சமத்துவச் சுதந்திர விழா!

சமத்துவச் சுதந்திர விழா!
Updated on
3 min read

இந்திய அரசமைப்பு அவையில் வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர், நவம்பர் 25, 1949 அன்று ஆற்றிய கடைசி உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த உரையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகங்களில் ஒன்று: ‘சுதந்திரத்தைச் சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தைச் சுதந்திரத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சுதந்திரத்தையோ சமத்துவத்தையோ சகோதரத்துவத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரமானது, ஒரு சிலர் தங்களது ஆதிக்கத்தைப் பெரும்பான்மையினர் மீது செலுத்துவதற்கு ஏதுவாகும்.’

கள அறிக்கை

அம்பேத்கரின் எச்சரிக்கை இன்றைய சூழலுக்கும் பொருத்தமான பாடமாக நின்று வழிகாட்டுகிறது. 76 ஆவது இந்திய விடுதலைத் திருநாளைக் கொண்டாடுவதற்குத் தமிழகம் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்ட கள ஆய்வறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இன்னமும்கூட 20 ஊராட்சிகளில், மக்களால் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர்கள், தேசியக் கொடியேற்ற முடியாத நிலையை அந்தக் கள அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

இன்னும், பெயர்ப் பலகை இல்லாத ஊராட்சிகள், அலுவலகத்திலும் நாற்காலியிலும் அமர முடியாதவை, பெண் தலைவருக்கு எதிரான பாகுபாடுகள், அவமரியாதையை எதிர்கொள்ள வேண்டியிருப்பவை என்று 19 வகையான தீண்டாமை வடிவங்கள் 386 ஊராட்சிகளில் நிலவுவதாக இந்தக் கள அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்த அறிக்கையின் விவரப் பட்டியல் ‘தீக்கதிர்’ நாளேட்டில் வெளிவந்ததும், அது இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் படுவேகமாகப் பகிரப்பட்டது.

பாராட்டுக்குரிய செயல்வேகம்

தமிழ்நாடு அரசு, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், திமுகவின் தோழமைக் கட்சியான சிபிஐ(எம்)தனது அதிகாரபூர்வ நாளேட்டில், இந்தக் கள அறிக்கையைக் கவனப்படுத்தியது.

விடுதலைத் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையைக் கையாண்டிருக்கும் வேகம் பாராட்டத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே ஊராட்சி மன்றங்களில் கொடியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதினார்.

அரசமைப்புக் கூறு 17-ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு, அதை எந்தவடிவத்திலும் வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அவர் எழுதிய அந்தக் கடிதம், சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டங்களும் சாதியப் பாகுபாடுகளின்றி நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. தேவைப்பட்டால், காவல் துறையின் உதவியை நாடுவதற்கும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, தண்டோரா போடும் வழக்கத்துக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் தம் கைப்பட எழுதிய கடிதம் ஒரு பெரும் சமூகப் புரட்சியைச் சப்தமின்றி நடத்திவைத்துள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர்களே கொடியேற்ற வேண்டும் என்று தற்போது அவர் எழுதியுள்ள கடிதமும், அவ்வாறே ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இது வெறும் கடிதவழி உத்தரவாக மட்டுமே முடிந்துவிடவில்லை. இது தொடர்பான புகார்கள் வந்தால், அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், சுதந்திர தினத்துக்கு முதல் நாளன்று அவரே களத்திலும் இறங்கிவிட்டார்.

ஆத்துப்பாக்கம் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்துக்குத் தலைமைச் செயலாளரே நேரடியாகச் சென்று ஆய்வினை மேற்கொண்டார். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம், தலைமைச் செயலாளரின் முன்னிலையில் கொடியேற்றினார். இரண்டாண்டுகளுக்கு முன்பு, அவர் கொடியேற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், அடுத்த சில தினங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கொடியேற்றினார். ஏற்கெனவே, சாதிப் பாகுபாட்டின் காரணமாக ஊராட்சித் தலைவர் கொடியேற்ற முடியாதிருந்த ஒரு ஊருக்குத் தலைமைச் செயலாளரே நேரடியாகச் சென்றதும் ஊராட்சி அலுவலகத்தின் தலைவர் இருக்கைக்கு அருகே பார்வையாளராக அவர் அமர்ந்திருந்ததும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காட்சிகளாக அமைந்துள்ளன.

ஆத்துப்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் மேற்கொண்டுள்ள நேரடி ஆய்வு, கடந்த ஆண்டு காந்தியடிகள் பிறந்த தினத்தன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டியில் கலந்துகொண்ட கிராமசபைக் கூட்டத்தையும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுக்கொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டமுதலாவது கிராமசபைக் கூட்டம் அது.பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவிகள் 1996-ல் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் போட்டியிட முடியாத சூழல் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலவிவந்தது.

முதல்வரின் தனிக்கவனம்

உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் 2006-ல்தான் அந்த நிலைக்கு முடிவுகட்டப்பட்டது. அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரான த.உதயச்சந்திரன், மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.

அவர்தான் தற்போது முதல்வரின் தனிச்செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச்செயலர் என்று அனைவரும் இவ்விஷயத்தில் மிகவும் உறுதியோடு இருப்பதையே ஆத்துப்பாக்கம் ஊராட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சியும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தோழமைக் கட்சி என்றபோதும் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டத் தயங்காத இடதுசாரிகள் கவனப்படுத்திய சமூகச் சிக்கல் ஒன்றுக்கு உடனடியாகத் தீர்வு காண முனைந்த ஆளுங்கட்சி, அதைக் குறைந்தபட்ச கால அவகாசத்துக்குள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் செயல்திறன் மிக்க அதிகாரிகள் என்று தமிழ்நாட்டின் ஜனநாயகப் பெருமை இந்தச் சுதந்திர தின விழாவில் மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்துடன் கூடிய சுதந்திரம் என்ற அண்ணல் அம்பேத்கரின் கனவைத் தமிழ்நாடு நனவாக்கியிருக்கிறது. ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் ‘அமிர்தம்’ அம்மாள். 75ஆவது ஆண்டு ‘அமுத’ப் பெருவிழாவை, அதன் உண்மையான பொருளில் தமிழகம் கொண்டாடியிருக்கிறது!

- செல்வ புவியரசன்

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in