Published : 12 Aug 2022 07:26 AM
Last Updated : 12 Aug 2022 07:26 AM

இந்தியா 75 | அறிவியல்: வளர்ச்சியும்... குறைந்துவரும் கவனமும்

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு முகலாயர் ஆட்சிக் காலத்தில் 24% ஆக இருந்தது. ஆனால், காலனிய ஆட்சியில் இந்தியாவின் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்தது. காலனியச் சுரண்டலின் காரணமாகப் பொதுமக்களின் வாழ்வு பெரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டது.

நாடு விடுதலை அடைந்தபோது, இந்தியரின் சராசரி ஆயுள் வெறும் 31 ஆண்டுகள்தான். இன்று அது 70 ஆக உயர்ந்திருக்கிறது. காலரா போன்ற பெரும் கொள்ளைநோய்கள் பெரும் சேதத்தை விளைவித்திருந்தன.

1,000 குழந்தைகளில் ஊட்டச்சத்து இன்மை, நோய்கள் ஆகியவற்றால் பிறந்த ஒரே ஆண்டுக்குள் 145 குழந்தைகள் மடிந்தன. ஒரு லட்சம் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 2,000 தாய்மார்கள் பிரசவத்தில் மடிந்தனர். இன்று, குழந்தை இறப்பு விகிதம் வெறும் 28; பிரசவ மரணம் வெறும் 99. இந்திய அறிவியல் தொழில்நுட்பம் தோள் கொடுக்கக் காலனிய காலப் பின்னடைவுகளை எதிர்கொண்டு முன்னேற முடிந்துள்ளது.

தடைகளைத் தகர்த்து: நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு மிகப்பெரும் சவாலாக இருந்தது. புரதம் நிறைந்த அசைவ உணவு, பருப்பு ஆகியவற்றின் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கவே, அனைவருக்கும் எளிதாகப் புரதம் அளிக்கப் பால் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.

பால்பொடி தயாரித்தால் குழந்தைகளுக்கு ஊட்டம் அளிக்க முடியும் எனக் கண்டனர். ஊட்டம்மிக்க குழந்தை உணவு மூலம் குழந்தை இறப்பைத் தடுக்க முடியும்.

உலகில் அதிக கால்நடைகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. ஆனால், 1950-களில் நாளொன்றுக்குத் தலைக்கு 50 கிராம் என்ற அளவிலேயே பால் உற்பத்தி இருந்தது. பருவ காலம் சார்ந்து பால் சுரக்கும் அளவு வேறுபடும். பால் எளிதில் கெட்டுப்போகும் என்பதால், உற்பத்தியாகும் இடத்திலிருந்து சேகரித்து நீண்ட தொலைவு எடுத்துச்செல்லவும் முடியாது.

பசும்பாலிலிருந்து நீரை நீக்கிப் பதனம்செய்து, உலர் பால்பொடி தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தது. ஆனால், இந்தியாவில் எருமை மாடுகளே மிகுந்திருந்தன.

எருமை மாட்டுப் பாலைப் பதனம்செய்து உலர் பொடி செய்ய முடியாது என மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் கூறிவந்தனர். மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன (CFTRI) ஆய்வாளர்கள் இந்தச் சவாலை வெற்றிகொண்டனர்.

அதன் விளைவாக, இன்று நாளொன்றுக்கு தலைக்கு 100 கிராம் என்ற அளவில் பால் உற்பத்தி உயர்ந்திருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை பால்பவுடருக்கு மாற்றாக இந்தியத் தயாரிப்புகளும் உருவாகின. 1960-களில் வெளிநாடுகளிலிருந்து கப்பலில் தானியம் வந்திறங்கத் தாமதமானால் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை இருந்தது.

விடுதலை அடைந்தபோது தலைக்கு ஆண்டொன்றுக்கு 144 கிலோ தானியம்தான் கிடைத்துவந்தது. பசுமைப் புரட்சியின் விளைவாக இன்று 178 கிலோ வரை அது உயர்ந்திருக்கிறது.

மலேரியாவுக்கு மருந்துகள், அம்மைக்குத் தடுப்பூசிகள் ஆகியவற்றின் விளைவாகவே இந்தியர்களின் சராசரி ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகளைத் தயாரிக்கும் மாற்று முறைகளை ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு நிறுவனங்கள் முன்னெடுக்க, மருந்து உற்பத்தித் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

மேலை நாடுகளைவிட மருந்துகளின் விலை இந்தியாவில் பல மடங்கு குறைவாக இருப்பதால், சுமார் 100 நாடுகள் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்துகொள்கின்றன.

ராஜபாட்டை அல்ல: காலனிய அரசு சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது. ஆனால், அறிவியல் ஆய்வில் ஈடுபட இந்தியர்களுக்கு எளிதில் இடம்கொடுக்கப்படவில்லை.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள வசதி இல்லை என்பதால், காலனிய அரசுக்கு வெளியே இயங்கிய ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ என்ற நிறுவனத்தில்தான், நோபல் பரிசுபெற்ற தன் கண்டுபிடிப்பை சி.வி.ராமன் நிகழ்த்திக்காட்டினர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே இந்தியர்கள் நவீன அறிவியல் ஆய்வில் ஈடுபட முடிந்தது.

விடுதலைக்குப் பின்னர், நவீன இந்தியாவின் சிற்பிகள் காட்டிய முனைப்பின் காரணமாக 1,000 பல்கலைக்கழகங்கள், சுமார் 400 ஆய்வு நிறுவனங்கள் என இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது.

