Last Updated : 17 Aug, 2022 07:30 AM

 

Published : 17 Aug 2022 07:30 AM
Last Updated : 17 Aug 2022 07:30 AM

இந்தியா 75: நகர்மயமும் உள்கட்டமைப்பும்!

இந்தியா அதிவேகமாக நகர்மயமாகி வருகிறது. நாடு விடுதலை அடைந்தபோது 14% மக்கள் நகரங்களில் வாழ்ந்தார்கள். இப்போது அது 35% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் நகரவாசிகள் 75% பங்களிக்கிறார்கள்.

இவர்கள்தான் இந்தியாவிற்கு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் பொருளீட்டித் தருகிறார்கள். இவர்கள் வாழும் நகரங்களின் உள்கட்டமைப்பு வசதி கடந்த 75 ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறதா? உள்கட்டமைப்பு என்பது பொதுப் போக்குவரத்து, வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், மழைநீர் வெளியேற்றம், மின்சாரம், தொலைத்தொடர்பு, நகரமைப்பு, திடக்கழிவு மேலாண்மை முதலான பல அலகுகளை உள்ளடக்கியது.

போக்குவரத்து

உள்கட்டமைப்பில் பிரதானமானது போக்குவரத்து; போக்குவரத்தில் பிரதானமானது சாலை வசதி. இப்போதைய கணக்கின்படி இந்தியாவின் நகரங்களும் கிராமங்களும் 33.4 லட்சம் கி.மீ. நீளமுள்ள சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன; இவை எல்லாம் தார் சாலைகள் அல்ல.

எனினும் நாட்டின் 87% மக்கள், தங்கள் பயணங்களுக்கு இந்தச் சாலைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். 1947இல் வெறும் 21,378 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், இப்போது 1.4 லட்சம் கி.மீ. ஆக வளர்ந்திருக்கின்றன.

நாட்டின் மொத்த சாலைகளின் நீளத்தில் இது 4% தான். ஆனால், சாலைப் போக்குவரத்தின் 40% பயணங்கள் இந்தத் தரமான சாலைகளின் மீதுதான் மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளையில் நகரச் சாலைகளும் கிராமச் சாலைகளும் இவற்றின் தரத்துடன் இல்லை. அவை போதுமானதாகவும் இல்லை. இவற்றை மேம்படுத்தியாக வேண்டும்.

அடுத்து ரயில். 1947இல் ரயில் தடங்களின் நீளம் 54,693 கி.மீ. இதில் அகல ரயில் பாதை பாதிக்கும் குறைவாகத்தான் இருந்தது (25,170 கி.மீ.). விடுதலைக்குப் பிறகு, மீட்டர் கேஜ் தடங்கள் பலவும் அகல ரயில் தடங்களாக மாற்றப்பட்டன. எனினும், 2020ஆம் ஆண்டுக் கணக்கின்படி நாட்டின் மொத்த ரயில் தடங்களின் நீளம் 67,956 கி.மீ. அதாவது 75 ஆண்டுகளில் மொத்த நீளம் கால் பங்குதான் கூடியிருக்கிறது.

ரயில்வே இந்தியாவின் பெரிய துறைகளுள் ஒன்று. அதன் வரவு - செலவு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்பு தனியாகத்தான் தாக்கல் செய்யப்படும். இத்தனை ஆண்டுகளில் தடங்களின் நீளம் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.

அடுத்துவரும் காலத்தில் நடப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை. அரசும் அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். உலகின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் பல ஆண்டு காலமாக ஓடிவருகிற போதும், இந்தியாவில் அது கடந்த 20 ஆண்டுகளாகத்தான் வேகம் பிடித்திருக்கிறது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய முதல் நிலை நகரங்கள் தவிர அகமதாபாத், போபால், ஜெய்பூர், லக்னோ, நாக்பூர், கொச்சி முதலான இரண்டாம்நிலை நகரங்களிலும் மெட்ரோ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைய மெட்ரோ தடங்களின் நீளம் 750 கி.மீ. கட்டுமானத்தில் இருப்பவை 500 கி.மீ. ஒப்புதல் பெற்று, பணி தொடங்கக் காத்திருப்பவை 500 கி.மீ. வரைபட மேசையில் இருப்பவை 1,000 கி.மீ. இந்த விவரங்கள் ஊக்கமளிப்பவைதான்.

ஆனால், டெல்லி மெட்ரோ தவிர அநேகமாக எல்லா மெட்ரோக்களும் நட்டத்தில்தான் இயங்குகின்றன. காரணம் பெரும் பொருட்செலவில் கட்டப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு மாநில அரசுகள் சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுகின்றன.

