மறுமலர்ச்சிப் பாதையில் சினிமா

மறுமலர்ச்சிப் பாதையில் சினிமா
Updated on
3 min read

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தி சினிமா நேருவிய சோஷலிஸம் என்கிற கருத்தியலுக்குக் குரல் கொடுத்தது. நேருவின் இந்தக் கருத்துகளே ‘மதர் இந்தியா’ (1957), ‘நயா தவுர்’ (1957) போன்ற படங்களின் கதையாடல்களை இயக்கும் விசை எனலாம். நிலக்கிழார் ஒருவர் மூலம் அந்தக் காலகட்டத்திய நிலையை ‘மதர் இந்தியா’ சித்தரிக்கிறது. ‘நயா தவு’ரின் இறுதிக் காட்சியில் மாட்டுவண்டிக்கும் பேருந்துக்குமான போட்டியின் வழியாக மரபையும் நவீனத்துவத்தையும் இணைத்த புதிய இந்தியா என்ற நேருவின் கருத்தை இந்தப் படம் பறைசாற்றியது.

தமிழ் சினிமா காங்கிரஸ் கட்சியை ஆரியப் பண்பாட்டு மேலாதிக்கத்தின் குறியீடாகப் பார்த்தது. உதாரணத்திற்கு, மு.கருணாநிதி எழுத்தில் வெளியான ‘பராசக்தி’யில் சுதந்திர இந்தியாவில் கால் பதிக்கும் குணசேகரன் (சிவாஜி கணேசன்) முதலில் காண்பது தன்னைச் சூழும் பிச்சைக்காரர்களைத்தாம். தனது அன்புத் தங்கை கல்யாணி பூசாரியின் வக்கிர உணர்வுகளால் கோயிலுக்குள்ளேயே மானபங்கத்திற்கு உள்ளானதை அறிந்து அவன் வெகுண்டெழுகிறான். ‘திரும்பிப்பா’ரில் நேரடியாக நேரு திராவிட நாடு கோரிக்கையை நிராகரித்ததை ‘நான்சென்ஸ்’ என்று எள்ளிநகையாடுவதைக் காணலாம். இந்தி சினிமா நேரு மூலமாகச் சுதந்திர இந்தியாவின் பொற்காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கை 1950, 60-களின் படங்களில் தொடர்ந்தது. பின்னர் நம்பிக்கை இழந்து, 1970-களில் நெருக்கடிநிலையுடன் அந்தப் போக்கு முடிவுக்கு வந்தது.

நேரு அளித்த நம்பிக்கை ஒளியிலிருந்து சமூக வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இருண்மையின் நாயகனாக அமிதாப் பச்சன் இருந்தார். நேரு சகாப்தத்தின் முடிவின் குறியீடாக ‘தீவார்’ (1975) படம் இருந்தது. அதில் சிறு வயதில் தொழிலாளர் தலைவரான தன் தந்தை, முதலாளியின் வஞ்சகத்தினால் இறந்ததால், ஒரு கடத்தல்காரரிடம் பணிக்கு அமர்ந்து பின்னர் பெரிய ‘டானாக’ உருவெடுத்து எதிர்மறைக் கதாநாயகனாக அமிதாப் நடித்திருந்தார்.

தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சிக்கான உத்தரவாதத்துடன் 60களின் இறுதியில் ஆட்சியை திமுக கைப்பற்றியபோதும், சமூக நீதிக்கான முன்னகர்வுகள் இருந்தபோதிலும் பெரியாரிய, பெண்ணிய இடையீடுகளுக்கான வெளிகளிலும் விளிம்புநிலை மக்களை உள்ளிழுத்தலிலும் பெரிய மாறுதல் ஏற்படவில்லை.

ரஜினிகாந்த் 1980இல் வந்த ‘முரட்டுக் காளை’ மூலம் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். அவரது போட்டியாளராகக் கட்டமைக்கப்பட்ட கமல்ஹாசனும் 70களில் பாலசந்தர் படங்களில் மட்டுமல்லாமல், பாலு மகேந்திராவின் முதல் படமான ‘கோகிலா’வில் நடித்துக் கைகொடுத்தார். போலவே, பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’, ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ ஆகிய படங்களிலும் நடித்தார். 1960கள் வரை பெருவாரியாக ஸ்டுடியோக்களில் கட்டுண்டகிடந்த தமிழ் சினிமா தலைநிமிர்ந்து வெளிவர கமல்ஹாசன் உதவினார். 1982இல் ஏவிஎம்மின் ‘சகலகலா வல்லவன்’ மூலம் பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். அதன் பின்னர் 1980, 90-களில் தமிழ் சினிமா சாதிப் பெருமையைப் பேசுபொருளாகக் கொண்டது.

ஸ்வர்ணவேல்
ஸ்வர்ணவேல்

உதாரணத்திற்கு, ‘நாட்டாமை’, ‘சின்ன கவுண்டர்’, ‘தேவர் மகன்’ போன்ற படங்கள். அந்தக் காலகட்டத்தில் வடக்கே சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கிறித்தவர்களும் பெருவாரியான இந்திப் படங்களில் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் இளையராஜாவுடன் சேர்ந்து ‘மௌன ராகம்’ (1986), ‘நாயகன்’ (1987) போன்ற படங்களைக் கொண்டுவந்தனர். 1995இல் ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ என்கிற படத்தின் மூலம், இந்தி சினிமா புலம்பெயர்ந்த இந்தியர்களை இலக்காகக் கொண்டு தனது சந்தையை விரித்தது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவு ஏக்கங்களுக்கு ஏற்ப, அவற்றைப் பசுமையான கனவு உலகம்போல் டிஜிட்டல் சினிமாவின் வண்ணங்களைக் கொண்டு சித்தரிக்கச்செய்தன. மாறாக,தமிழ் சினிமாவிலோ இயக்குநர் பாலா வாழ்வின் இருண்மைக்கு மெருகேற்றினார். இயக்குநர் வெற்றிமாறன் விளிம்புநிலை மக்களின் இனவரைவியலுக்கு வணிக சினிமாவில் இடமுண்டு என்பதை நிறுவினார். இயக்குநர் மிஷ்கின் வடிவ எல்லைகளை உந்தித் தள்ளினார். இயக்குநர் ராம், காதலை அதன் குளுமையிலிருந்து மீட்டு, இன்றைய யதார்த்தத்தின் பின்னணியில் ஆராய்ந்தார்.

இந்திய மைய நீரோட்டத் திரைப்படங்களில் இருட்டடிக்கப்பட்ட தலித் வாழ்வையும் தலித் கதாபாத்திரங்களையும் இயக்குநர் பா.இரஞ்சித் ‘அட்டக்கத்தி’ (2012), ‘மெட்ராஸ்’ (2014) உள்ளிட்ட படங்கள் வழியாகக் கொண்டுவந்தார். இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ (2018) படத்தைத் தயாரித்தார். இன்றைய சினிமா இந்த இளம் இயக்குநர்களின் பங்களிப்புடன் மறுமலர்ச்சிக் காலத்தில் பயணித்துவருகிறது எனலாம்.

- ஸ்வர்ணவேல், திரைத்துறை ஆய்வாளர்,

தொடர்புக்கு: eswaran@msu.edu

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in