

உலக மக்கள்தொகையில் 81 கோடி பேர் தேவையான உணவின்றிச் சிரமப்படுகின்றனர் என்று உலக உணவுத் திட்ட (FAO) விவரங்கள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமடைவதால் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக சராசரி வெப்பநிலை உயரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி வெப்பநிலை உயர்ந்தால், ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் உணவின்றி வாடும் உலக மக்களோடு, மேலும் 19 கோடி பேர் பட்டினியில் தள்ளப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்ட அறிக்கை கூறுகிறது.
பசுங்குடில் வாயுக்களை மிகக் குறைந்த அளவே வெளியேற்றும் மக்களே, புவி வெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். உலகில் உணவுப் பாதுகாப்பின்றி வாழும் முதல் 10 நாடுகள் வெளியிடும் கார்பன் அளவு வெறும் 0.08 சதவீதம்தான்.
கார்பனைக் குறைப்பதும் உணவு வழங்குவதும்
‘2030இல் கார்பன் குறைப்பு - அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு’ என்ற கொள்கையை இந்திய அரசு இந்தப் பின்னணியில் ஏற்றுக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி-12, போலிக் அமிலம், இரும்புச்சத்து போன்றவை இந்தியக் குழந்தைகளிடமும் பெண்களிடமும் மிகவும் குறைவாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நமது நவதானியங்களில் அதிக சத்து இருக்கிறது. விவசாய மாற்றங்களும், சிறுதானிய உற்பத்தியும், சிறுதானிய விநியோகமும்தான் வறுமையில் வாடும் இந்த மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
கார்பன் சமநிலை
பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் கார்பனின் அளவும் சமநிலையில் இருப்பதே கார்பன் சமநிலை (கார்பன் நியூட்ரல்) எனப்படுகிறது. தற்போதைய நிலையில் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மீனங்காடி பஞ்சாயத்து கார்பன் சமநிலை அடைந்து வெற்றிபெற்றிருப்பது முக்கியமான ஒன்று.
மீனங்காடி பஞ்சாயத்தில் Tree Banking திட்டத்தின்படி பெருமளவில் மரங்கள் நடப்படும். ஒவ்வொரு மரத்தின் மீதும் கிராமப் பஞ்சாயத்துக்கு உரிமை உண்டு. தனி மனிதர்களுக்குச் சொந்தமான நிலத்திலும் மரங்கள் வளர்க்கப் பஞ்சாயத்து உதவும்.
அத்துடன் இயற்கை வேளாண்மை, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ விழிப்புணர்வு, அறிவியல்ரீதியாகக் கழிவு மேலாண்மை, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி, நீர்நிலைப்பாதுகாப்பு, உயிரினப் பன்மைப் பதிவேட்டைப் புதுப்பித்தல், வாயுவினால் எரியூட்டும் மயானம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கேரள அரசு கார்பன் சமநிலைத் திட்டத்துக்காக 2016 இல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. அதை வைத்து மீனங்காடி பஞ்சாயத்து சாதித்தது. இன்று மத்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகம், கார்பன் இல்லா மீனங்காடி பஞ்சாயத்தின் செயல்பாடுகளை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசித்துவருகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் கேரளத்தில் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான்.உணவுப் பாதுகாப்பிலும் கேரள அரசே வழிகாட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாற்ற சட்டக அமைப்பின் வலியுறுத்தலின்படி, வளரும் நாடுகளுக்கு உறுதுணை செய்யும் பருவநிலை மாற்ற நிதியாக ரூ.100 பில்லியன் அமெரிக்க டாலரை (1 பில்லியன் என்பது 100 கோடி) வழங்கப் பணக்கார நாடுகள் உடனே முன்வர வேண்டும்.
உலகம் முழுவதும் மீனங்காடி பஞ்சாயத்துகளை உருவாக்க இந்த நிதி உதவும். கார்பன் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு என்பது விவசாய உற்பத்தி, கட்டுப்படியான விலை, பொது விநியோகம், நல்ல வேலைவாய்ப்பு, வருமானம் அனைத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். இனி, ஒரு தலைமுறைக்குப் பத்திரமாக நாம் திரும்பித் தர வேண்டிய இந்தப் பூமியைப் பாதுகாப்போம்.
- பி.எஸ்.போஸ்பாண்டியன், தொடர்புக்கு: bosesibana@gmail.com