அறிவோம் நம் மொழியை: குழப்பங்கள் உருவாவது எப்படி?
வாக்கியக் குழப்பங்கள் பலவிதமாக இருந்தாலும், அவற்றின் மூல வேர் வாக்கியத்தை அமைக்கும் விதத்தில் இருக்கிறது. ‘மரங்களை அரசு உத்தரவின் பேரில் சாலைகள் அமைப்பதற்காகப் பொதுப்பணித் துறை ஊழியர்களால் வெட்டப் பட்டன’ என்ற வாக்கியத்தைப் பாருங்கள். ‘மரங்கள்’ என்று இருந்திருக்க வேண்டும். அல்லது, ‘ஊழியர்கள் வெட்டினார்கள்’ என்று இருந்திருக்க வேண்டும்.
ஓரளவு தமிழ் அறிந்தவர்களுக்குக்கூட இதுபோன்ற விஷயங்கள் தெரியும். ஆனால், இதுபோன்ற பல தவறுகள் ஊடகங்களிலும் நூல்களிலும் வரத்தான் செய்கின்றன. இவற்றை எழுதுபவர்கள் தமிழ் அறியாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படியானால், இதுபோன்ற தவறுகள் ஏன் வருகின்றன?
மேலே உள்ள வாக்கியத்தை இப்படி மாற்றிப் பாருங்கள்: ‘அரசு உத்தரவின் பேரில் சாலைகள் அமைப்பதற்காகப் பொதுப் பணித் துறை ஊழியர்களால் மரங்களை வெட்டப்பட்டன’ - இந்த வாக்கியத்தில் தவறு சட்டென்று தெரிந்துவிடுகிறது அல்லவா? எனவே, உடனடியாக ‘மரங்கள் வெட்டப்பட்டன’ என்று திருத்தப்பட்டுவிடும்.
பிரச்சினை எங்கே இருக்கிறது? அதாவது, தவறு நிகழ்வதற்கும் அந்தத் தவறு கண்ணில் படாமல் போவதற்குமான காரணம் என்ன?
நீண்ட வாக்கியம் என்பது ஒரு பிரச்சினை. ‘மரங்கள் வெட்டப்பட்டன’ என்றோ ‘மரங்களை வெட்டினார்கள்’ என்றோ எழுதும்போது செய்வினை, செயப்பாட்டு வினை குழப்பம் வருவதில்லை. வாக்கியத்தின் நீளம் கூடக்கூட அதில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் கூடிவிடுகிறது. இயல்பாகக் கண்ணில் படும் தவறுகள் நீண்ட வாக்கியங்களில் கண்ணில் படாமல்போகலாம். எனவே, கூடியவரையில் நீண்ட வாக்கியங்களைத் தவிர்க்கலாம் அல்லது நீண்ட வாக்கியங்களை எழுதும்போது கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்த பிரச்சினை, நாம் தொடர்ந்து விவாதித்துவரும் எழுவாய் தொடர்பானது. ஒரு வாக்கியத்தை எழுவாயிலிருந்து தொடங்குவதில் தவறு இல்லை. ஆனால், அதன் பயனிலைச் சொல்லுக்கு முன்பு ஏகப்பட்ட விவரங்களை அந்த வாக்கியத்தில் தரும்போது எழுவாயும் பயனிலையும் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகின்றன. எனவே, எழுவாயைப் பொறுத்து அமையக்கூடிய ஒருமை, பன்மை, செய்வினை, செயப்பாட்டு வினை முதலான அம்சங்கள் சட்டென்று கவனத்துக்கு வருவதில்லை.
மேற்படி வாக்கியத்தில் மரங்கள் என்னும் எழுவாயையும் வெட்டப்படுதல் / வெட்டுதல் என்னும் வினைச் சொல்லையும் அருகருகே அமைக்கும்போது தவறு நேர்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடுவதைக் காணலாம். அப்படியே தவறு நேர்ந்தாலும் அது உடனே நம் கண்ணில் பட்டுவிடுகிறது.
எழுவாய், பயனிலையின் வரிசையை மாற்றுவதாலும் பிரச்சினை வருவதைச் சென்ற வாரம் பார்த்தோம். ‘சொல்கிறது தகவல்கள்’ என்று ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. தகவல்கள் என்னும் சொல்லை முதலில் அமைத்திருந்தால் சொல்கின்றன என்னும் பன்மைச் சொல் இயல்பாகவே வந்து விழுந்திருக்கும். எழுவாய்க்குப் பிறகு பயனிலை என்று அமைத்துக்கொண்டால் காலம், ஒருமை - பன்மை, செய்வினை - செயப்பாட்டு வினை ஆகியவை இயல்பாகவே சரியாக அமைந்துவிடும். மாற்றித்தான் அமைக்க வேண்டும் என்று விரும்பினால், கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
