

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து வெற்றி பெற்ற மக்கள் தங்களுக்காக ஒரு அரசியல் சட்டத்தை அமைத்துக் கொண்டார்கள். 1788-ல் அமலுக்கு வந்த அமெரிக்க அரசியல் சட்டம் மனித குலத்தின் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதை வடிவமைத்தவர்கள் நமது அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்களைப் போலவே அசாதாரணமான திறமையும் நாட்டுப் பற்றும் கொண்டவர்கள்.
உலகத்தின் பணக்கார நாடுகளில் அமெரிக்கா ஒன்று என்றால், அமெரிக்காவின் பணக்கார நகரங்களில் சான் பிரான்சிஸ்கோ ஒன்று. மிக அழகிய நகரமும் கூட. அதன் வீதிகள் அகலமானவை. இரு மருங்குகளிலும் வானவளாவிய கட்டிடங்களைக் கொண்டவை. இந்தக் கட்டுரையை நான் அந்த நகரத்திலிருந்து எழுதுகிறேன். நகரத்தின் வெப்பநிலை மிதமானது. நம்மை நடந்துகொண்டே இருக்கத் தூண்டுவது. தினமும் காலாற நடக்கிறேன். வழி நெடுக நான் சந்திப்பது வீடில்லாதவர்கள். வெள்ளையர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் என்று அழைக்கப்படும் மத்திய தென் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தெருக்களில் வசிக்கிறார்கள். தெருக்களில் துயில்கிறார்கள். இவர்களில் சிலர் தெருக்களையே கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு தெரு மூலையும் நம்மூர் மூத்திரச் சந்தை நினைவுக்குக் கொண்டுவருகிறது.
சான் பிரான்சிஸ்கோ சாதாரண நகரமல்ல. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையப்புள்ளியான ‘பே ஏரியா’ என்று அழைக்கப்படும் விரிகுடா பகுதியின் முக்கியமான நகரம். தெருவில் அலைபவர்களுக்குத் தங்கும் இடம் அமைத்துக் கொடுக்க வசதி இல்லாத நகரம் என்று சொல்ல முடியாது. வசதியிருக்கிறது. ஆனால் மனதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் ஆயிரம் பேர் இரவில் தங்குவதற்கு நகரில் வசதியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதை விடப் பத்துப் பங்குப் பேர்கள் தெருவில் அலைகிறார்கள். முன்னேற்றம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும், அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அமெரிக்காவிலும் கனவாகவே இருக்கிறது என்பது மனதை உலுக்கும் ஒன்று. இருநூற்று நாற்பது ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாத கனவு.
அன்று கண்ட கனவு
அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அன்றைய விடுதலை விரும்பிகள் கண்ட கனவு மிகவும் தெளிவாக இருந்தது. தாமஸ் ஜெஃபர்ஸன், பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற மேதைகளால் வரையப்பட்டு, 1776 ஜூலை 4-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட விடுதலைப் பிரகடனம் சொல்கிறது: “நாம் சில உண்மைகள் உள்ளார்ந்த தெளிவைக் கொண்டிருப்பதாக அறிகிறோம்: எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டவர்கள். படைத்தவன் அவர்களுக்கு மறுக்கப்பட முடியாத பல உரிமைகளைக் கொடுத்திருக்கிறான். அவற்றில் சில - வாழும் உரிமை, சுதந்திரமாக இருக்கும் உரிமை, மகிழ்ச்சியைத் தேடும் உரிமை.”
இவ்வுரிமைகளுக்காகவே அமெரிக்கச் சுதந்திரப் போராட்டம் நடந்தது. பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து வெற்றி பெற்ற மக்கள் தங்களுக்காக ஒரு அரசியல் சட்டத்தை அமைத்துக் கொண்டார்கள். 1788-ல் அமலுக்கு வந்த அமெரிக்க அரசியல் சட்டம் மனித குலத்தின் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதை வடிவமைத்தவர்கள் நமது அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்களைப் போலவே அசாதாரணமான திறமையும் நாட்டுப் பற்றும் கொண்டவர்கள்.
விடுதலைப் பிரகடனம் மற்றொன்றையும் சொல்கிறது. “அரசுகள் மனிதர்களால் அமைக்கப்படுகின்றன. அவற்றின் அதிகாரங்கள் ஆளப்படும் மனிதர்களின் ஒப்புதலுடன் பெறப்படுகின்றன.” மக்களாட்சியை இதை விடத் தெளிவாக விளக்க முடியாது.
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே மக்களுக்கு அடிப்படை உரிமைகளைத் எந்தத் தடையும் இன்றித் தந்தது அன்றைய அமெரிக்க ஆட்சி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகின் விடுதலையை விரும்புபவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஆட்சி முறை முன்னுதாரணமாக இருந்தது. நம்முடைய அரசியல் சட்டமும் அமெரிக்க அரசியல் சட்டத்தின் பல அங்கங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
புறக்கணிக்கப்பட்டவர்கள்
அமெரிக்க அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்கள் மூன்று தரப்பினரை மனிதர்களாகவே கருதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களில் முதலாவது அமெரிக்காவின் பழங்குடி மக்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்னால் சுமார் 1.8 கோடி பழங்குடி மக்கள் வட அமெரிக்காவில் இருந்தார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இன்று சுமார் ஐம்பது லட்சம் பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது மூதாதையர்கள் பல வகைகளில் கொல்லப்பட்டார்கள். மீதி இருந்தவர்களை வெள்ளையர்கள் இறக்குமதி செய்த நோய்கள் அழித்துவிட்டன. இவர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது 1924-ல். ஆனால் 1957 வரை பல மாகாணங்கள் பழங்குடி மக்களை ஓட்டளிக்க அனுமதிக்கவில்லை.
இரண்டாவது பெண்கள். பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது 1920-ல்தான். அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகு தான் கிடைத்தது. மூன்றாவது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். இவர்கள் அமெரிக்கா வுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப் பட்டவர்கள். தெற்கு மாநிலங்களில் பருத்திப் பண்ணைகளில் உழைத்துக்கொண்டிருந் தார்கள். இவர்களுக்கு 1965-ல்தான் முழு ஓட்டுரிமை கிடைத்தது.
நமது நாட்டில் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைத்தது 1949-ல் அரசியல் சட்டம் அமலுக்கு வந்தவுடன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்குப் பின்னால்தான் எல்லோரும் மனிதர்கள் என்ற தெளிவு அமெரிக்காவுக்கு வந்தது.
‘துனியா கா பாத்ஷா’
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. டெல்லியில் 2000-ல் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல். எனக்கு முக்கியமான ஒரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். எனவே காரில் இருந்தபடியே அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் “ஏன் இத்தனை நெரிசல்? எப்போது நிலைமை சீரடையும்?” என்று கேட்டேன். அவர் “உங்களுக்குத் தெரியாதா? துனியா கா பாத்ஷா (உலகின் சக்கரவர்த்தி) வந்திருக் கிருக்கிறார். அவர் எப்போது போகிறாரோ அப்போதுதான் நிலைமை சீராகும்” என்றார். எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போது டெல்லிக்கு வருகை தந்திருந்தது பில் கிளிண்டன். அன்றைய அமெரிக்க அதிபர்! உலகின் சக்கரவர்த்தியோ இல்லையோ உலகையே உலுக்கும் அதிகாரங்களைப் படைத்தவர் அமெரிக்க அதிபர் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. அவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்
தொடர்புக்கு: tigerclaw@gmail.com