

தமிழ்நாட்டில் இளையோரின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
குழந்தைகளைக் கிணற்றில் வீசித் தாய் தற்கொலை, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தாய் தற்கொலை எனப் பலவிதமாகப் பல மாவட்டங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடக்கும் மாபெரும் சமூக அவலமாக இது உருவெடுத்திருக்கிறது.
குறிப்பாக, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிக் குழந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை, அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற குழந்தைகளால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் தாய்மார்களே இந்தச் செயலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
குடிகாரக் கணவன், வரதட்சிணைக் கொடுமை, குழந்தைகளுக்கு மூன்று வேளையும் உணவளிக்க இயலாமை, குழந்தைகளின் மருத்துவச் செலவினங்கள், குழந்தைகளை ஒற்றை ஆளாகக் கவனித்துக்கொள்ள இயலாமை போன்ற காரணங்களால் தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்வதாகச் சொல்லப்படுகிறது.
காரணம் என்ன?
இந்தப் பின்னணியில், தாய்மார்கள் முந்தைய காலத்தைவிட, இப்போது அதீத மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதிகரிக்கும் தனிக்குடித்தனங்கள்தான் இதற்கு முக்கியக் காரணமா? இந்தத் தாய்மார்களின் மனநிலை என்ன? அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை சரியாக விவாதிக்கப்படவில்லை. ஏன் சாகிறோம், எதற்குச் சாகிறோம் என்பதே தெரியாமல் எத்தனை குழந்தைகள் இதுவரை மாண்டுள்ளன என்பது குறித்தும் இச்சமூகம் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மாறாக, ‘பெற்ற குழந்தைகளைக் கொல்ல எப்படித்தான் இந்தப் பெண்களுக்கு மனம் வருகிறதோ... இறப்பதாக இருந்தால் நீங்கள் மட்டும் இறந்துபோக வேண்டியதுதானே’ என்பன போன்ற கேள்விகள்தான் எழுகின்றனவே ஒழிய, இந்தத் தற்கொலைகளைத் தடுக்க எந்தவித முன்னெடுப்பும் இதுவரை தொடங்கப்படவில்லை.
தீர்வை நோக்கி...
கடும் விலைவாசி உயர்வு இந்தத் தற்கொலைகளுக்கு மிக முக்கியமான காரணம். இந்த நிலையில்தான் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவச அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆலோசனைகள் வழங்கிவருகின்றன.
மலக்குழி மரணங்கள், ஆணவக்கொலை மரணங்கள் பற்றி சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு தீவிரமாகக் குரல் கொடுத்தாலும் இதுவரை தேசத்தை ஆண்ட அரசுத் தரப்புகள் செவிமடுக்கவில்லை என்பதே இத்தனை மரணங்களுக்கும் காரணம்; அந்த வரிசையில் இப்போது தாய்மார்களின் தற்கொலைகளும் சேர்ந்துவிட்டன.
இதுவரை குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட தாய்மார்களின் வாழ்க்கைச் சூழலை ஆராய்ந்து, அதுபோன்ற சூழலில் இருக்கும் தாய்மார்களை உடனடியாகக் கண்டறிய வேண்டும். அவர்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மனநல ஆலோசனை, சிறப்பு உதவித்தொகை ஆகிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற துர்மரணங்கள் தொடரவே செய்யும்.
- யுவராஜ் மாரிமுத்து
தொடர்புக்கு: yuvarajmarimuthu1203@gmail.com