

ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, வறுமையற்ற வளர்ச்சி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் நாடு தைவான். சீனாவுடன் தொடக்கத்திலிருந்தே தொடரும் முரண்பட்ட உறவு, எப்போது போர் மேகங்கள் சூழுமோ என்கிற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் யுத்தத்தையும் அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் எடுத்திருக்கும் கொள்கைரீதியான முடிவுகளையும் வைத்துப்பார்க்கிறபோது, தைவான் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் அதுவும் உக்ரைனைப் போல தனித்துவிடப்படுமோ என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.
அமெரிக்கா நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பொலோசி, தன்னுடைய கிழக்காசிய சுற்றுப்பயணத்தின்போது தைவானுக்குச் சென்று அந்நாட்டின் அதிபர் ஸாய்ங்-வென்னைச் சந்தித்திருக்கிறார்.
இது தைவானுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை உறுதிப்படுத்தினாலும், இந்நடவடிக்கைகள் சீனாவைச் சீண்டிவிடுவதாகவும் அமைந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீன வெளியுறவுத் துணை அமைச்சர் ஸீ பெங்க், அமெரிக்காவின் சீனத் தூதருக்குத் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்திருப்பது மட்டுமல்லாமல், அதற்கான விலையை அமெரிக்கா கொடுத்தே தீர வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபருக்கும் இடையிலான சமீபத்திய இணையவழிப் பேச்சுவார்த்தையின்போது, தைவானுக்கு ஆதரவான - சீனாவுக்கு எதிரான எந்தப் போக்கையும் சீனா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று சீன அதிபர் கூறியதும் கவனத்துக்குரியது.
அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளின் பகையை எதிர்கொள்ளும் எந்தவொரு நாடும், இன்றைக்கு உக்ரைன் எதிர்கொண்டுள்ள நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எழுதப்படாத விதியாகத் தொடர்கிறது. ஒருவேளை, தைவானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் சீனாவிடமிருந்து தாக்குதல்கள் நேரலாம் என்று அஞ்சியிருக்க வேண்டியதில்லை என்பதுதான் எதார்த்த நிலை.
உதாரணத்துக்கு, வடகொரியாவையே எடுத்துக்கொள்ளலாம். தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை உலகுக்குக் காட்டிக்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அந்நாடு புதிய ஏவுகணைகளைச் சோதித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
அங்குள்ள மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா, மூன்று வேளை உணவு கிடைக்கிறதா, போதிய மருத்துவ வசதி இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் எந்தச் செய்தியும் சர்வதேசச் சமூகத்துக்குத் தெரியாது. கரோனா தொற்றுப்பரவலை அந்நாடு எவ்வாறு எதிர்கொண்டது, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் குறித்த தகவல்கள் இல்லை.
ஆனால், சீனாவின் மறைமுக ஆதரவோடு வடகொரியாவின் கிம் ஜாங்-உன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நாட்டுடன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் மிக எளிதானது. வடகொரியா தன்னிடம் இருப்பதாகக் கூறும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடுமோ என்ற ஆபத்து இருப்பது மட்டுமே.
அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கை (NPT), முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு (CTBT) ஆகிய அணு ஆயுத உடன்படிக்கைகளில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை. ஆனால், அந்நாடு அணு ஆயுதங்கள் வைத்திருப்பது உலக நாடுகள் அனைத்துக்கும் தெரியும்.
ஆனால், எந்த நாடும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டவில்லை. சவுதி அரேபியா தொடங்கி வளைகுடா நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் சமரசத்துக்குத்தான் முயற்சிகளை முன்னெடுக்கின்றன. இதற்குக் காரணம், இஸ்ரேலிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பம் குறித்த அச்சம்தான்.
புதுமை-எதார்த்தவியல் கோட்பாட்டாளர் கென்னத் வால்ட்ஸ் 1981-ல் எழுதிய ஒரு கட்டுரையில், ‘1945 முதல் வல்லரசு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம், அவர்களிடம் உள்ள அணு ஆயுதங்கள்தான்’ என்று குறிப்பிடுகிறார். இன்று உக்ரைன் சந்திக்கும் வேதனையை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அணு ஆயுதங்கள், அணு குண்டுகளைச் சுமந்து, கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத் திறன் அளவுக்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருப்பதால், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களமிறங்கத் தயங்குகின்றன.
அப்படியொரு முயற்சி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் மூன்றாம் உலகப் போருக்குக் காரணமாகிவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், நேரடி ராணுவ உதவிகளைத் தவிர்த்து, தார்மிகரீதியில் மட்டுமே மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவிவருவதால், யுத்தமானது ஐந்து மாதங்களைக் கடந்து இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மற்ற நாடுகள், உக்ரைன் நாட்டு மக்களுக்காக வேதனைப்படலாம்... கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அவர்களின் துக்கத்தில் யாரால் பங்குகொள்ள இயலும்? இன்றைய சூழ்நிலையில், பன்னாட்டுச் சட்டத்துக்குக் கடிக்கக்கூடிய பற்கள் இல்லை; அதனால் குரைக்க மட்டும்தான் முடியும்.
உக்ரைன் சந்திக்கும் இந்தச் சூழ்நிலைக்கு தைவானைத் தள்ளிவிடாமல் இருக்க ஒரே வழி, அவர்களை ஆதரிக்க முன்வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், யுத்தச் சூழல் ஏற்பட்டால், தங்களிடம் உள்ள அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வோம் என்று உறுதியளிப்பதுதான்.
அணு ஆயுத வல்லமை கொண்ட சீனா, ஜனநாயக நாடான தைவானைச் சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கு மாறாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைச் சர்வதேசச் சமூகம் வேடிக்கை பார்க்கும் என்றால், அது வரலாற்றின் பக்கங்களில் நீங்காத கறையாகவே நிலைத்து நிற்கும். சீனா தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டால், அதைக் கண்டித்து அறிக்கைகள் விடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சிறிய நாடுகளுக்கு அளிக்கப்படும் சர்வதேச ஆதரவு என்பது அணு ஆயுதத் தொழில்நுட்பப் பகிர்வாகவும் மாறக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு எழாவிட்டால் பொருளாதார, ராணுவ பலம் பொருந்திய நாடுகள் தங்களது அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் தொடரவே செய்யும்.
தைபே நகரம் சுதந்திரப் பிரகடனம் செய்யும்பட்சத்தில், அதன் மீது ராணுவத்தைப் பிரயோகிக்கும் கொள்கை முடிவில் சீனா தெளிவாக இருக்கிறது. இந்நிலையில், ஜனநாயக நாடான தைவானைப் பாதுகாப்பது சர்வதேசச் சமூகத்தின் கடமை. தற்போதுள்ள கால அவகாசத்தை உலக நாடுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காலம் கடந்து பின்பு எடுக்கும் முடிவுகளால் பயனில்லை. ஒருவேளை, இது பிராந்தியப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் விலகி நின்று வேடிக்கை பார்த்தால், அது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியின்மைக்கே வழிவகுக்கும்.
- சி.ஆன்றணி விஜிலியஸ், ‘மாடர்ன் டிப்ளமஸி’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: casvvigilious@gmail.com