Published : 17 Aug 2022 07:35 AM
Last Updated : 17 Aug 2022 07:35 AM

சுதந்திரச் சுடர்கள்: உணர்ச்சிகரமான அரியதொரு தருணம்

எச்.வி.ஆர்.ஐயங்கார்

தற்போது நாடாளுமன்ற மக்களவை கூடும் இடமே, சுதந்திரம் வழங்குவற்கான சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கும் தேர்வுசெய்யப்பட்டிருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு அந்த மண்டபத்தில் எப்படி இடம் தருவது என்கிற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

உறுப்பினர்கள் அமரும் பகுதியைத் தவிர அங்கிருந்த மாடங்களில் சில நூறு பேருக்குத்தான் இடம் தர முடியும். அரசமைப்பு அவையின் அப்போதைய தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோருடன் இது குறித்து ஆலோசனை கலந்தேன்.

அரசமைப்பு அவையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரேயொருவரை மட்டுமே தங்களுடைய விருந்தாளியாக அழைக்கலாம் என்று முடிவுசெய்து, அதற்கான அழைப்பு அட்டைகளும் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது.

ராஜேந்திர பிரசாத் இதைக் கண்டிப்புடன் பின்பற்றினார். பண்டிட் நேரு தன்னுடைய மகள் இந்திராவுக்கு மட்டும் ஒரு அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டார். சர்தார் படேலும் தன்னுடைய மகள் மணிபென் படேலுக்காக ஒரு சீட்டு பெற்றார். தங்களுக்கு மேலும் ஒரு சீட்டுதருமாறு எனக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மூவரிடமும் பலரும் முறையிட்டனர்.

அதை ஏற்க அந்த மூவருமே மறுத்துவிட்டனர். ஏற்கெனவே ஒரு அழைப்பு அட்டை பெற்றிருந்த மத்திய அமைச்சர் ஒருவர், இன்னொன்று வாங்கி வரும்படி அவருடைய மனைவியை அனுப்பினார்.நான் கண்டிப்பாக மறுத்தவுடன் மிகவும் கோபப்பட்டு, அந்த அறையிலிருந்து அவர் வேகமாக வெளியேறியதை என்னால் மறக்கவே முடியாது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர், ஆறு அனுமதிச் சீட்டுகள் தர முடியுமா என்று கேட்டார்.

வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிட்டேன். சில நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் தாழ்வாரத்தில் என்னைச் சந்தித்த அவர், “நீங்கள் தராவிட்டால் என்ன உங்களுடைய அலுவலக உதவியாளர்கள் மூலம் அதைப் பெற்றுவிட்டேன்” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினார். உங்களைப் போன்ற கண்டிப்பான அதிகாரிகள் இருக்குமிடத்தில், மேல்நிலை அதிகாரிகளை அணுகுவது தவறான முடிவு என்கிற பாடத்தைக் கற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது டெல்லியில் சில வெளிநாடுகளுக்குத்தான் தூதரகங்கள் இருந்தன. அன்றிரவு 11.30 மணி நிகழ்ச்சியின்போது காபி அருந்த வருமாறு தூதரகத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தில அப்போது பணிபுரிந்த ஐசிஎஸ் அதிகாரியொருவர், இரவு விருந்து நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் வழக்கமாக வரும் கோட்-சூட்டுடன் கழுத்தில் கறுப்பு நிற டை அணிந்து கம்பீரமாக வந்திருந்தார்.

சுதந்திரம் பெறும் நிகழ்ச்சிக்குக்கூட பிரிட்டிஷாரின் உடையலங்கார விதிகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறாரே என்று பலரும் புருவங்களை உயர்த்தி அவரைப் பார்த்தனர். அதே அதிகாரி அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சிக்கு இந்தியர்களின் பாரம்பரிய ஆடையில் வெகு அமெரிக்கையாக வந்திருந்தார்.

பிறகு வெளியுறவுத் துறையில் பல பொறுப்புகளைத் திறமையாகவும் அர்ப்பணிப்போடும் வகித்து சுதந்திர இந்தியாவுக்கு மிகச் சிறந்த தொண்டு புரிந்தார். பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராகவும் அவர் திகழ்ந்தார்.

உணர்ச்சிகரமான ஒலிபரப்பு

நள்ளிரவு 12 மணிக்கு 12 முறை ஒலிப்பதற்காக சிறப்பு கடிகாரம் ஒன்றைத் தயார் செய்திருந்தோம். அது சரியாக அடிக்குமா என்பதை இயக்கிப் பார்த்த பிறகே திருப்தியடைந்தேன். அன்றைய தினம் அது 12 முறை ஒலித்து முடித்தவுடன் ஒலிபெருக்கி இருக்கும் இடம் நோக்கி நகர்ந்து, கையில் வைத்திருந்த தாளில் இருந்து ஒவ்வொரு தலைவரின் பெயரையும் வாசித்தேன்.

