக்க ரூ. 5 லட்சம் செலவிடப்பட்டது.

1951 மார்ச் 4 -11 வரை நடைபெற்ற இப்போட்டியை அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்கிவைத்தார். முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 நாடுகள், 57 பிரிவுகளில் 9 விளையாட்டுகளில் பங்கேற்றன. மொத்தம் 489 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதல் போட்டியில் 60 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம் பிடித்தது. இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் என 51 பதக்கங்களை வென்று இரண்டாமிடத்தைப் பிடித்தது.

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக பல நாடுகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தி காட்டியதன் மூலம் விளையாட்டுத் துறையில் இந்தியா தன் வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in