அவற்றைத் திருப்பிச் செலுத்துகிற சுமையால் பயணக் கட்டணங்களை அதிகமாக விதிக்கின்றன. தவிர, மத்திய அரசு வழங்கும் நிதியின் வீதமும் குறைந்துவருகிறது. மத்திய அரசு கணிசமாக நிதி வழங்கினால்தான் மாநில அரசுகளால் கட்டணத்தைக் குறைக்க முடியும். மெட்ரோவின் பயன்பாடு மிகும். கட்டுமானமும் அதிகரிக்கும்.

குடிநீர், கழிவுநீர், மழைநீர்

இந்தியாவின் 90% நகரவாசிகளுக்குக் குடிநீர் கிடைக்கிறது. இதில் சரிபாதிப் பேருக்கு மட்டுமே குழாய்நீர் கிடைக்கிறது. 60% நகரவாசிகளுக்கு அடிப்படைக் கழிவறை வசதிகள் இருக்கின்றன (உலக வங்கி புள்ளிவிவரம்). ஆனால், இந்தியாவின் எந்த நகரத்திலும் நாள் முழுதும் குழாய்நீர் கிடைப்பதில்லை.

பல நகரங்களில் கழிவுநீர், மழைநீர் வடிகால்களில் கலக்கிறது. எந்த நகரத்திலும் பொறியியல்ரீதியாகத் திட்டமிடப்பட்ட, 50 ஆண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகபட்ச மழையைக் கடத்திவிடும் மழைநீர் வடிகால்கள் இல்லை. உலகின் பல நாடுகளில் நகரவாசிகளுக்குக் கிடைக்கும் இந்த அடிப்படைத் வசதிகள் நமக்கும் கிடைக்க வேண்டும்.

வீட்டுவசதி

பல இந்திய நகரங்களால் பெருகிவரும் மக்கள்தொகைக்கு இணையான வேகத்தில் வாழிடங்களை வழங்க முடியவில்லை. விளைவு நமது நகர மக்களில் நான்கில் ஒருவர் குடிசைப்பகுதிகளிலும் ஒதுக்குப்புறங்களிலும் வாழ்கிறார்கள் (டாடா அறிவியல் கழகம் வழங்கியுள்ள புள்ளிவிவரம்).

மறுபுறம் நடுத்தர வர்க்கத்தினர் பெருகிவரும் ரியல் எஸ்டேட் ஆதிக்கத்தால் வீடு வாங்கவும் கட்டவும் சிரமப்படுகிறார்கள். இதில் அரசின் தலையீடு அவசியம். வறியவர்களுக்குக் குறைந்த வாடகையில் வீடு கட்டித்தரப்பட வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசின் வீட்டு வசதித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சேமநல நிதியைக் கட்டாயமாக்கி, அதிலிருந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம்.

நகரமைப்புப் புலப்படங்கள்

இந்திய நகர நிர்வாகம் பல துறைகளில் கணினிமயமாகி வருகிறது. எனினும் நகரின் வரைபடங்கள் இன்றளவும் டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்படவில்லை. எல்லா நகரங்களின் வரைபடங்களும் டிஜிட்டல் முறையில் அலகிடப்பட்டு கணினிமயப்படுத்தப்பட வேண்டும்.

புல எண்கள், உரிமையாளரின் பெயர்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், வெள்ளச் சமவெளிகள் போன்றவை குறிப்பிடப்பட்டு, அவை பொதுவெளியில் காணக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த வரைபடங்களில் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்களையும் குடிநீர், கழிவுநீர்க் குழாய்களையும் ஏற்றி வைக்கலாம். இது நகரின் திட்டமிடலுக்குப் பெரிதும் பயன்படும்.

கல்வி, மருத்துவம்

நகரமைப்பு வல்லுநர்கள் சொல்லும் உள்கட்டமைப்பு அலகுகள் பலவும் முதற் பத்தியில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. அந்தப் பட்டியல் சரியானதுதான். எனில், கல்வியையும் உடல்நலத்தையும் இந்தப் பட்டியலில் நாம் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் துறைகளில் தனியார் ஆதிக்கம் களையப்பட வேண்டும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் கல்வியையும் மருத்துவத்தையும் தம் மக்களுக்கு இலவசமாக அளிக்கின்றன. அவை தரமாகவும் இருக்கின்றன. நாமும் அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் படிப்பும் ஆரோக்கியமும் மிக்க சமூகம், உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்துகொள்ளும். அப்படியான சமூகத்தில் தொழில் துறையும் சேவைத் துறையும் வளரும். மக்களின் வருமானம் பெருகும். வாழ்நிலை உயரும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

To Read this in English: Urbanisation and infrastructure

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x