

ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் பார்வையாளர்களின் முன்பாக உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, இஸ்லாமிய உலகத்துக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவிருப்பதாகச் சொன்னார். அவநம்பிக்கை மிகுந்த ஆண்டுகளைக் கடக்க முயற்சி செய்த அவர், இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதி முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அது தொடர்பாக நிலையான கொள்கை எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய அதிபர், முந்தைய அதிபர்களின் தவறுகளைச் சரிசெய்வதுடன், மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுடனான அமெரிக்காவின் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்துவைப்பார் என்று பெரிதும் நம்பப்பட்டது. வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் புரட்சிகரமான மாற்றத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறாரா?
ஒபாமாவின் விமர்சகர்கள், ஆதரவாளர்கள் உட்பட, அப்படிச் செய்திருக்கிறார் என்று நம்புபவர்கள் பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார்கள். ‘அமெரிக்கா ஒரு சாத்தான்’ என்று அழைக்கும் தலைவர்கள் நிறைந்த ஈரானுடன் ஒபாமா அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தினார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் விஷயத்தில் வழக்கமான சமன்பாடுகளையும் மீறி ஒபாமா அரசு செயல்பட்டது. இஸ்ரேல் விஷயத்தில் எதிர்ப்பு நிலையுடன் செயல்பட்ட ஒபாமா, சவுதி அரேபியாவின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றார். அமெரிக்காவில் உள்ள விமர்சகர்களும், பிராந்திய நட்பு நாடுகளும் பெரும் அழுத்தம் தந்த நிலையிலும், சிரியா அரசு மீது தாக்குதல் நடத்த மறுத்தார். அமைதியை நிலைநாட்டுவதில் தாராளமயக் கொள்கை கொண்டவர் ஒபாமா என்று சிலர் கூறுவதற்கும், அவரது ஆட்சியில்தான் மேற்கு ஆசியாவிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியது என்று வேறு சிலர் கூறுவதற்கும் இந்த நிகழ்வுகள் காரணமாக அமைந்தன.
புஷ்ஷைப் பின்பற்றிய ஒபாமா
புஷ் ஆட்சியோடு ஒப்பிடுகையில், ஒபாமாவின் அணுகுமுறை நிச்சயம் வேறு மாதிரியானது. புஷ் மிகவும் ஆக்ரோஷமானவர் (பெரிய அளவில் வியூகங்கள் இல்லாதவரும்கூட). அவர் தொடங்கிவைத்த சில விஷயங்களைத் தாண்டி, பிராந்திய அளவிலான பெரும் சவால்களைக் கையாள வேண்டியிருக்கவில்லை. ஆனால், ஒபாமாவுக்கு இராக்கில் போரைத் தொடர வேண்டியிருந்தது. ஈரான் விஷயத்தில் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல நாடுகளில் வளர்ந்து வந்த ஜிகாதி அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக, அரபு நாடுகளில் உருவான போராட்டங்களையும் மறந்துவிடக் கூடாது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விரிவாகப் பார்க்கும்போது, லட்சியத்துடன் உயர்ந்துவந்த சீனாவையும், பழி தீர்க்கும் எண்ணத்துடன் புத்துயிர் பெற்ற ரஷ்யாவையும் ஒபாமா அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்ததைப் பார்க்கலாம். எனவே, நிலையான ஒரு புதிய கொள்கை தவிர்க்க முடியாததாக இருந்தது.
இராக் விஷயத்தை எடுத்துக்கொள்வோம், புஷ் ஆட்சிக் காலத்திலேயே இராக் மீதான போருக்கு அமெரிக்காவில் வரவேற்பு குறைந்து விட்டது. 2011 டிசம்பருக்குள் இராக்கின் அனைத் துப் பகுதிகளிலிருந்தும் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்குக் கெடு விதித்தது புஷ்தான். அந்தத் திட்டத்தை ஒபாமா அப்படியே பின்பற்றினார். படைகளை அவர் திரும்பப் பெற்றார். ஆனால், இராக் அரசியல் மீதான தனது பிடியை விட்டுவிடவில்லை. ஏனெனில், மேற்கு ஆசியாவில் பேரழிவைத் தந்த, வெறுக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது, இஸ்லாமிய உலகத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்கக் கூடிய அவரது வெளியுறவுக் கொள்கைக்குப் பொருத்தமானதாக இருந்ததுடன், பிற சவால்கள் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு உதவியாகவும் இருந்தது.
