

பாலின சமத்துவம் வழங்குவதில் இந்தியா எவ்வளவு மோசமாக உள்ளது?: உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட பாலின சமத்துவத் தரவரிசையில் இடம்பெற்றுள்ள 146 நாடுகளில் இந்தியா 135ஆவது இடத்தில் உள்ளது.
நேபாளம், வங்கதேசம், மயன்மார் (பர்மா), பூடான், சீனா, இலங்கை ஆகிய இந்தியாவின் மற்ற அண்டை நாடுகள் சிறந்த தரவரிசை நிலைகளைக் கொண்டுள்ளன. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானைவிட இந்தியா 11 இடங்கள் மட்டுமே மேலே உள்ளது.
இது மிகவும் கவலைக்குரியது. ஏனெனில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2016-ல், இந்தியா 87ஆவது இடத்தில் இருந்தது. WEFஇன் கூற்றுப்படி, இந்தியாவை உள்ளடக்கிய தெற்காசிய மண்டலத்தில் பாலின இடைவெளியைக் களைவதற்குச் சுமார் 200 ஆண்டுகள் தேவைப்படலாம்.
இடைவெளி ஏன் அதிகரிக்கிறது?: உலகளவில் பெண்கள் மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கருத்தில் கொண்டால், இந்தியாவில் பாலின சமத்துவ இடைவெளி அதிகமாக உள்ளது. பெண்கள் மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியா தற்போது 48ஆவது இடத்தில் உள்ளது.
இது நல்ல அம்சமாகத் தோன்றலாம். ஆனால் 2016இல், இந்தியா உலகளவில் ஒன்பதாவது இடத்திலிருந்தது. 2017இல் 15ஆவது இடத்துக்கும்; 2018இல் 19ஆவது இடத்துக்கும்; 2021இல் 51ஆவது இடத்துக்கும் சரிந்தது.
கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்துக்கான தலைமைப் பதவியில் பெண்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அளவு குறைந்துவருவதால், அரசியல் அதிகாரமளித்தலுக்கான மதிப்பெண்கள் இந்தியாவுக்கு வெகுவாகக் குறைந்துள்ளன.
எந்த அளவுகோல்களில் இந்தியா மோசமாக உள்ளது?: உடல்நலம் - உயிர்வாழ்தல், பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்புகள் ஆகிய தரவரிசைகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த இரண்டு அளவுருக்களிலும், மொத்தம் உள்ள 146 நாடுகளில் இந்தியா 143ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த அளவுருக்களில் இந்தியாவின் மதிப்பெண்ணும் தரவரிசையும் எப்போதும் குறைவாகவே உள்ளன. WEF அறிக்கையின்படி, குழந்தை பிறப்பில் இருக்கும் குறைந்த பாலின விகிதம் காரணமாக, உடல்நலம் - உயிர்வாழ்தல் தரவரிசையில் பின்தங்கி உள்ளது. சமீபத்திய தேசியக் குடும்பநல சுகாதாரக் கணக்கெடுப்பின்படி (NFHS), கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்கிற அளவில் உள்ளது.
இருந்தாலும், உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தை பிறப்பில் இயற்கையான பாலின விகிதம் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 952 பெண்கள் என்று மதிப்பிட்டுள்ளது. பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்புகள் என்று வரும்போது, தொழிலாளர்கள் கணக்கெடுப்பின் 2020-21 ஆண்டு அறிக்கையின்படி, இந்தியத் தொழிலாளர்களில் பெண்களின் பங்கேற்பு விகிதம் வெறும் 23.15 சதவீதமாக உள்ளது.
மாறாக, ஆண்களின் பங்கேற்பு 57.75 சதவீதமாக உள்ளது. 2019-21 கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 25.2 சதவீதம் பேர் வேலையில் இருந்தனர். அதே நேரத்தில், கணக்கெடுக்கப்பட்ட ஆண்களில் 74.8 சதவீதம் பேர் வேலையில் இருந்தனர்.
“நைஜீரியா, அர்ஜெண்டினா, மெக்சிகோ, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகள் 65 சதவீதத்திற்கும் குறைவான செல்வச் சமத்துவத்தைக் கொண்டிருக்கும், சமத்துவமற்ற பொருளாதாரங்களாக உள்ளன” என்று பாலின இடைவெளி அறிக்கை கூறுகிறது. அதாவது, இந்த நாடுகளில் ஆண்கள் உருவாக்கும் செல்வத்தில் 65 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் சம்பாதிக்கிறார்கள். ஓய்வுபெறும்போது, இந்தியாவில் பெண்கள் சம்பாதிக்கும் விகிதம் சராசரியாக 60 முதல் 64 சதவீதம் வரையே உள்ளது.
இந்தச் சரிவைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?: இந்தியாவில் பதவி வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துவருவதை WEFஇன் அறிக்கை விமர்சித்துள்ளது. மக்களவை, அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்மொழியும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது இந்த நிலையை மேம்படுத்த உதவும். அனைத்துப் பணிகளிலும் பாலின ஊதிய இடைவெளியைச் சீரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உலக சமத்துவமின்மை அறிக்கை 2022இன் மதிப்பீட்டின்படி, இந்தியாவில், தொழிலாளர் வருமானத்தில் ஆண்கள் 82 சதவீதம் சம்பாதிக்கிறார்கள். அதே வேளை, பெண்கள் 18 சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூக-பொருளாதார நலன்கள் கிடைப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட பாலின வரவு-செலவுத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
பாலின சமத்துவத்தில் சிறப்பாகவும் மோசமாகவும் செயல்பட்ட நாடுகள் எவை?: ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 145, 146 ஆகிய இடங்களைப் பிடித்து, கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
தொகுப்பு: ஹுசைன்