

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் இலக்கிய வளர்ச்சிக்காக சாகித்திய அகாடமி 1954 மார்ச் 12இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் எழுத்து இலக்கியத்தில் பங்களிப்பு செய்தவர்களுக்கு விருது வழங்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்த அகாடமியில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி, கே.எம்.பணிக்கர், கே.எம்.முன்ஷி, ஜாகிர் ஹுசைன், உமா சங்கர் ஜோஷி, மகாதேவி வர்மா, டி.வி.குண்டப்பா, ராம்தாரிஷிங் தினகர் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். இதன் அலுவலகம் டெல்லி ரவீந்திர பவனில் தொடங்கப்பட்டு, இயங்கிவருகிறது.
1955இலிருந்து இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதும் வழங்கப்பட்டது. தமிழில் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் இன்பம்’ கட்டுரைத் தொகுப்புக்குச் சிறந்த நூலுக்கான சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
இந்தியாவின் மாநில மொழி இலக்கிய வளர்ச்சிக்காகக் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை சாகித்திய அகாடமி நடத்திவருகிறது; இலக்கிய வளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு இலக்கிய நல்கை அளித்துவருகிறது; தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இலக்கிய நூல்களையும் பதிப்பித்துவருகிறது; சாகித்திய அகாடமி விருது பெற்ற பிறமொழி நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிடுகிறது. அதேபோல் தமிழ் நூல்களையும் பிற மொழிகளில் பதிப்பித்துவருகிறது.
- விபின்