

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் வாழ்ந்த சராசரி மனிதர் ஒருவரிடம் ‘இந்தியா என்பது என்ன’ என்று கேட்டிருந்தால், அவரால் சரியாகப் பதில் சொல்லியிருக்க முடியாது.
அரசியல் ஆர்வமுள்ளவராக இருந்திருந்தால் ஒரு கனவை விவரிப்பதைப் போலத் தெளிவில்லாமல் விவரித்திருக்கலாம். இன்னும் ஒரு நூறாண்டு கழித்து அவரைப் போன்ற சராசரி இந்தியர் ஒருவரிடம் ‘இந்தியா என்பது என்ன’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்ல வேண்டும் என நாம் விரும்புவோமோ, அதில் அடங்கியிருக்கிறது நம்முடைய நாட்டின் எதிர்காலத்திற்கான பாதை.
முரணும் ஒழுங்கும்: அர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான போர்ஹேஸ், ‘இந்தியா பிரபஞ்சத்தைக் காட்டிலும் விரிவானது’ என்றார்; அவர் இந்தியாவுக்கு வந்ததே இல்லை. பிரபஞ்சத்தைப் போலவே இந்தியாவும் பல்வேறு முரண்களால் நிரம்பியிருந்தாலும் அடியாழத்தில் ஓர் ஒழுங்குடன் இயங்குகிறது.
நமது முரண்கள் உலகின் மற்ற நாடுகளின் முரண்களைவிட அதிகமானவை. நாம் பன்மையில் இருந்து ஒற்றைத்தன்மைக்குப் போன ஐரோப்பிய தேசியங்களைப் போல அல்ல, பன்மையை ஏற்று அதனைப் பேணும் அதே வேளையில், தேசியம் எனும் நவீன சட்டகத்திற்குள் திரண்டவர்கள். எதனையும் நிராகரித்தவர்கள் அல்ல, எனினும் நாம் ஒரு புது மாதிரியை முன்வைத்திருக்கிறோம்.
அரசமைப்பு, குடியரசு, மக்களாட்சி, அனைவருக்குமான வாக்குரிமை, தேர்தல், அடிப்படை உரிமைகள், நாட்டைப் பேணும் சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட, ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தும் அரசமைப்பின் மூன்று பெரும் தூண்களான சட்டம் இயற்றும் அவைகள், நிர்வாக அமைப்பு, நீதித் துறை, ஒப்பீட்டளவில் அதிக சுதந்திரமுள்ள ஊடகம் என்கிற நான்காவது தூண் ஆகியவை இந்தியாவில் உண்டு.
மேற்சொன்ன எவையும் இந்தியாவின் மூவாயிரம் ஆண்டு சிந்தனை வரலாற்றில் உருப்பெற்றவை அல்ல. காலனி ஆதிக்கவாதிகள் உண்டாக்கியிருந்த நிறுவனங்களை நாம் புத்துருச் செய்து வடிவமைத்தவை. எனினும், அடிப்படை உரிமைகள் காலனிய அதிகார அமைப்பிற்குள்ளும் இல்லாத ஒன்று.
அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு ஏற்படுத்தியவை. ஒருவகையில் இந்தியாவின் கண்ணாடிகளில் ஐரோப்பிய பிம்பங்களைப் பார்க்க முனைந்தவை. ஆனால், இந்தியாவின் சொந்த சிந்தனை என்று கூறிவிட முடியாத முற்றிலும் புதிய ஒன்றை நாம் ஏன் தேர்ந்தெடுத்தோம்?
காலனியத்துக்குப் பிறகு: காலனியம் இந்தியாவிற்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால், முதன்முறையாக மொத்த இந்தியாவிற்கும் ஒற்றை எதிரியை அளித்ததுதான். அது இந்தத் துணைக்கண்டத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஓர் ஒற்றை எதிரியும், அந்த எதிரியிடம் இருந்து விடுதலை அடையும் லட்சியமுமாக இருந்தது. அந்த எதிரியே நாம் ஒன்றுதிரள்வதற்கான காரணமும்கூட. எதிர்ப்பினில் உருவான ஒற்றுமை. ஒன்றாக இணைந்துவிட்டோம், இனி இந்த ஒற்றுமையைக்கொண்டு என்ன செய்வது?
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டுகளில் உலகின் நிலைமை எப்படி இருந்தது? உலகம் ஆறு ஆண்டு கால ரத்தக்களறியில் சிக்கி மெல்ல மேலே எழுந்துகொண்டிருந்தது. ஐரோப்பா நாசிசம், பாசிசம், கம்யூனிசக் கோட்பாடுகளின் பிடியில் தன்னைப் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, இந்தியா மக்களாட்சியைப் பரிசோதனை செய்ய விரும்பியது. இந்தப் பரிசோதனை அளவில்லாத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
எப்படியும் இந்தியா போன்ற நிலப்பரப்பில் மக்களாட்சி எனும் அரசியல் முறைமை செல்லுபடியாகும் என்கிற நம்பிக்கை. காலனியம் விடைபெற்றுச் சென்ற பின்னும் நாம் உலகத்தோடு தொடர்பில்லாத பழங்காலத்திற்குச் சென்றுவிடக் கூடாது எனும் பிடிவாதமும் அதனோடு இணைந்தது.
