சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலம் வரை

சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலம் வரை
Updated on
1 min read

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மதராஸ் மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, ராயலசீமா, தட்சிண கன்னடா, பெல்லாரி, உடுப்பி, கேரளத்தின் மலபார் பகுதிகள், லட்சத்தீவு போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. மதராஸ் மாகாணத்தின் தலைநகராக இன்றைய சென்னையும், கோடைக்காலத் தலைநகராக உதகமண்டலமும் இருந்தன.

நாடு சுதந்திரமடைந்த பிறகு சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் உருவாகின. அதன்படி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த மதராஸ் மாகாணம் (Madras Presidency), மதராஸ் மாநிலமாக (Madras state) 1950இல் மாறியது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் எழத் தொடங்கின.

மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத் தியாகி பொட்டி ராமுலு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்த் துறந்தார். இதன் தொடர்ச்சியாகத் தெலுங்கு பேசும் பகுதிகளில் பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.

இதையடுத்து மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு முடிவுசெய்து, 1953ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அதேவேளையில் பல்வேறு மாநிலங்களில் எழுந்த மொழிவாரி மாநிலப் பிரிப்புக் கோரிக்கையை ஏற்று பிரதமர் நேரு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக மாநில மறுசீரமைப்பு ஆணையமும் அமைக்கப்பட்டது. அதன்படி மதராஸ் மாநிலத்திலிருந்து மலபார் பகுதிகள் பிரிக்கப்பட்டு 1956இல் கேரள மாநிலம் உருவானது. இதேபோல மதராஸ் மாநிலத்திலிருந்து கன்னடப் பகுதிகள் பிரிக்கப்பட்டு மைசூர் மாநிலமும் உருவானது.

மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது கன்னியாகுமரி, செங்கோட்டை போன்ற பகுதிகள் மதராஸ் மாநிலத்தில் இணைக்கப்பட்டன.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in