ஒபாமாவின் ராஜதந்திரம்
2014-ன் தொடக்கத்தில் ஐஎஸ் படைகள் இராக் நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய பின்னர், அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளானது. அமெரிக்கப் படைகள் அவசரப்பட்டு திரும்பப் பெறப்பட்டன என்றும், இந்நடவடிக்கை இராக் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அமெரிக்க படையெடுப்பின் உச்சகட்ட காலமான 2006-07 காலகட்டத்தில் பெரிய அளவில் நிகழ்ந்த உயிரிழப்புகளையும், இன அடிப்படையில் நடந்த உள்நாட்டுப் போரையும் இந்த விமர்சகர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். எனவே, இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அந்நாட்டில் ஜிகாதி வன்முறைச் சம்பவங்கள் நடப்பதைத் தடுத்துவிடவில்லை. மறுபுறம், இராக் அரசின் குறுங்குழுமயம், சிரியாவில் ஏற்பட்ட குழப்பம் போன்றவை ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்குக் காரணமாக இருந்தன.
இராக்குடனான அமெரிக்காவின் போர், இராக் ஆட்சி அதிகாரத்தில் ஷியா முஸ்லிம்களின் எழுச்சி போன்றவை, அப்பகுதியில் ஈரானின் இருப்பை பலப்படுத்தின. எனவே, ஈரான் அணுசக்தி விவகாரத்தைக் கையாள்வதில் அனைத்துவிதமான வாய்ப்புகளும் இருக்கின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தபோதிலும், சாத்தியமான ஒரே வழி என்று ஒபாமா நம்பியது ராஜதந்திரத்தைத்தான். அதற்காக அவர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ஒரு பக்கம் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திய அவர், மறுபுறம் ஈரான் ஆட்சியாளர்களை அமைதிப் புறாவுடன் அணுகினார். இந்த அணுமுறை கை கொடுத்தது. ஏற்கெனவே பொருளாதாரச் சுமைகளால் துவண்டுபோயிருந்த நிலையில், மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படலாம் என்ற பயத்தில் இருந்த ஈரான் ஆட்சியாளர்களிடமிருந்து இதற்கு ஆக்கபூர்வமாக எதிர்வினை வந்தது.
பத்து ஆண்டுகள் தாமதம்
இந்த ஒப்பந்தம், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய நட்பு நாடுகளான இஸ்ரேல், சவுதி அரேபியாவுடன் முரண்பாடுகளைக் கொண்ட ஈரானுக்கு பலம் சேர்த்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடுகளுடனான அடிப்படை உறவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒபாமா மாற்றிக்கொள்ளவில்லை. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதும் ஈரானைப் பலம் பொருந்திய சக்தியாக மாற்றின என்பது உண்மைதான். ஆனால், ஈரான் ஒரு அணுசக்தி நாடாக மாறுவதை, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்குத் தாமதப்படுத்தியிருக்கிறது இந்த ஒப்பந்தம்.
இஸ்ரேல்தான் அந்தப் பிராந்தியத்தின் ஒரே அணு ஆயுத நாடு என்ற நிலையையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் தரப்பைச் சரிக்கட்ட, பாலஸ்தீனர்கள் மீதான அந்நாட்டின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் அமெரிக்கா விட்டுவிட்டது. 1967-லிருந்து ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம்கூடக் கொண்டுவராமல் பார்த்துக்கொண்ட முதல் அமெரிக்க அரசு ஒபாமாவுடையதுதான். இவை போக, இஸ்ரேலுக்கு 10 ஆண்டுகளுக்கு ரூ. 2.5 லட்சம் கோடியை ராணுவ நிதியாக வழங்குவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் மிகப் பெரிய ராணுவ நிதி இது. சவுதி அரேபியா விஷயத்திலும் இதையே செய்தார் ஒபாமா. யேமன் மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில், அந்நாட்டுடன் ரூ. 4 லட்சம் கோடிக்கான ராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்படுத்திக்கொண்டது.
