

ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் ஜாஃபர் பனாஹி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 2010-ல் அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென இப்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமியக் குடியரசான ஈரானின் ஆட்சியாளர்கள் புரியும் லஞ்ச லாவண்ய அட்டூழியங்களையும், சமூகத்தில் பெண்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் கண்டித்து, அந்நாட்டின் திரைத்துறையினர் எதிர்ப்பியக்கங்களை நடத்திவருகின்றனர்.
ஈரானிய மக்களின் மனசாட்சியாக விளங்கும் அந்நாட்டின் சினிமா கலைஞர்கள் எதார்த்தமான படங்களை எடுப்பதில் முன்னோடிகளாக இருந்துவருகின்றனர்.
சினிமாவும் பனாஹியும்: ஒவ்வொரு ஈரானிய சினிமாவும் இலக்கியம்போல் மிளிரும் தன்மைகொண்டவை. ஏழ்மையையும், ஈரானிய சமூகத்தில் நிலவும் பெண்ணிய ஒடுக்குமுறையையும், ஆட்சியாளர்களின் உண்மை முகத்தையும் இப்படங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன.
ஆடம்பரமற்ற காட்சி அமைப்புகளும், எதார்த்தத்தை எளிதில் விளங்கிக்கொள்ளத்தக்க உரையாடல்களும் இப்படங்களில் இடம்பெறுகின்றன.
2010-ல் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை எதிர்த்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் அப்போதே நிகழ்ந்தன. அவ்வியக்கங்களில் இயக்குநர் ஜாஃபர் பனாஹியும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போதே அவர் கைதுசெய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அவருக்குப் பிணை கிடைத்தாலும், அடுத்த 20 வருடங்களுக்குப் படங்களை இயக்கவோ அல்லது வெளிநாடு செல்லவோ தடைவிதிக்கப்பட்டது. வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டார். தனது நாட்டு அரசின் நேர்மையற்ற நடத்தைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியது மட்டுமே அவர் செய்த பெருங்குற்றம்.
படங்களை இயக்குவதற்குத் தடைவிதிக்கப்பட்ட போதிலும், அத்தடைகளை நிராகரித்துவிட்டு, தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களை இயக்கிக்கொண்டே இருந்தார். சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்த ஈரானிய அரசு இப்போது அவரைக் கைதுசெய்திருக்கிறது.
பனாஹி செய்த குற்றம்?: ஈரானில் ஆட்சியாளர்களைக் குறைகூறுவது மன்னிக்கப்பட முடியாத குற்றம். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பெண்கள் கலந்துகொள்வது, முக்கியமாகத் திரைப்படங்களில் நடிப்பது, ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியே வெளியில் உலவுவது ஆகியவை மத நிந்தனைச் செயல்களாக கருதப்படுகின்றன.
பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் ஆகப்பெரும் குற்றச்செயலாகக் கருதப்படுகிறது. ஜாஃபர் பனாஹியின் புகழ்பெற்ற திரைப்படமான ‘சர்க்கிள்’ (Circle)-ல் பெண்களை நோக்கிப் பேசப்படும் ஒரு வசனம் அந்த நிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறது: ‘ஒரு ஆணின் துணையில்லாமல் நீ எங்குமே செல்ல முடியாது’.
பெண்ணடிமைத்தனத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கிளர்ந்தெழும் எந்தக் குரலையும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் சகித்துக்கொண்டதில்லை. தன் அதிகாரத்துக்கு எதிராகக் குரல்கொடுக்க எந்தவொரு எதிர்க்கட்சியையும்கூட அவர்கள் இயங்க அனுமதிப்பதில்லை.
ஆனால், ஜாஃபர் போன்ற கலைஞர்கள் ஆட்சியாளர்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை. நிலைத்த அதிகாரம் படைத்த ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை நீடிக்க வகைசெய்யும் எல்லாவற்றையும் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
பகுத்தறிவுக் கருத்துகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதற்கு எதிராக மதத்தைக் களமிறக்குகிறார்கள். தனது சேவைப் பரிவாரங்களுக்குத் தேவைப்படும் செல்வ வளத்துக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடவும் செய்கிறார்கள்.
உணர்வுள்ள இயக்குநர்கள்: இலங்கையில் அப்படித்தான் நடைபெற்றது. ஈரானிலும் அப்படித்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஈரானின் பெரும் நகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற மிகப்பெரும் கட்டுமானங்களில் நடைபெறும் ஊழல்களின் விளைவால் நடக்கும் விபத்துகள் மக்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றன.
இந்த ஆண்டு மே மாதம் சரிந்துவிழுந்த கட்டிடத்தில் சிக்கி உயிரிழந்த மக்கள் 40-க்கும் மேல். ஈரானின் தென் மேற்கு மாகாணமான குஜெஸ்தானில் அரபு இன மக்கள், அந்நாட்டின் சிறுபான்மையினராக வசித்துவருகின்றனர். இங்குள்ள முக்கிய நகரம் அபடான். இந்நகரில் நிகழ்ந்த இக்கட்டிட விபத்து, ஏற்கெனவே அப்பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அரபு தேசியத்துக்கு எண்ணெய் வார்த்தது.
விபத்துக்குப் பிறகு ஈரானிய அரசுக்கு எதிராக இப்பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. விபத்துக்குக் காரணமான அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்யவும், விசாரணை நடத்தி தண்டனை வாங்கித்தரவும் அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. காலங்காலமாக இங்கு வாழும் அரபு இன மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள் கடுமையான அடக்குமுறைகளை நிகழ்த்திவருகின்றன. போராடும் அரபு மக்களுக்கு ஆதரவாகவும், தாக்குதல் நடத்தும் ஈரானிய அரசுப் படைகளுக்கு எதிராகவும் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் முகம்மது ரசூலஃப் தலைமையில் ‘படை வீரர்களே..
உங்கள் ஆயுதங்களை மெளனித்து விடுங்கள்’ என்னும் இயக்கம் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்துக்குத் தலைமை ஏற்ற இயக்குநர்கள் முஸ்தஃபா அல் அஹமது, முகம்மது ரசூலஃப் இருவரையும் ஜூலை 8-ல் ஈரானிய அரசு கைதுசெய்தது. இவ்விருவரும் சிறைவைக்கப்பட்டிருக்கும் எவின் சிறைச்சாலைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹியும் இப்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
பனாஹியின் நண்பர்கள் நாட்டைவிட்டு வெளியேறிப் படங்களை இயக்கிக்கொண்டிருக்கும்போது, பனாஹி உள்ளிட்ட சில இயக்குநர்கள் மட்டுமே ஈரான் மண்ணைப் பெரிதும் நேசிப்பவர்களாக அம்மண்ணிலேயே தங்கியிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் வெறுப்பையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்கிறார்கள் - தாங்கள் நேசிக்கும் மக்களுக்காக, மானுட சமுதாயத்துக்காக.
தொடர்புக்கு: c.shanmughasundaram@gmail.com