Published : 08 Aug 2022 07:25 AM
Last Updated : 08 Aug 2022 07:25 AM

இந்தியா 75 - விடுதலைக்குப் பின் கல்வி

நாடு விடுதலை அடைந்த 1947-ல் இந்தியாவின் எழுத்தறிவு 12% ஆக இருந்தது (அன்றைய மதராஸ் மாகாணம் – 14%); 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் பொருள்.

இன்று அது 77.7% ஆக உயர்ந்துள்ளது (தமிழகம் 82.9%). 1948-ல் பிரதமர் நேரு ‘அகில இந்தியக் கல்வி மாநாட்’டைக் கூட்டி, ‘நாட்டின் வளர்ச்சி நமது கல்வியில் ஏற்படும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது... ஒட்டுமொத்தக் கல்வி முறையிலும் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவோம்’ என்று அறைகூவல் விடுத்தார்.

அந்தக் கல்வி மாநாட்டில் முன்வைக்கப்பட்டசில புள்ளிவிவரங்களின்படி, 1947-ல் பள்ளியில் சேரும் குழந்தைகளில் 100-ல் 3 பேர் மட்டுமே கல்லூரி வரை சென்றனர். அவர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை. நாடு முழுவதும் மொத்தம் 18 பல்கலைக்கழகங்கள் இருந்தன. மூன்று மருத்துவக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்வி நிலையங்கள், சிறிதும் பெரிதுமான சுமார் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்தன.

மூன்று மந்திரச் சொற்கள்: ஆரம்ப ஆதாரக் கல்வி என்பது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியாகும். உலக நாடுகள் தம் கல்விக் கோட்பாடுகளை அங்கிருந்தே தொடங்கின. ஆனால், இந்தியாவில் அது தலைகீழாக நடந்தது. முதலில், 1948-ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகக் கல்விக் குழுவும், 1952-ல் டாக்டர் லட்சுமணசாமி தலைமையில் உயர், மேல்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவும் அமைக்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலியாக, 1961-ல் டாக்டர் சம்பூரானந்த் தலைமையில் தேசிய உணர்வு ஒருங்கிணைப்புக் கல்விக் குழுவை நேரு அமைத்தார். ஆரம்ப ஆதாரக் கல்வியை யாருமே சீண்டவில்லை. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் கல்வியாளர் எம்.சி.ஜக்லா கல்வி அமைச்சரானார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த விஞ்ஞானி டி.எஸ்.கோத்தாரி தலைமையில் இந்தியக் கல்விக் குழு 1964-ல் அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் ஒட்டுமொத்தக் கல்வியிலும் கவனம் செலுத்தப்பட்டது; ஆரம்ப ஆதாரக் கல்வி எனும் சொல்லாக்கமும் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருந்த ஜே.பி.நாயக், 1950-களிலேயே இந்தியக் கல்வியின் (முக்கோண) மூன்று முக்கியச் சொற்களை முன்மொழிந்தார். அவை: அனைவருக்கும் கல்வி - தரமான கல்வி - சமத்துவக் கல்வி. அதை முழுமையாக அடைவதற்கான பெரும் போராட்டமே நம் இந்தியக் கல்வியின் உயிரோட்டமாக மாறியது. இந்த அம்சங்களை ஜே.பி.நாயக் முன்மொழிய முதன்மைக் காரணம் தமிழ்நாடுதான்!

1950-களின் தொடக்கத்தில் அப்போதைய மதராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி, தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதற்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் பதவிவிலகினார். அதன்பின் முதல்வரான காமராஜர், தமிழகத்தில் ஆதாரக் கல்வியில் பெரும்புரட்சி நிகழ்த்தினார்.

மதிய உணவுத் திட்டம், இலவசச் சீருடை, ஓராசிரியர் பள்ளி என லட்சக்கணக்கான குழந்தைகள் பஞ்சாயத்துகள் நடத்திய பள்ளிக் கல்வியில் இணைந்தனர்; நாடே பார்த்து வியந்தது. அதன் பிறகு தமிழகம் சமத்துவச் சமூகநீதிக் கல்வி முன்மாதிரியை உருவாக்கியது வரலாறு.

கோத்தாரி கமிஷன்: உயர்நிலைப் பள்ளி (பத்தாம் வகுப்பு) முடிவில் மேல்நிலைக் கல்வி ( 2), மூன்றாண்டு கல்லூரிப் பட்டம் (10 2 3) என கோத்தாரி கமிஷன் 1966-ல் பொதுக் கல்வியைப் பிரித்தது. ஆரம்பக் கல்வி (ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை), நடுநிலைக் கல்வி (ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை) என்றும் தனித்தனியாகப் பிரித்து முன்மொழிந்தது.

பெண் கல்விக்காக நியமிக்கப்பட்ட துர்காபாய் தேஷ்முக் தேசிய கமிட்டி (1960), ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் ஆசிரியைகளே அதிகம் நியமிக்கப்படுதல், கல்வியில் மாற்றுத்திறனாளிகள், இளம் கைம்பெண்கள், பிற்படுத்தப்பட்ட -தாழ்த்தப்பட்ட வகுப்பினப் பெண்களுக்கு முன்னுரிமை எனப் பலவற்றைச் சாதித்தது.

