போதைப் பழக்கம்: உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

போதைப் பழக்கம்: உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
Updated on
2 min read

சமீபத்தில் பயிற்சி வகுப்பு தொடர்பாக கிராமப்புறப் பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு மாணவரிடம் சில வித்தியாசங்கள் தென்படவே, தனியாக அழைத்துப் பேசினேன். இளையோரிடம் பரவலாக உள்ள போதை வஸ்து வாய் முழுக்க நிறைந்திருந்தது.

“இங்க நிறையப் பசங்ககிட்ட இந்தப் பழக்கம் இருக்கு சார்” என்றார் அங்கிருந்த ஆசிரியர். அந்தக் குறிப்பிட்ட மாணவரிடம் பேசும்போது, அது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. “இதெல்லாம் ஒரு விஷயமா சார்? எல்லா ஸ்டூடண்ட்ஸ்கிட்டயும் இந்தப் பழக்கம் இருக்கு” என்று வெகு இயல்பாகச் சொல்லிச் சென்றார்.

மிகவும் பின்தங்கிய ஒரு மாவட்டத்தில், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அரசுப் பள்ளியிலேயே இத்தனை எளிதாக போதைப்பொருள் கிடைக்கும் நிலை இருக்கும்போது, சென்னை போன்ற பெருநகரங்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் பேரச்சமாக இருக்கிறது.

இதே போல், சமீப காலத்தில் போதைப்பொருட்கள் தொடர்பாக நான் எதிர்கொண்ட அனுபவங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு தொடர்பாக நம்முடைய மதிப்பீடுகள் மாறிவிட்டனவோ என்று என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் சுமார் மூவாயிரம் மாணவர்களிடம் போதைப்பொருட்கள் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தியது. ஏழு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 9% பேர் ஏதேனும் ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள்.

26% மாணவர்கள் மதுவையும், 23% பேர் பரவலாகக் கிடைக்கும் போதைப்பொருளையும், 22% பேர் ஏதேனும் ஒரு புகையிலைப் பொருளையும், 13% பேர் பெட்ரோலியம் சார்ந்த முகரும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு சொல்கிறது.

“எப்படி இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தீர்கள்?” என்ற கேள்விக்கு 45% பேர் சக நண்பர்களின் அழுத்தத்தினால் என்று கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான நேரம் மாணவர்களின் போதைப்பொருட்களுடனான தொடர்பு சக மாணவர்கள் வழியாகவே கிடைக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் அதைத் தமிழ்நாட்டில் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

பள்ளிக் கல்வித் துறை இது தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும், போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஏனென்றால், போதைப்பொருள் பழக்கத்தால் நிகழும் தற்கொலைகளில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடுதான் இருக்கிறது.

அதிகரித்துவரும் போதைப்பொருட்களின் பழக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களையும் இளைஞர்களையும் மீட்பது அரசின் கடமையாகும்.

குடிப்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக உள்ள மாநிலத்தில், போதைப்பொருட்கள் தொடர்பாக அதிக எதிர்ப்பற்ற மனநிலையையே குழந்தைகள் கொண்டிருப்பார்கள்.

போதைப்பொருட்களைக் கொண்டாடும் நிலைக்கு ஒரு சமூகமாக அதன் மீது கொண்டிருக்கும் மென்போக்கு ஒரு முக்கியமான காரணம். ஒருபுறம் திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் போதைப்பொருட்களைக் கொண்டாடிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடிமையானவர்களை அருவருப்புடனும் களங்கமாகவும் பார்க்கும் இந்தச் சமூக முரண்தான் இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.

இப்போதும்கூடப் பெருவாரியான போதைப்பொருட்களின் பழக்கத்தை நாம் பிரச்சாரங்கள் வாயிலாகவே எதிர்கொள்கிறோம். அதற்கான தெளிவான, நுணுக்கமான, ஆழ்ந்த திட்டமிடல்கள் நம்மிடம் இல்லை.

போதைப்பொருட்கள் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் மேலே சொன்ன முரண்பாடே அதற்குக் காரணம். அதை ஒரு தனிமனித ஒழுக்கவியல் பிரச்சினையாகச் சுருக்கிப் புரிந்துகொள்ளும்போது, நாம் அதற்காக என்ன மெனக்கெடல்களைச் செய்ய முடியும்?

என்ன செய்யலாம்?

முதலில் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும். வயது, அளவு, நேரம் போன்ற விஷயங்களில் எல்லாம் கறாரான நெறிமுறைகளை வகுத்துப் பின்பற்ற வேண்டும். தரமற்ற, கண்ணியமற்ற மது விற்பனை நடப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பின்னே உள்ளே பிரம்மாண்டமான சந்தையை எந்தவிதப் பாரபட்சமும் இன்றிக் கண்டறிந்து முடக்க வேண்டும்.

ஊடகங்களில் போதைப்பொருட்களைக் காட்டும் முறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதற்காகச் சில நெறிமுறைகளை வகுக்க வேண்டும். முக்கியமாக, ஊடகங்களும் இதில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் குழுவை ஒத்த சிந்தனையுள்ள மாணவர்களைக் கொண்டே ஏற்படுத்த வேண்டும், அதற்குத் தேவையான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் முரண்பாடுகளை மாற்றிக்கொண்டு, அதை வெளிப்படையாக அணுக வேண்டும். எந்தவித சாய்வுமின்றி, ஒழுக்கவியல் கோட்பாடுகளைப் புறந்தள்ளி அதை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாக உரையாட வேண்டும். அவர்களிடம் தெரியும் மாற்றங்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, அதை அலட்சியப்படுத்தாமல் முறையான உதவியைப் பெற வேண்டும்.

மாபெரும் சமூகப் பிரச்சினையாக உருவாகிக்கொண்டிருக்கும் இதில் மாணவர்களும் இளைஞர்களும் ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்களே. அதனால், இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல, ஒரு சமூகப் பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டு அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருட்களில் இருந்து மீண்டு வருவதற்கான நவீன சிகிச்சையை அளிக்கக்கூடிய சிறப்பு மையங்களை அரசாங்கமே தொடங்க வேண்டும். அதன் வழியாகப் பலப் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு சிகிச்சையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் வேண்டும்.

நவீன உலகில் அதிகரித்துவரும் போதைப்பொருட்களின் பயன்பாடு என்பது மாறிவரும் நமது வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள், பொருளாதார நெருக்கடிகள், தனிமனிதர்களின் மீதான புறவுலக நிர்ப்பந்தங்கள், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் போன்றவற்றின் வெளிப்பாடே அன்றி, அது ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல.

ஒரு சமூகம் தன்னளவில் அதன் மாண்புகளிலும், அற மதிப்பீடுகளிலும், தனிநபர் உரிமைகளிலும், நலனிலும் அக்கறையுடனும் அதை மேம்படுத்துவதில் உறுதியுடனும் இருக்கும்பட்சத்தில் போதைப்பொருட்கள் அற்ற ஓர் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும். ஆனால், அதற்கு உறுதியான செயல்பாடுகள் அவசியம்!

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், தொடர்புக்கு: sivabalanela@gmail.com

ஆகஸ்ட் 12 முதல் 19 - தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in