சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு சாத்தியமா?

சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு சாத்தியமா?
Updated on
4 min read

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2016 டிசம்பரில் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும்.

குறிப்பாக, வயல்வெளிகளிலும் நீர்நிலை சார்ந்த இடங்களிலும் உடனடியாக இந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆணை. அதன் தொடர்ச்சியாக, 13 மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உடனடியாக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பின்பு இந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

2022 பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஓர் ஆணையைத் தமிழக அரசுக்குப் பிறப்பித்தது. அதில், இரண்டு வார கால அவகாசத்துக்குள், சீமைக் கருவேல மரங்களைத் தமிழக அரசு எவ்வாறு ஒழிக்கப்போகிறது என்ற செயல்திட்ட வரைவை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அழிப்பதில் நமக்கு உள்ள தார்மிகப் பொறுப்பை உயர் நீதிமன்ற ஆணைகளின் மூலம் அறியலாம். இது தொடர்பான வேலைகளை அரசும் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால், சீமைக் கருவேல மர அழிப்பு தொடங்குவதற்கு முன்பு, அம்மரம் தொடர்பான பல தரப்பட்ட தகவல்களை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கலை நாம் சந்திக்க நேரிடும்.

அயல் உயிரினங்களை (Invasive alien species), அதுவும் குறிப்பாகப் பல்கிப் பரவிவிட்ட அயல் தாவர இனங்களை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. அயல் தாவர இனங்களை அழிப்பதற்கு முன் பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, அந்தத் தாவரத்தின் இனப்பெருக்கப் பண்பு, பரவும் முறை பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே கட்டுப்பாடு சாத்தியம்.

பல நாட்டு ஆராய்ச்சி வல்லுநர்களின் குறிப்பின்படி, ஒரு பகுதியிலிருந்து அயல் தாவரங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியமில்லாதது. ஆராய்ச்சிக் குறிப்புகளின்படி, அயல் தாவரங்களை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலே பெரும் வெற்றி என்று கருதப்படுகிறது.

பெரும் நிலப்பரப்புகளில் பரவி இருக்கும் இவற்றை அழிப்பது மிகப்பெரிய சவால். அவற்றை அழிப்பதற்குக் குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் வரைகூட ஆகலாம். தீவுகள் போன்ற சிறிய நிலப்பரப்பில் இவற்றை எளிதாக அழித்துவிடலாம். அயல் தாவர இனங்களை அழிக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல நூறு வருடங்களாகப் போராடிவருகின்றன.

எனவே, முதல் கட்ட முயற்சியாகப் பரவலைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆய்வறிக்கையைத் தயார்செய்ய வேண்டும். பிறகு, பலகட்ட முயற்சியாக சீமைக் கருவேல அழிப்பைத் தொடங்க வேண்டும்.

சீமைக் கருவேல பாதிப்புகள்

இந்த மரங்கள் வெகு விரைவாக அடுத்தடுத்த நிலப் பரப்புகளை ஆக்கிரமித்து வளரும் தன்மை கொண்டவை. பரவும் இடங்களின் நீர் வளத்தையும் மண் வளத்தையும் இது தீவிரமாகப் பாதிக்கும். நில வளம் பெரிய மாற்றத்தைச் சந்திக்கும். இதன் காரணமாக, இயல் தாவரங்கள் அந்தப் பகுதிகளில் வளர முடியாமல் போய்விடும்.

இதன் தொடர்ச்சியாக, உள்நாட்டுத் தாவர இனங்களையே நம்பியிருக்கும் நாட்டு விலங்கினங்களுக்கு உணவு கிடைக்காமல் அழிய நேரிடும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த மரங்கள் நீர்நிலைகள், வயல்வெளிகள், புறம்போக்கு இடங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், காட்டுப் பகுதிகளிலும், சரணாலயம் - தேசியப் பூங்காக்களிலும் இது பெரிய தொந்தரவுகளை ஏற்படுத்திவருகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவின்படி, இந்த மரங்களின் பரவலால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் அயல்நாட்டுப் பறவை இனங்கள் கூடு கட்ட முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முன்பு இது மாதிரியான பிரச்சினை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்டது. பிறகு, கருவேல மரங்கள் பெரும் எண்ணிக்கையில் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டன.