இருபாலரும் கல்வி கற்கும் ஆரம்பப் பாடசாலைகள், பெண்களுக்காகவே பிரத்யேகமாக முதியோர் கல்வி ஆகிய பரிந்துரைகளை எம்.பக்தவத்சலம் கல்விக் குழு (1963) வழங்கியது; 1968-ல் முன்மொழியப்பட்ட தேசியக் கல்விக்கொள்கை மூலம் பாலிடெக்னிக், ஐடிஐ பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் அறிமுகமாகின.

பொதுப் பட்டியலில் கல்வி: பள்ளிக்கு முன், 1974-ல் பருவ அங்கன்வாடிகள் வந்தன. பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் இலக்குகள் உறுதியாகி ஒன்பது உயர்கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இந்தியக் கல்வி மாநிலப் பட்டியலில் ஓரளவு தன்னிறைவு அடைந்தது. பிரதமர் இந்திரா நெருக்கடிநிலையை அறிவித்ததும், 1976-ல் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து இந்திய அரசமைப்பின் 42-வது சட்டத் திருத்தத்தின்படி மத்திய–மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்பட்டியலின் இடுகை 25-ன்படி பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது.

அடிப்படை உரிமையாகக் கல்வி: 1986-ல் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் (National Policy on Education) செயல்திட்டத்தில் தொழிற்கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இதனால் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தமிழகம் முழுவதும் ஆங்கில நர்சரிப் பள்ளிகள் தோன்றி கல்வி வியாபாரமாகிப் போனதால், அரசுப் பள்ளிகளின் நிலை நொடிந்தது என்று கல்வியாளர்கள் விமர்சித்தனர்.

சிறப்பு வகுப்புக் கலாச்சாரம், மதிப்பெண் மைய வாழ்க்கை என்று குழந்தைகளைக் கல்வி வாட்டி வதைத்த நிலையில், 1999-ல் பேராசிரியர் யஷ்பால் கற்றலின் சுமையைக் குறைக்க ஒரு நபர் குழுவாகக் களமிறங்கினார்; அவரது தலைமையில் தேசியக் கலைத் திட்ட வடிவமைப்பு 2005-ல் உருவாக்கப்பட்டுப் பள்ளிக் கல்வியில் தொடர் - முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகமானது. வானொலி, தொலைக்காட்சி என ஊடகங்களின் பயன்பாடு, செயற்கைக்கோள் வழியான தொலைதூரக் கல்வி, எழுத்தறிவு மேம்பாட்டுக்காக அறிவொளி இயக்கம் என இந்தியக் கல்வி மக்கள் இயக்கமாக மாறியது.

விடுதலை அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ல்,கல்வியைக் குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறிவித்துச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, 86-வது சட்டத் திருத்தத்தில் 45-வது கூறு திருத்தப்பட்டு கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக அளவில்பேராசிரியர் யஷ்பால் தலைமையில் ஒரு கமிட்டி அதே ஆண்டில் நியமிக்கப்பட்டது.

உலக வங்கியும் கல்வியும்: 2001-ல் ‘சர்வசிக்‌ஷா அபியான்’ (அனைவருக்கும் கல்வித் திட்டம்) மூலம் உலக வங்கி இந்தியக் கல்வித் துறைக்குள் நுழைந்தது. முதல் கட்டமாக 2 கோடிக் குழந்தைகளுக்கு ரூ.500 கோடி அமெரிக்க டாலரும், 2003-ல் இரண்டாம் கட்டமாக மேலும் ரூ.600 கோடி அமெரிக்க டாலரும் நிதியுதவி பெறப்பட்டது.

தற்போது நான்காம் கட்டமாக, ஸ்டார்ஸ் (Strengthening Teaching – Learning and Results for States) என்ற இந்தியக் கல்வித் துறை தர மேம்பாட்டிற்காக உலக வங்கி ரூ.1,006 கோடி அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரம், மத்திய-மாநில அரசுகள் இணைந்து ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்விக்கு ஒதுக்கிட கோத்தாரிக் குழு பரிந்துரைத்தது. ஆனால், 2022 நிதிநிலை அறிக்கையில்கூட கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை வெறும் 2.88% தான்.

ஒரே நாடு... ஒரே கல்வி: மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாநிலப் பாடத்திட்டம் எனப் பிரிந்து கிடந்ததை ஒற்றைக் கல்விமுறையாக (சமச்சீர்) தமிழ்நாடு அரசு 2009-ல் அறிவித்தது. 2004-ல் 94 குழந்தைகளைப் பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து, பள்ளிப் பாதுகாப்பு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சம்பத் கமிட்டி முதல் பல கல்விக் குழுக்களைத் தமிழகக் கல்வித் துறை கண்டுள்ளது.

2020-ல் அமைக்கப்பட்ட தமிழகப் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் அயராத உழைப்பும் குறிப்பிடப்பட வேண்டியது. 2019-ல் மீண்டும் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழுவின் பரிந்துரைகள் நாடு தழுவிய புதிய கல்விக் கொள்கையாக அறிமுகமாகி உள்ளன.

அது ‘ஒரே நாடு... ஒரே கல்வி’ எனும் முழக்கத்தை முன்வைக்கிறது. அதே சமயம், தமிழகத்திற்கு என்று ஒரு மாநிலக் கல்விக் கொள்கையைப் பரிந்துரைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு கல்விக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய விடுதலையின் 75-வது ஆண்டில் கல்வி குறித்த பெரும் விவாதங்கள் தொடர்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக நாம் வெற்றிபெற்றிருப்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்றாகும்!

- ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர் - எழுத்தாளர்

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

To Read this in English: Travails, trials and terrains of Indian educational system after Independence

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x