தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா

தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா
Updated on
2 min read

டிசம்பர் 11, 2019 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill 2019), ஆகஸ்ட் 3, 2022 அன்று மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.

மசோதாவின் 99 பகுதிகளில் 81 திருத்தங்களைச் சுட்டிக்காட்டி, 12 முதன்மையான பரிந்துரைகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழு (Joint Parliamentary Committee) வழங்கியிருப்பதன் பின்னணியில், இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் இணையம்: இந்தியாவில் இணையப் பயனாளர்களின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 69.2 கோடி. கிராமப்புறத்தில் 35.1 கோடியும், நகர்ப்புறத்தில் 34.1 கோடியுமாக உள்ள இந்த எண்ணிக்கை, 2025-ல் 90 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ல் 23 கோடி பேர் இணையவழிப் பரிவர்த்தனை மேற்கொண்டிருந்த நிலையில், கரோனாவின் விளைவால் அது 51% அதிகரித்திருப்பதாக IAMAI-யின் ‘Internet in India’ அறிக்கை கண்டறிந்திருக்கிறது. பணப்பரிவர்த்தனை தொடங்கி மருத்துவச் சிகிச்சை வரை அன்றாட வாழ்வின் பெரும்பகுதி இணையத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் தளத்துக்குத் தற்போது இடம்பெயர்ந்திருக்கிறது.

தகவல்-தரவுக் கசிவு/ திருட்டு (Information-Data breach/theft): பயனரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, தரவுகளாகப் பராமரித்து, அதன் அடிப்படையில் இணையதளங்கள், செயலிகள் சேவை வழங்கிவருகின்றன. மிகப்பெரும் எண்ணிக்கையிலான இணையப் பயனாளர்களை இந்தியா கொண்டிருக்கும் நிலையில், தகவல்-தரவுக் கசிவு, திருட்டு சமீப காலத்தில் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

தகவல்-தரவுக் கசிவு/ திருட்டு அதிகளவில் நடைபெறும் நாடுகளில் இந்தியா ஆறாம் இடத்தில் இருக்கிறது; தரவுக் கசிவு, இந்த ஆண்டின் முதல் காலாண்டைவிடத் தற்போது 740% அதிகரித்திருப்பதாக Surfshark-ன் அறிக்கை கூறுகிறது.

தரவுப் பாதுகாப்பு: இணையப் பயன்பாடும் அதன் விளைவாகத் தகவல்-தரவுக் கசிவும் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், பயனர்களின் தனியுரிமையைப் (Privacy) பாதுகாப்பதற்குத் தனிச் சட்டம் இதுவரை இல்லை. ஏற்கெனவே உள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) தற்போதைய சூழலை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை என்று கருதப்படுகிறது.

ஆகவே, தரவுப் பாதுகாப்புக்கான ஒழுங்குமுறைச் செயல்திட்டத்தையும், தரவுப் பாதுகாப்பு மசோதாவுக்கான வரைவையும் உருவாக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் குழு ஒன்றை ஜூலை 2017-ல் மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 2017-ல்,நீதிபதி கே.எஸ்.புட்டாஸ்வாமி (ஓய்வு) எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், தனியுரிமையும் ஓர் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணா குழு தன்னுடைய அறிக்கை, தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவுக்கான வரைவு ஆகியவற்றை மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் 2018 ஜூலை 27 அன்று சமர்ப்பித்தது. மத்திய அமைச்சரவை 2019 டிசம்பர் 4 அன்று தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 2019 டிசம்பர் 11 அன்று மக்களவையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், வரைவுக் குழு வழங்கும் அதிகாரத்தைவிடத் தரவுகள் மீது மத்திய அரசு அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா குறித்து நீதிபதி கிருஷ்ணா விமர்சித்தார். இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்தல், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டினர்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு: தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எழுந்த விவாதங்களை ஆராயும் விதமாக டிசம்பர் 2019-ல்நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அது தனிநபர் தரவு அல்லாத அம்சங்களையும் விவாதிக்க எடுத்துக்கொண்டது.

ஆகவே, அது தனிநபர் தரவுப் பாதுகாப்பு என்பதிலிருந்து தரவுப் பாதுகாப்பு எனப் பெரிய தளத்துக்கு விரிந்தது. 184 மணி நேரம் 20 நிமிடங்களில் 78 அமர்வுகளாக நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, மசோதா மீதான 542 பக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16, 2021 அன்று கூட்டுக் குழு சமர்ப்பித்தது.

81 பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், 150-க்கும் மேற்பட்ட திருத்தங்களை அந்த அறிக்கை கொண்டிருந்தது. இந்த மசோதாவை ஓரங்கட்டிவிட்டு புதிய மசோதாவுக்காக வரைவை உருவாக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதிய வரைவுக்கான எந்தத் திட்டங்களும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

பயனாளிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட தரவுகளின் மீதானஉரிமைகளின் தொகுப்பையும், அதை அவர்கள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்த மசோதா வழங்குகிறது. பயனாளி ஒருவரின் பல்வேறு தனிப்பட்ட தரவுகளைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து, அந்தத் தரவுகள், அவை செயலாக்கம் பெறும் முறை பற்றிய விவரங்களை அந்தப் பயனாளி பெறுவதற்கு இந்த மசோதா வழிசெய்கிறது.

இப்படியாக, இந்தியாவில் தனிநபர் தரவுப் பாதுகாப்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இந்த மசோதா முயல்கிறது. எனினும், மசோதாவின் சில அம்சங்கள் அரசுக்குச் சாதகமாக உள்ளன. உதாரணத்துக்கு, பிரிவு 35-ன் கீழ், மத்திய அரசு எந்தவொரு அரசு நிறுவனத்துக்கும் மசோதாவுக்கு இணங்குவதிலிருந்து விலக்களிக்கலாம்.

மசோதாவின் கீழ் எந்தவொரு பாதுகாப்பையும் பின்பற்றாமல் தனிப்பட்ட தரவை அரசு முகமைகளால் செயலாக்கத்துக்கு (process) உட்படுத்த முடியும். மசோதாவின் இந்த அம்சம் பயனர்களின் தனியுரிமையைக் கடுமையாக மீறும் அபாயங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பல்வேறு திருத்தங்கள், பரிந்துரைகள், மாற்றங்களைச் சுட்டிக்காட்டி மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஆகஸ்ட் 3 அன்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது; கூட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சட்ட வழிமுறைகளுக்குப் பொருந்தும் வகையில் புதிய மசோதாவைக் கொண்டுவர அரசு முடிவுசெய்திருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

- தொகுப்பு: சு.அருண் பிரசாத்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in