Last Updated : 16 Aug, 2022 08:01 AM

 

Published : 16 Aug 2022 08:01 AM
Last Updated : 16 Aug 2022 08:01 AM

சுதந்திரச் சுடர்கள் | மகளிர்: பிகாஜி பறக்கவிட்ட கொடி!

வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத் தொடங்கிய காலத்தில் வளர்ந்தார்.

பிகாஜி விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபட அவரது கணவர் ரஸ்தம்ஜி காமாவோ பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தார். இந்தக் கொள்கை வேறுபாட்டால் மணவாழ்க்கை கசந்தது. பிளேக் நோயால் உடல் நலிவுற்ற பிகாஜி லண்டனில் 1902இல் குடியேறினார்.

ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்கை யைத் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த தாதாபாய் நௌரோஜியின் அறிமுகம் பிகாஜிக்குக் கிடைத்தது. இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். .

மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டுமென்றால், ‘இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்’ என்று கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு வலியுறுத்தியது. அதை ஏற்க மறுத்த பிகாஜி, பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட வந்தே மாதரம் உள்ளிட்ட புரட்சிப் பாடல்களை அச்சிட்டு விநியோகித்தார்.

1907இல் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற உலக சோஷலிஸ்ட் மாநாட்டில் பங்கேற்றார். பச்சை, காவி, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட இந்தியக் கொடியை அதில் அறிமுகப்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி என்று அவர் பறக்கவிட்ட அந்த மூவண்ணக் கொடியை பிகாஜியும் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவும் இணைந்து உருவாக்கினர்.

நாடு விடுதலை பெறுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனி மாநாட்டில் கொடியைப் பறக்கவிட்ட பிகாஜி காமா, “சுதந்திர இந்தியாவின் கொடி பிறந்துவிட்டது.

நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்தியர்களால் இந்தக் கொடி புனிதமடைந்தவிட்டது” என்றார். அந்நிய மண்ணில் பிகாஜி காமா பறக்கவிட்ட இந்த மூவண்ணக் கொடியின் அடிப்படையில்தான் தற்போதைய தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.

- ப்ரதிமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x