நவீன அறிவியல் திறன் படைத்த சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது. உலகில் உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபடும் 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

செயற்கைக்கோள் ஏவுகலத் தொழில்நுட்பம் அறிந்த ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அணு உலைகள் கொண்ட நாடுகள் உலகில் வெறும் 16 தான். அதிலும் அணுத் தொழில்நுட்பம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் அடக்கம். மருத்துவம், கணினி, மின்னணு எனப் பல நவீன அறிவியல் துறைகளில் இந்தியா நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.

செல்ல வேண்டிய தொலைவு: பசிக்கு வயிறார உணவு வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் பசுமைப் புரட்சி தேவையாக இருந்திருக்கலாம். ஆனால், பசுமைப் புரட்சியின் தீங்கான தொழில்நுட்பங்களை அகற்றி, எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்வதைப் போல், பசுமை விவசாயத்துக்கான ஆய்வை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

காலனியச் சுரண்டல் ஏற்படுத்திய வடு, சில மேலை நாடுகளின் முட்டுக்கட்டை ஆகியவற்றோடு இந்திய அறிவியல் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருப்பது சமூகநீதியற்ற இறுக்கமான சமூக அமைப்பு. பெண் கல்வி மறுப்பு, சாதிய ஒடுக்குமுறை, உயர்கல்வியில் குறிப்பிட்ட சமூகங்களின் ஏகபோக செல்வாக்கு போன்ற சமூகச் சூழலும் இந்திய அறிவியல் வளர்ச்சிக்குச் சவாலாக விளங்குகிறது.

ஆய்வும் மனிதவளமும் இன்னமும் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. ஆய்வுத் துறையில் பெண்கள், தலித் சமூகத்தினரின் பங்கேற்பு இன்னும் மிக குறைவாகத்தான் இருக்கிறது.

பிரிக்ஸ் (BRICS) எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் அறிவியலுக்கான நிதி ஒதுக்கீடு இந்தியாவில்தான் ஆகக் குறைவு. 1990-களில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) சுமார் 0.6% அறிவியலுக்கு ஒதுக்கப்பட்டுவந்தது. மெல்லமெல்ல அதிகரித்துவந்த நிதி ஒதுக்கீடு 2010-ல் 0.8% என உயர்ந்தது.

ஆனால், அதிலிருந்து குறைந்து தற்போது வெறும் 0.69% என்ற நிலையில் உள்ளது. தென்கொரியா போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.29%-ஐ அறிவியலுக்கு ஒதுக்குகின்றன; தென்னாப்பிரிக்கா 0.73%, சீனா 2.05%, ஜெர்மனி 2.87%, பிரேசில் 1.24% ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது நம்முடைய ஒதுக்கீடு மிகவும் குறைவு.

மிக அதிக ஜிடிபி-ஐக் கொண்ட சீனாவில், 1% என்பதே மிகக் கூடுதலான முதலீடாக அமையும். இந்தியாவின் ஜிடிபி கடந்த சில ஆண்டுகளில் சரிந்துகொண்டிருக்கிறது.

எனவே, முதலீடும் குறைந்துவருகிறது. ஒரு நாட்டின் வாங்கும் ஆற்றலை ஒப்பிட்டு, அறிவியலுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்கமுடியும்.

சீனா தனது மக்கள்தொகையில் தலைக்கு 269.2 அமெரிக்க டாலரும், தென்கொரியா 1484.7 டாலரும், ஜெர்மனி 1383.8 டாலரும், பிரேசில் 194.4 டாலரும், தென்னாப்பிரிக்கா 91.3 டாலரும் செலவிட, இந்தியா வெறும் 38.9 டாலர் மட்டுமே அறிவியலுக்குச் செலவுசெய்கிறது. சந்திரயான் முதல் எல்லா ஆய்வுச் செலவுகளும் இதில் அடங்கும்.

அறிவார்ந்த நுட்பத் திறன்மிக்க மனிதவளமே அறிவியல் வளர்ச்சிக்கு அச்சாணி. இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் அறிவியல் ஆய்வில் மனிதவளம் இல்லை.

ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு சதவிகித மக்கள் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது அந்த நாட்டினுடைய அறிவியலின் நிலையைத் தெரிவிக்கும்.

இந்தக் கணக்கின்படி, 10 லட்சம் பேருக்கு தென்கொரியாவில் 7,980, சிங்கப்பூரில் 6,803, ஜப்பானில் 5,331, மலேசியாவில் 2,379, ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,379, ஈரானில் 1,475, சீனாவில் 1,307, வியட்நாமில் 708, கத்தாரில் 577, பாகிஸ்தானில் 336, இலங்கையில் 106 நபர்கள் அறிவியலில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 253 பேர்தான்.

அறிவுசார் பொருளாதாரம் (Knowledge Economy) உருவானதாகக் கருதப்படும் 2000ஆம் ஆண்டில் இருந்த நிலையைவிட, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எண்ணிக்கை சீனாவில் ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குகூட உயரவில்லை.

உயர்கல்வி கற்றவர்களிடையே வேலையின்மை அதிகரித்துவருகிறது. இந்தியாவில் முதுகலைப் பட்டம் பெற்று வேலை இல்லாமல் இருப்பவர்களில் 62.8% அறிவியலில் முதுகலை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. படித்தால் வேலை கிடைக்காது எனும் நிலையில் அறிவியல் கற்க யார் முன்வருவார்கள்?

- த.வி.வெங்கடேஸ்வரன், விக்யான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x