ஒபாமாவின் சமாளிப்பு
சிரியா தொடர்பான ஒபாமாவின் கொள்கையிலும் இந்தச் சமாளிப்பு வேலைகளைப் பார்க்க முடியும். நிலைமை மோசமடைவதற்குக் காரணம், சிரியா விவகாரத்தில் தலையிட அவர் தயக்கம் காட்டுவதுதான் என்று அவரது விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த வாதம் வரலாற்று அடிப்படையிலானது அல்ல. ஒபாமா ஒன்றும் ராணுவத் தலையீடுகளைக் கொள்கைரீதியாக எதிர்க்கும் அதிபரல்ல. லிபியாவில் அவர் ராணுவத்தைப் பயன்படுத்தினார். அங்கு தற்போது நிலவும் குழப்ப நிலைக்கு அவரும் ஒருவிதத்தில் பொறுப்பு. அபாயம் குறைவு எனும் சூழலில் ராணுவத்தைப் பயன்படுத்துவதுதான் ஒபாமாவின் வழிமுறை.
லிபியாவைத் தாக்குவது என்பது குறைந்த அபாயம் கொண்ட விஷயம். ஆனால், சிரியா விவகாரம் அப்படியல்ல. மேற்கு ஆசியாவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நாடான சிரியா, ரஷ்யாவின் நட்பு நாடு. ஈரானுடனும் நெருக்கம் உண்டு. சிரியா மீதான நேரடி நடவடிக்கை, ஏற்கெனவே இருக்கும் நெருக்கடியை மேலும் முற்றச் செய்துவிடும். அந்நாட்டு அதிபர் பஷார் அல் அஸாதுக்குப் பின்னர், அங்கு நிலைமை என்னவாகும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஏனெனில், அவரது ஆட்சிக்கு எதிரானவர்களில் பல தரப்பினர் உள்ளனர். படுபயங்கரமான ஜிகாதி குழுக்களும் இதில் அடக்கம். சிரியா விவகாரத்தில் ஒபாமா நேரடியாகத் தலையிடவில்லைதான். ஆனால், ஆரம்பத்திலிருந்தே வேறு சில ஏற்பாடுகள் மூலம் இவ்விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து பங்கெடுத்துவருகிறது. அஸாதுக்கு எதிரான புரட்சிப் படைகளில் ஒரு சில பிரிவினர் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுபவர்கள். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள்; அஸாத் அரசுக்கு ரஷ்யாவின் ஆதரவு இருப்பதுபோல். சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டுவருவதில் அமெரிக்காவும் ரஷ்யாவும் முயற்சி செய்துவருவதன் முக்கியப் பின்னணி இதுதான்.
தொடர்ந்த மனித உரிமை மீறல்கள்
இவற்றையெல்லாம் தொகுத்து விரிவான அளவில் பார்த்தால், ஒரு அதிபராக ஒபாமா - குறைந்த அபாயம் கொண்ட சூழலில் ராணுவத்தை நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்ப தையும், வேறு வழியே இல்லை என்ற சூழலில் ராஜதந்திர வழிமுறையையே தேர்வுசெய்தார் என்பதையும், சிக்கலான தருணங்களில் வேறு தரப்பு மூலம் போர் நடத்துவதையும், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் அராஜகங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வந்ததையும் புரிந்துகொள்ள முடியும். அவரது வழிமுறைகள் லட்சியவாதம் அல்ல. மேற்கு ஆசியப் பிராந்திய மக்களுக்கு எந்த ஒரு புதிய தொடக்கத்தையும் இவை பிரதிபலிக்கவில்லை. மேற்கு ஆசியாவிலிருந்து அமெரிக்கா பின்வாங்கவும் இல்லை. ஒபாமா செய்திருப்பதெல்லாம், அமெரிக்காவின் மேற்கு ஆசியக் கொள்கையில் பனிப்போர் அரசியலின் இரக்கமற்ற நிஜ நடப்பை மீட்டெடுத்ததுதான்!
‘தி இந்து’ (ஆங்கிலம்),
தமிழில்: வெ.சந்திரமோகன்
ஆங்கில கட்டுரைக்கான லிங்க்: >A post-American West Asia? |