

ஆங்கிலேய அரசாங்கம் அரசுக் கல்லூரிகளைத் தொடங்கியபோதே அரசின் உதவியுடன் தனியார் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியது. 1871இல் சென்னை மாகாணத்தில் 4 அரசுக் கல்லூரிகளும் 7 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் செயல்பட்டன.
இவற்றில் பெரும்பாலானவை கலை - அறிவியல் கல்லூரிகளே. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1981இல் தமிழகத்தில் செயல்பட்ட மொத்த கலை - அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 195. அவற்றில் 51 அரசுக் கல்லூரிகள்; அரசு உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை 144ஆக இருந்தது.
வரலாற்றுப் பின்னணி
தமிழகத்தில் 1980-களின் தொடக்கம் வரை அரசு, அரசு உதவிபெறும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்துவந்தநிலையில், 1981இல் பாலிடெக்னிக் பிரிவிலும் 1984இல் கலை - அறிவியல் பிரிவிலும் அரசு உதவி இல்லாமல் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. 1990-களில் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் சுயநிதிப் படிப்புகளை வழங்கவும் அனுமதிக்கத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, புதிதாக அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனுமதியையும் நிறுத்திக்கொண்டது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், அந்தப் பிரிவில் புதிதாகப் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதையும் நிறுத்திவிட்டது. இதனால், வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்கக்கூடிய கணினி அறிவியில் போன்ற பல பாடப்பிரிவுகள் சுயநிதிப் பிரிவில்/ கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்டன.
இதன் காரணமாக, அதிகக் கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உருவானது. இதன் விளைவாக, கடந்த 30 ஆண்டுகளில் அரசு - அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு, சுயநிதிக் கல்லூரிகள்/ படிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தன.
இன்றைய கணக்குப்படி, தமிழகத்தில் மொத்தம் 908 கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 147 அரசுக் கல்லூரிகளாகவும் 140 அரசு உதவிபெறும் கல்லூரிகளாகவும் 600-க்கும் மேற்பட்டவை சுயநிதிக் கல்லூரிகளாகவும் செயல்படுகின்றன.
சுயநிதிக் கல்லூரிகளின் வருகைக்குப் பிறகு, அதுவரையிலும் சேவையாகப் பார்க்கப்பட்டு வந்த கல்வி, வணிகமாக மாறியது. ஆரம்பத்தில் பெரிதும் லாப நோக்கமற்று சேவை நோக்கத்துடன் செயல்பட்ட அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள்கூட, 1990-களில் சுயநிதிப் பிரிவைத் தொடங்க அனுமதிக்கப்பட்ட பிறகு, லாப நோக்கத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டன என்பதை மறுக்க முடியாது.
இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும்கூட, அரசுக் கல்லூரிகளும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவிபெறும் பிரிவுகளும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகமாகும் கல்வி
சமீபத்தில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி தொடர்பிலான மாணவர் போராட்டங்களை இந்த வரலாற்றுப் பின்புலத்திலிருந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் 1990-களுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக அரசு உதவிபெறும் பிரிவுகளுடன் சுயநிதிப் பிரிவுகளும் அக்கல்லூரியில் தொடங்கப்பட்டன.
சுயநிதிப் பிரிவில் லாபம் அதிகம், அரசின் கட்டுப்பாடுகளும் குறைவு என்பதால், அரசு உதவிபெறும் பிரிவுகளை நிறுத்திவிட்டு, முழுமையாக சுயநிதிக் கல்லூரியாக இயங்கும் முயற்சிகளில் இறங்கியது கல்லூரி நிர்வாகம். அரசு உதவிபெறும் பிரிவில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சுயநிதிப் பிரிவில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ஒரு கட்டத்தில் எந்தவொரு துறையிலும் அரசு உதவிபெறும் ஆசிரியர் இல்லாத நிலை உருவானது. கரோனா பொதுமுடக்கச் சூழலில், அரசு உதவிபெறும் பாடப் பிரிவில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிறுத்திக்கொள்ளப்பட்டது. சென்னையின் வளர்ச்சி காரணமாக மையப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் என்ணிக்கையிலான தொழிலாளர்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர் போன்ற புறநகர்ப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கு ஏதுவாக உள்ள ஒரே கல்லூரியாக துரைப்பாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி அமைந்திருந்தது. இந்த முக்கியத்துவத்தைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டு சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது மாணவர் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கை.
அதற்கான வெளிச்சங்கள் தெரிகின்றன. அரசு உதவிபெறும் கல்லூரிகள் படிப்படியாக எண்ணிக்கை குறைந்து இல்லாமலே போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியதாக இருக்கும். அதை நடைமுறைப்படுத்துவதிலும் உறுதியாக நிற்க வேண்டும்.
- ப.அருண் கண்ணன், பேராசிரியர், தொடர்புக்கு: arunkannandrf@gmail.com