இவற்றால் எண்ணிக்கையில் அடங்காத தீமைகள் ஏற்படும்போதும், தமிழகத்தின் வறண்ட பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் விவசாய நிலத்தில் உள்ள இந்த மரங்கள், நல்ல விலைக்கு அப்பகுதி விவசாயிகள் விற்பதும் தெரியவந்துள்ளது. மதுரை தியாகராசர் கல்லூரி ஆய்வறிக்கையின்படி, இந்த மரங்கள் கிட்டத்தட்ட 52,000 ஹெக்டேர் பரப்பளவில் அங்கு பரவியிருப்பதாகத் தெரிகிறது.

விவசாயி, ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மரங்களை வெட்டி விற்பதன் மூலம் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை பணம் பெறுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, கருவேல மரங்களை அழிக்கும் வரைவு அறிக்கையைத் தயாரிக்கும்போது, இதுபோன்று கிடைத்துவரும் பொருளாதாரப் பலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள்

முன்பே குறிப்பிட்டதுபோல், அயல் தாவர/விலங்கு இனங்களை அவ்வளவு எளிதில் அழித்து, ஒழித்துவிட முடியாது. பல வருடத் திட்டமிடல், தொடர்முயற்சி, மிகப்பெரும் பணபலம், ஆள்பலம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பலர் நினைப்பதுபோல் மரங்களை வேரடி மண்ணோடு பிடுங்கி எடுத்துவிட்டால், இந்த இனம் அழிந்துவிடும் என்று தப்புக் கணக்கு போடப்படுகிறது.

ஆனால், அவர்கள் சிந்திக்காத ஓர் விஷயம் விதை வங்கி (Seed Bank), இம்மரத்தின் பண்புகளில் ஒன்று. அதாவது, மண்ணில் புதைந்துள்ள இந்த மரத்தின் விதைகள் (Deposited seeds), மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகத் திகழ்கிறது. ஏனெனில் இவ்விதைகள் 15 ஆண்டுகளுக்குப் பிறகுகூட முளைத்து வளரும் மரபியல் வளத்தைக் கொண்டவை.

நன்கு வளர்ந்த ஒரு மரம் பட்டாணிபோல் மிக நீண்ட காய்களைக் காய்க்கும். ஒரு காயில் 10 முதல் 25 விதைகள் இருக்கும். அதாவது, 1 கிலோ முற்றிய காயில் 4,000 முதல் 12 ஆயிரம் விதைகள் வரை இருக்கும். ஒரு வருடத்தில் ஒரு மரம் கிட்டத்தட்ட 35 - 75 கிலோ வரை காய்களை உற்பத்திசெய்யும். சற்றேறக்குறைய 1,40,000 விதைகளை ஒரு வளர்ந்த மரம் ஒரு வருடத்துக்கு உற்பத்திசெய்யும்.

அப்படியெனில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு விதைகளை இந்த மரங்கள் உற்பத்தி செய்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். இந்த விதைகள் 10 - 15 ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும். எனவே, மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதால், இந்த இனம் அழிக்கப்பட்டுவிட்டதாக எண்ணுவது ஆபத்தாக முடிந்துவிடும்.

மேலும், வெட்டப்பட்ட இடங்களிலிருந்து மீண்டும் முளைக்கும் செடி / மரம் அதிவேகமாக வளர்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது போக, சீமைக் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட இடங்களில் வேறு அயல் தாவரங்கள் விரைவாக வளர்வதைக் காணலாம்.

குறிப்பாகப் பார்த்தீனியம், உண்ணிச்செடி போன்றவை வேகமாக வளரும். ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவின்படி, வேளாண் நிலங்களில் இந்த மரங்கள் அழிக்கப்படும்போது, எலி - அணில் வகை சார்ந்த கொறிக்கும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் வரைவு அறிக்கையைத் தயார்செய்ய வேண்டும். இல்லையேல், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் கடுமையான பாதிப்பையும், பொருளாதார விரயத்தையும் ஏற்படுத்தும்.

சீமைக் கருவேல மரங்களை அழிப்பது என்பது நீண்ட காலப் போராட்டம். பலதரப்பட்டவர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்: ஆராய்ச்சியாளர்கள், காட்டுயிர் வல்லுநர்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் கொண்ட குழுவைத் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாகத் தேர்ந்தெடுத்துப் பதிவுசெய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு தலைமை நிலையம் வேண்டும்.

வனத் துறையைப் போல அயல் தாவர - விலங்குகளை அழிக்க / கட்டுப்படுத்த ஒரு புதிய துறை தனியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். இல்லையென்றால், நம்மை அறியாமல் இயற்கை வளங்களையும் நம் நாட்டுக் காட்டுயிரினங்களையும் இழக்க நேரிடும். உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் இதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

- ச.சாண்டில்யன், அயல் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: ssandilyan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in