அகர வரிசையா – வயது மூப்பு அடிப்படையிலா, எந்த வரிசையில் அவர்களை அழைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். அந்த முழு நிகழ்ச்சியும் நேரடியாக வானொலியில் ஒலிபரப்பானது.

பம்பாய், மதராஸ் ஆகிய நகரங்களில் அப்போது அதைக் கேட்ட என்னுடைய நண்பர்கள் பலர், தலைவர்களின் பெயர்களை வாசிக்கும்போது என்னுடைய குரல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் லேசாக நடுக்கம்கூடத் தெரிந்ததாகவும் கூறினர். நாட்டின் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட அந்தத் தியாக சீலர்களின் பெயர்களை அழைக்கும்போது உணர்ச்சி வசப்பட்டுத்தான் இருந்தேன்.

உற்சாகமான ஒழுங்குக் குலைவு!

உண்மையிலேயே அந்தத் தருணம் உணர்ச்சிமயமாகவே இருந்தது என்பதை பண்டிட் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் வெளியே வந்தபோது உணர்ந்தேன். அவர்கள் இருவரும் உடனடியாக வைஸ்ராய் இருந்த அரசு இல்லத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. வைஸ்ராய் இல்லமே, கவர்னர் ஜெனரலின் புதிய இல்லமாக உருமாறியிருந்தது.

புதிய இந்திய அரசில் பொறுப்பேற்றவர்கள், சுதந்திர நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்குமாறு மவுண்ட் பேட்டன் பிரபுவை முறைப்படி கேட்டுக்கொள்ள அங்கு செல்ல வேண்டியிருந்தது.

இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தன. மவுண்ட் பேட்டனும் தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். சுதந்திரம் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் இருந்த அவர்களைக் காவல்துறையால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இரண்டு தலைவர்களையும் அழைத்துச் செல்ல காரை அங்கே வரவழைக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. சுதந்திரம் கிடைத்ததை உறுதிசெய்து கொண்ட மக்கள், தங்களுடைய தலைவர்களைப் பார்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் இருந்தனர். உற்சாக மிகுதியால் கீழ்ப்படிய மறுத்தனர்.

நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நேரு, தன்னைப் பலமுறை சிறையில் தள்ளிய பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான மவுண்ட் பேட்டன் பிரபுவையே, நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரலாகப் பதவி வகிக்குமாறு கேட்டுக்கொள்வதற்காகத் தயாராகியிருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது, பிரிட்டிஷார் வெளியேறுவதை சிறு பிசகும் இல்லாமல் சிறப்பாக சிந்தித்து அவர் திட்டமிட்டிருந்தார்.

அதற்காக மட்டுமல்ல, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக விடுதலை பெறப் போராடினோம் என்றாலும், பிரிட்டிஷ் மக்களுடன் நமக்கு எந்தவித தனிப்பட்ட பகையுமில்லை என்கிற மகாத்மா காந்தியின் போதனைகளே அவருக்கு இதற்கு வழிகாட்டின.

இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பல ஆண்டுகள் தன்னை எல்லா வகையிலும் வருத்திக்கொண்டு போராடிய காந்தி மகான், நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளில் அதை நேரில் காண டெல்லியில் இல்லை, வகுப்புக் கலவரத்தை நிறுத்த வங்காளம் சென்றுவிட்டார். ஒரே நாடாக இருந்ததை இந்தியா – பாகிஸ்தான் என்று பிரிப்பது தவறு, பேராபத்தானது என்றே அவர் கருதினார். எனவே, அந்த முடிவைக் கேட்டு அவர் வருந்தினார். பிற்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது முதலிலிருந்தே அதை அவர் எதிர்த்தது எவ்வளவு நியாயம் என்பது புரிகிறது.

ஜோதிடர்கள் கருத்துப்படி நட்சத்திரங்கள் நன்றாக இருந்த நேரத்தில் உதயமான பாகிஸ்தான், பிறகு பாகிஸ்தானாகவும் வங்கதேசமாகவும் மீண்டும் பிளவுபட்டுவிட்டது. பாகிஸ்தான் என்ற தனி நாடு எந்தக் காரணத்துக்காகக் கேட்டு வாங்கப்பட்டதோ அந்தக் கருத்தே சரியில்லை என்பதை அந்தப் பிரிவினை காட்டிவிட்டது.

- கட்டுரையாளர், முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி. அரசமைப்புச் சட்ட செயலர், பிரதமருக்கு தனிச் செயலர், உள்துறைச் செயலர், ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி வகித்தவர்.

(தி இந்து ஆங்கில நாளிதழில் 15.08.1972-ல் வெளியான கட்டுரை)

நன்றி: தி இந்து ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x