நமக்கு முன்னே உலகின் மூத்த மக்களாட்சி நாடான அமெரிக்காவும், முடியாட்சிகளின் நவீன வடிவங்களான ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளும், கம்யூனிச ரஷ்யாவும், கலிஃபேட்டுகளும் (அரபு நாடுகள்) இருந்தன. இந்தியாவின் விடுதலைக்கான போராட்டம் என்பது வெறுமனே அரசியல் புரட்சி மட்டுமல்ல, அதுவொரு சமூகப் புரட்சியும்கூட.
தனித்துவ அரசமைப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அதி உயர் தனிச்சிறப்பு அதன் வரைவுக் குழுவின் தலைவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இதைச் சமூகப் புரட்சியின் விதைகளைக் கொண்ட முதல் விளைவு என்று சொல்லலாம். தேர்தலின் வழியாக ஒவ்வொரு இந்தியருக்கும் தனது பிரதிநிதியாகச் செயல்படும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வரலாற்றிலேயே முதன்முறையாகப் பல தேர்வுகள் கிடைத்தன.
நமது நாட்டின் பல்வேறு சமூகப் பிரிவினர் இடையே நிலவிய போட்டியுணர்வு, பகைமை, பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்துவந்த தீர்க்கப்படாத பிணக்குகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முற்றிலும் புதிய இந்தியாவிற்கான ஒரு சமூக ஆவணமாக அரசமைப்பை உருவாக்குவதே முதன்மையாக இருந்திருக்க வேண்டும். இதன் பொருள், இந்தியா என்பது எதிர்காலத்தில் இருக்கிறது என்பதே.
இந்த நிலத்தின் பல்வேறு சமூகங்களின் விதிமுறைகளும் கோட்பாடுகளும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மாறாக, அன்றாட வாழ்வில் கேள்வி கேட்க அனுமதிக்காத அடிபணிதலை வேண்டுபவை. அவற்றிற்கு மாறாக அரசமைப்பைத் தனிமனித சுதந்திரத்தை மையமாகக் கொண்டு அமைத்ததன் பின்னே, நமது சமூகக் குழுக்களின் தீராத பிணக்குகளின் மோசமான அனுபவங்கள் மட்டுமேயல்ல, எண்ணிலடங்கா அடையாளங்களில் ஒருசிலவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசத்தைக் கட்டி எழுப்பினால் அது முழுமை பெற்றதாக அமையாது என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
அத்தனை வேற்றுமைகளைக் களைந்தாலும் இறுதியில் எஞ்சியிருப்பது தனிமனிதர் என்கிற அளவில், இந்திய அரசமைப்பு இந்த நாட்டின் எதிர்காலத்தை அணுகும் வண்ணம் வடிக்கப்பட்டிருக்கிறது.
இது ஐரோப்பியக் கோட்பாடுகளுக்கு வெளியே ஒரு கோட்பாட்டை முன்வைத்த காந்திய அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரானது. அத்தோடு நிற்காமல், ஏற்கெனவே செல்வாக்கு செலுத்தும் சமூக, மதக் கருத்துக்களின் வழியாக அல்லாமல் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கும் மனிதரை அரசமைப்பு தோற்றுவிக்க முயல்கிறது.
அம்மனிதருக்கு அறிவியல்பூர்வமான சிந்தனை மட்டுமே அனைத்தையும் அளக்கும் கருவியாக இருக்க முடியுமே அல்லாமல், வேறு எந்த மரபான கருத்துக்களும் அல்ல. சுதந்திரத்திற்கு அறிவியலை ஒரு கருவியாக முன்வைக்கும் அரசமைப்பு இந்தியாவினுடையது அன்றி வேறில்லை. சுதந்திர மனிதன் மரபின் செல்வாக்கிலிருந்து விடுபடும் வாய்ப்பை அது உருவாக்கியது என்றால், அதே வேளை மரபைப் பேணுதலையும் அது தடை செய்திருக்கவில்லை.
இந்திய விடுதலையின் சாராம்சத்தை நம்முடைய அரசமைப்பு கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறை மறுப்பே இந்திய விடுதலையின் சாராம்சம். வன்முறைக்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடிய பழைய காரணங்களிலிருந்து, அந்தக் காரணங்களின் தொகுப்பாக இருக்கக்கூடிய வரலாற்றிடமிருந்து பெறும் விடுதலை இது.
அரசமைப்பின் வழியாகக் கண்ட கனவே இந்தியா எனக் கொண்டால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விக்கு இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து சராசரி இந்தியர் ஒருவர் சொல்லக்கூடிய பதிலும், இதில் இருப்பதாகவே தோன்றுகிறது.
- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்,
எழுத்தாளர்; தொடர்புக்கு: tweet2bala@gmail.com