

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓஷின் சிவா, தன் ஓவியத் திறத்தால் சர்வதேச அங்கீகாரம் பெற்றவர். நியூயார்க், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட பல சர்வதேசக் காட்சிகளில் தன் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். அரூப வகை ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு காண்பிக்கும் ஓஷினின் ஓவியங்களில் தமிழும் அரசியலும் திடமாக வெளிப்படுகின்றன.
தலித், தமிழ், பெண் இந்த மூன்று அம்சங்களே ஓஷினுடைய ஓவியங்களின் மையமாக இருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் இந்த மூன்று வாழ்க்கை முறை அடைந்த மாற்றங்களை, நெருக்கடிகளை ஓஷின் தனது ஓவியங்கள் வழியாகப் பதிவுசெய்துள்ளார். கரோனா காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் இவர் தன் படைப்பு ஒன்றில் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார்.
இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் பெண்ணுடல் அலைக்கழிக்கப்படுவதையும் இவரது படைப்புகளில் பார்க்க முடிகிறது. சமூக மாற்றத்துக்குப் பாடுபட்ட தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சித்திரங்களையும் வரைந்து பார்த்திருக்கிறார். சென்னை கண்ணகி நகர் குடியிருப்புகளில் இவரது சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ்அப், கூச்சி, வேன்ஸ், கன்வர்ஸ், லீவைஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஓஷின். தி ஃபேஸ் இதழ் (2020), ஆர்கிடெக்சுரல் டைஜஸ்ட் (2020), வோக் இந்தியா (2020) பேப்பர் பிளேன்ஸ் (2019) போன்ற பல வெளியீடுகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் புனைகதைகளிலும் காமிக் புத்தகங்களிலும் ஓஷினுக்கு ஆர்வம் அதிகம்.
இந்தியாவின் நெருக்கடிநிலை குறித்த காமிக்ஸ் சித்திரத் தொடர் ஒன்றை வரைந்துள்ளார். தினசரி வாழ்க்கையில் உள்ள பலதரப்பட்ட பெண்களைக் குறித்து ‘எதிர்காலம் இப்போதும்’ என்னும் தமிழ்த் தலைப்பிலேயே ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
- ஜெய்