

சுதந்திரம் அடைந்த இரவில் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் மகாகவி பாரதியின் `ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று...' என்னும் பாடலைப் பாடினார் ‘கான சரஸ்வதி’ டி.கே.பட்டம்மாள். நாட்டின் திருப்புமுனைத் தருணத்துக்குக் கவிதையும் இசையும் கூடிய அந்தப் பாடல் தனி அழகு சேர்த்தது.
அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மரபுப்படி இந்தப் பாடலைப் பாடியதற்கான சன்மானம் டி.கே.பட்டம்மாளுக்கு அனுப்பப்பட்டது. "நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் பாடியதற்கு எனக்கு எதற்குச் சன்மானம்?" என்று அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தார் பட்டம்மாள்.
அவர் சன்மானத்தை ஏற்றுக்கொள்ளாத விஷயம் மத்தியத் தகவல் ஒலிபரப்பு அமைச்சர் வரை சென்றது. ஆனால், கடைசிவரை சன்மானத்தை உறுதியாக மறுத்துவிட்டார் பட்டம்மாள்.
திரைப்படங்களில் பாடுவதற்கு டி.கே.பட்டம்மாளுக்கு வாய்ப்புகள் வந்தாலும், நிறைய தேசபக்திப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் மட்டுமே திரைக்காகப் பாடுவேன் என்று உறுதியோடு இருந்தார்.
கே.சுப்பிரமணியம் இயக்கிய `தியாக பூமி' திரைப்படத்தில் `பாரத புண்ணிய பூமி, ஜெய பாரத புண்ணிய பூமி', `தேச சேவை செய்ய வாரீர்' ஆகிய பாடல்களைப் பாடி நாட்டின் விடுதலைக்காக மக்களைத் தயார்படுத்தியவர் பட்டம்மாள்.
தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் என எந்த மொழியாக இருந்தாலும், பாட்டில் ஸ்ருதி சுத்தம் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவுக்கு பட்டம்மாளிடம் உச்சரிப்பு சுத்தமும் கனகச்சிதமாக இருக்கும்.
பாடும் பாட்டில் இப்படி உறுதியை வெளிப்படுத்தும் பட்டம்மாள், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். பிரபலமானவர்களிடமும் பாமர ரசிகனிடமும் ஒரே மாதிரியான அன்பை வெளிப்படுத்தக்கூடிய குழந்தை உள்ளத்தோடு வாழ்ந்தவர். அவருடையது இசைப் பெருவாழ்வு.
- வா.ரவிக்குமார்