

சூப்பர் கம்ப்யூட்டரை நோக்கிய இந்தியாவின் பயணம் 1980-களில் தொடங்கியது. 80-களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் சூப்பர் கம்ப்யூட்டர்களை ஏவுகணைகள், போர் விமானங்கள், அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவு ஆயுதங்களை வடிவமைக்கப் பயன்படுத்திவிடும் என்று அந்த நாடுகள் அஞ்சின. அதன் காரணமாக, 80-களில்தான் க்ரே எனும் சூப்பர் கம்ப்யூட்டரின் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தியது.
சூப்பர் கம்ப்யூட்டருக்கான உயரிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டது. தனது அதிவேக கணக்கீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாமல் இந்தியா தடுமாறியது. அந்தச் சூழலில்தான், உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் நோக்கில் 1988இல் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) இந்தியாவில் நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே சூப்பர் கம்யூட்டரை உருவாக்க வேண்டுமென்று கனவு கண்டவர் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி. அந்தக் கனவுக்கு மூன்றே ஆண்டுகளில் வடிவம் கொடுத்து, நனவாக்கியவர் விஜய் பாண்டுரங்க் பட்கர்.
1991இல், இந்தியாவின் முதல் உள்நாட்டு சூப்பர் கம்ப்யூட்டரான பரம் 8000 (PARAM 8000) பயன்பாட்டுக்கு வந்தது. உலக அளவில் ஒரு வளரும் நாடால் உருவாக்கப்பட்ட முதல் சூப்பர் கம்ப்யூட்டரான அது, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்தானா என்பதில்கூடப் பலருக்குச் சந்தேகம் இருந்தது. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான சர்வதேச மாநாட்டில் தரவுகளுடன் பட்கர் அதைத் அறிமுகப்படுத்தியபோது, அந்தச் சந்தேகம் வியப்பாக மாறியது.
2002இல் பரம் பத்மா எனும் சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பரம் இஷான், பரம் கஞ்சன்ஜங்கா ஆகியவை பரம் கம்ப்யூட்டர் வரிசையின் சமீபத்திய வெளியீடுகள். இன்று சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் திறனில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
- ஹுசைன்