

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு எவ்வளவு படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்ற கணக்குத் தெரியாது என்பதைப் போலவே, பிற மொழிகளிலிருந்து எத்தனை படைப்புகள் தமிழுக்கு வந்துள்ளன என்ற கணக்கையும் சரிவரச் சொல்ல முடியாது. காலங்காலமாகப் பிறமொழிப் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் நிறையவே நடைபெற்றன. ஆக்கூர் அனந்தாச்சாரியார் டால்ஸ்டாயின் சில சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். இதுபோல் வரதராஜுலு நாயுடுவும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார். 1940-50களில் பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணி உத்வேகத்துடன் நடைபெற்றிருக்கிறது. புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்ற படைப்பாளிகள் மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கின்றனர். க.நா.சுப்ரமணியம் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டவர். ஆர்.சண்முகசுந்தரம், த.நா.குமாரஸ்வாமி, த.நா.சேனாதிபதி போன்றோர் விபூதிபூஷண் பந்தோபாத்யாய, தாகூர், சரத்சந்திரர் போன்ற வங்க மேதைகளின் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்தனர்.
இதே தலைமுறையைச் சேர்ந்த வல்லிக்கண்ணன், தி.க.சி.யும் சில மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளனர். மும்பையிலிருந்து செயல்பட்ட பேர்ல் பதிப்பகம் பல அமெரிக்க நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஜோதி நிலையம், தமிழ்ச் சுடர் நிலையம் இரண்டும் பல ஐரோப்பிய மொழிபெயர்ப்புகளை வெளியிட்டன. ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகவே ரா.கிருஷ்ணையா, ‘பூர்ணம்’ சோமசுந்தரம், பிற்காலத்தில் நா.தர்மராஜன் போன்றோர் ரஷ்யாவிலேயே தங்கியிருந்து மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டனர். அண்மைக் காலத்தில் எம்.ஏ.சுசீலா டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கியின் பிரம்மாண்டமான நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்த டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்.
நேஷனல் புக் டிரஸ்ட்டும் சாகித்ய அகாடமியும்அகில இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்களைத் தமிழில் ஏராளமாக மொழிபெயர்த்திருக்கின்றன. கன்னட நாவல் மொழிபெயர்ப்பு என்றதும் சித்தலிங்கையாவின் பெயர் நினைவுக்கு வராமல் போகாது. பாவண்ணன், தி.சு.சதாசிவம் போன்றோரும் பல கன்னடப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். தகழியின் இரண்டு நாவல்களை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார். சௌரிராஜன், சரஸ்வதி ராம்னாத், எஸ்.எஸ்.மாரிசாமி, ஆறுமுகம், புரசு பாலகிருஷ்ணன், குளச்சல் மு.யூசுப்,கிருஷ்ணமூர்த்தி, சி.மோகன், ஜி.குப்புசாமி, எஸ்.சமயவேல் போன்றோரும் சில மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கின்றனர்.
மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் ஒரு தனி வகையான படைப்புகளாகவே இடம்பெற்றுள்ளன. அவை, கண்ணுக்குத் தெரியாத வகையில், தமிழ் எழுத்துலகைப் பாதித்துள்ளன. அவற்றின் தாக்கம் தமிழ் எழுத்துலகில் நுட்பமாக விரவிக் கிடக்கிறது.