

சுதந்திர இந்திய மண்ணில் பிறந்த புதிய தலைமுறை இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்டத்தையோ அதன் தியாகிகளையோ நேரடியாகப் பார்த்திராத ஒரு தலைமுறை இது.
சுதந்திர இந்திய மண்ணில் பிறந்த இத்தலைமுறையின் ஓவியங்கள், சிற்பங்கள், அச்சுப் பதிவுகள், இன்ஸ்டலேஷன்கள், காணொளிக் கலைப் படைப்புகள் அனைத்தும் விடுதலைக்கு முந்தைய கலைப் படைப்புகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு புதிய கலை முகத்தைக் காட்டிவருகின்றன.
இந்திய சுதந்திரத்தின் 50ஆவது ஆண்டு விழாவுக்காக, டெல்லியிலுள்ள தேசிய நவீனக் கலைக்கூடம் ஏற்பாடுசெய்த தேசிய அளவிலான ஓவியக் கண்காட்சியில், தேசிய அளவில் ஓவியர்கள் பங்குகொண்டனர். இதன் கையேடு என் ஆங்கில முன்னுரையுடன் வெளிவந்தது. அந்தக் கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு முன், நான் எழுப்பிய கேள்விகள் இன்னமும் பதில் கிடைக்காமல் சூனியத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன.
சில கேள்விகள்: சுதந்திரம் பெற்றுவிட்ட புதிய தலைமுறை ஓவியர்களின் அடிமனங்களில் காலனியாதிக்கம் விதைத்துவிட்டுச் சென்ற தாழ்வுமனப்பான்மையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிட்டார்களா?
இன்றைய இந்திய ஓவியர்களின் கலைப் படைப்புகள் எந்த அளவுக்கு இந்த மண்ணின் கலை, பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன?
சர்வதேச ஓவிய / சிற்ப உலகிற்கு இந்திய விடுதலைக்குப் பின் சுதந்திர இந்தியாவில் பிறந்த ஓவிய / சிற்பக் கலைஞர்கள் பங்களிப்புகள் யாவை?
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் நடத்திவிட்டுப்போன பண்பாட்டு நாசங்களைத் தற்கால ஓவிய / சிற்பக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளின் மூலமாக எந்த விதத்தில் சரிசெய்திருக்கிறார்கள்?
மெக்காலேயின் பாதிப்பு: சுதந்திரத்துக்குப் பின் பிறந்த கலைஞர்களைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் ஆங்கிலக் கல்வியை இந்தியாவுக்குக் கொண்டுவந்த லார்டு மெக்காலேதான் நினைவுக்கு வருகிறார். ‘நிறத்தாலும் ரத்தத்தாலும் இந்தியர்களாகக் காட்சியளிக்கும் இவர்கள், சுவையுணர்வு, கருத்து, மொழி ஆகியவற்றால் பிரிட்டிஷ்காரர்களாக இருக்க வேண்டும்’ என்று கல்வி குறித்த தன் அறிக்கையில் எழுதிய மெக்காலேவின் எண்ணம், இன்று நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். நமது தற்காலக் கலைப் படைப்புகளில் பெரும்பாலானவை மேலைநாட்டுச் சூரியனிடமிருந்து ஒளி வாங்கித் தேய்ந்து போகும் நிலவுகளாகவே இருக்கின்றன. மேலை நாடுகளில் நடக்கும் கலை முயற்சிகளை எந்தவித விமர்சனப் பார்வையும் இன்றி அப்படியே எதிரொலிக்கும் போக்கு ஓவிய / சிற்பக் கலையுலகில் இன்று தலைதூக்கி உள்ளது.
கைவினை, கலை வேறுபாடு: நம் பண்பாட்டு அடையாளத்தோடு கூடிய ஓவிய, சிற்பப் படைப்புகள் அரிதாகவே படைக்கப்படுகின்றன. சட்டத்தில், நீதியில், நிர்வாகத்தில், ஜனநாயக அமைப்பில், நாடகத்தில், இசையில், கலை, இலக்கியப் பண்பாட்டில் பிரிட்டிஷ்காரர்களே இன்னமும் நமது சிந்தனையின் முதலாளிகளாக இருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் புலப்படும்.
1850 மே மாதத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக பிரிட்டிஷ்காரர்களின் காலனிய நகரமான மதராசப் பட்டினத்தில் தொழிற்கலைப் பள்ளி (The School of Industrial Design) ஒன்றை டாக்டர் அலெக்ஸாண்டர் ஹன்ட்டர் என்பவர் நிறுவினார். இதில் இந்தியக் கைவினைக் கலைகளான பானை செய்தல், மரக்கடைசல், உலோகச் சிற்பம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டன. பின்னாளில் பாம்பே, கல்கத்தா, லக்னோ என்று பல நகரங்களில் கலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு கிழக்கிந்தியக் கம்பெனியின் கையிலிருந்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு ஓவிய, சிற்பக் கலைகள் குறித்த பாடத்திட்டங்களில் பிரிட்டிஷ் அரசு ‘தனிக் கவனம்’ எடுக்கத் தொடங்கியது.
இதன் விளைவாக, இந்தியாவில் பாரம்பரியமாக இருந்த கலை மரபுகளைக் கைவினைப் படைப்புகள் (Craft) என்றும், பிரிட்டிஷ் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட் மரபில் படைக்கப்பட்ட ஓவிய, சிற்பக் கலைப் படைப்புகள் (Art) என்றும் அழைக்கப்படலாயின. ‘கலை’, ‘கைவினை’ எனும் பிரிவினை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக இரண்டில் ‘கலை’ உயர்ந்த தட்டிலும் ‘கைவினை’ தாழ்ந்த தட்டிலும் வைக்கப்பட்டன. கலைப் பள்ளியின் இந்திய மாணவர்களுக்கு இதுவே பாடமாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.
கைவினை மரபே நம் மரபு: இந்தியாவில் பிரிட்டிஷ் கலைப் பள்ளிகளில் படித்தவர்கள் தங்கள் சொந்த மண்ணின் கலைப் படைப்புகளைக் ‘கைவினை’ என்று உதாசீனப்படுத்தும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதே நேரத்தில், பிரிட்டிஷ் முறையிலான கலைமுறைகளைக் ‘கலை’ என்று உயர்வாகக் கருதும் அடிமை மனநிலைக்கும் ஆளானார்கள்.
கைவினை மரபுதான் இந்தியாவின் கலை மரபு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கைவினை என்பது தரம் தாழ்ந்தது என்ற காலனி ஆதிக்கச் சிந்தனையை நம்பத் தொடங்கினால், தமிழர்களின் உலகப் புகழ்பெற்ற செப்புத் திருமேனிகளையே பிரிட்டிஷ் பார்வையில் வெறும் கைவினை என்று புறந்தள்ளிவிடும் ஆபத்தை எதிர்கொள்வோம். இதிலிருந்து விடுபட ஒரே வழி, தற்கால ஓவியர்கள் கலைரீதியான சவால்களை எதிர்கொள்ளும் அதே அளவுக்குத் தங்களைச் சுற்றியிருக்கும் சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவற்றுக்குள் நிகழும் முரண்கள் நிறைந்த சவால்களையும் கலைரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.
- இந்திரன், கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்
தொடர்புக்கு: poetindran@gmail.com