

அண்மையில் காலமான திரைப்படத் திறனாய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி 1980-களிலிருந்து தமிழ்த் திரைப்படம் குறித்து எழுதத் தொடங்கியவர். 1986இல் ‘இனி’ இதழில் வெளியான அவருடைய ‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற கட்டுரை தமிழ்த் திரைப்பட ஆய்வியலைத் தொடங்கிவைத்தது எனலாம். இதே காலகட்டத்தில், அவருடைய நண்பர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ‘தி இமேஜ் ட்ராப்’ (தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம்: ‘பிம்பச்சிறை’) என்ற நூலை எழுதினார். தமிழ்த் திரைப்பட ஆய்வு, சக்ரவர்த்திக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஹார்டுகிரேஃப், சு.தியடோர் பாஸ்கரன், கா.சிவத்தம்பி ஆகியோர் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு தமிழ்த் திரைப்படங்களை ஆய்வுப்பொருளாகக் கொண்டனர். ஆனால், வெங்கடேஷ் சக்ரவர்த்தியும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும் மேற்கூறிய ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டிருப்பது திரைப்படத்தைத் திரைப்படமாகவே அணுகுதல், அவற்றின் வடிவத்தை அல்லது உருவத்தைப் பேசுபொருளாகக் கொள்ளுதல் என்பதில்தான்.
சக்ரவர்த்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். உதிரி உதிரியான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கவோ, நூல் வடிவில் எழுதவோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘சுவடுகள்: திரை விமர்சனத் தொகுப்பு’ என்ற தலைப்பில் அவருடைய தமிழ்க் கட்டுரைகள் மிக அண்மையில்தான் நூலுருவம் பெற்றுள்ளன. அதில், ‘ராசுக்குட்டி’, ‘தேவர்மகன்’ சினிமாக்கள் ஒப்பீடு, மணிரத்னமும் சினிமா அரசியலும், மாறிவரும் தமிழ் சினிமாவும் அதன் இந்துத்துவப் பிரதிபலிப்பும், சினிமாவில் சாதியைப் பற்றிப் பேசலாமா?, தலித் மக்களைத் திராவிட இயக்க சினிமா எப்படிச் சித்தரித்தது?, திரையிலும் சினிமாவிலும் எம்.ஜி.ஆர், திராவிட இயக்கம் ஒரு சமூக இயக்கம் ஆகிய கட்டுரைகள் அவரது பரந்த ஆய்வு வீச்சினைப் புலப்படுத்துபவை. அவரது ஆங்கிலக் கட்டுரைகள் இன்னமும் நூலுருவம் பெறவில்லை. அவர் ஆங்கிலத்தில் எழுதியவற்றில் ரஜினிகாந்த் குறித்தும் ‘ஹே ராம்’ திரைப்படம் குறித்தும் உளப்பகுப்பாய்வு நோக்கில் எழுதியவை முக்கியமானவை. தமிழ்த் திரைப்படங்கள் குறித்த அவரது பல ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கவும் தொகுக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது.
உளப்பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு
தமிழ்த் திரைப்படங்களை ஆய்வுசெய்யும்போது கலைப்படம் என்ற சட்டகத்தைத் தாண்டி, ஜனரஞ்சகத் திரைப்படத்தை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டவர் சக்ரவர்த்தி. இவ்விதத்தில் அவரது முதல் தமிழ்க் கட்டுரையான ‘பாரதிராஜாவின் சினிமா’ பலருக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு கட்டுரையாக அமைந்தது. தமிழ்நாட்டில் ஜனரஞ்சகத் திரைப்படத்தை ஆய்வுப்பொருளாகக் கொள்ளும் முயற்சி மேலெழுந்துவருகிற சமயத்தில் சக்ரவர்த்தி ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். குறிப்பாக, தமிழில் முதன்முதலில் உளப்பகுப்பாய்வு அடிப்படையிலான திரைப்படத் திறனாய்வை அறிமுகப்படுத்தியவர் அவரே. அடிப்படையில் அவர் ஒரு தத்துவ மாணவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் பயின்றவர். மொழியியல் அறிஞரான நோம் சாம்ஸ்கி சிந்தனைகள் மீது தனது எம்ஃபில் ஆய்வினை மேற்கொண்டவர். ஐரோப்பிய சினிமாக்களின் மீது ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவர். 80-களின் மத்தியில் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உலகப் படங்களை அறிமுகப்படுத்தும் சாளரமாக சென்னை ஃபிலிம் சொசைட்டி செயல்பட்டுவந்தது. அதன் அலுவலகம், அண்ணா சாலை தேவி திரையரங்குக்குப் பின்னாலுள்ள தாயார் சாகிப் சந்தில் இயங்கிவந்தது. அதன் இணைச் செயலாளராகவும் சக்ரவர்த்தி இருந்துள்ளார். சக்ரவர்த்தி, ‘சென்னை: தி ஸ்ப்லிட் சிட்டி’ தென் சென்னை, வட சென்னை ஆகிய இரு பகுதிகளைக் குறித்து ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துள்ளார்.
ஆங்கிலத்திலும் எழுதியவர் சக்ரவர்த்தி
சென்னை ஃபிலிம் சொசைட்டியின் இணை அமைப்பான சென்னை புக்ஸ் வழியாக பேலபேலாஸின் ‘சினிமாக் கோட்பாடு’, ‘சத்யஜித் ரே’, ‘மிருணாள் சென்’, ‘சினிமா ரசனை’ போன்ற பல காத்திரமான நூல்கள் வெளிவந்தன. அவ்வரிசையில், பிரெஞ்சு சினிமாவில் உருவான புதிய அலை இயக்கத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ‘மரபை மீறிய சினிமா’ என்ற சிறுநூலை வெளியிட்டது சென்னை புக்ஸ். அதில் பிரெஞ்சின் முக்கிய இயக்குநரான ழான் லுக் கோதாரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார் சக்ரவர்த்தி. 30 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தாலும் ஒரு திரைப்பட மாணவனுக்குப் பல திறப்புகளைத் தரவல்லது அக்கட்டுரை. தமிழ்நாடு திரைப்பட இயக்கம், திரைப்படம் என்ற நவீன ஊடகம் உருவாகி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடும் விதமாக விழா மலரை 1995, ஏப்ரலில் வெளியிட்டது. அதில், ‘இந்தியன் ஃபிலிம் கிரிட்டிசிசம்: எ கான்செப்சுவல் ஜங்கிள்’ என்ற முக்கியமான கட்டுரையை சக்ரவர்த்தி எழுதியுள்ளார். திரைப்பட ஊடகத்தை அணுகுவதற்கு ஒருவர் எழுப்பிக்கொள்ள வேண்டிய பல கேள்விகளை சக்ரவர்த்தி அதில் கேட்டிருக்கிறார்.
2004இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில்மூன்று நாட்கள் ஈரானியத் திரைப்பட விழா நடைபெற்றது.அப்போது வெளியிடப்பட்ட ‘புதிய ஈரானிய சினிமா: பயணங்களும் சந்திப்புகளும்’ என்ற நூலில், ஈரானில் நடைபெற்ற அரசியல் புரட்சி தொடங்கி அங்கு திரைப்படங்களில் நடைபெற்ற மாற்றங்களை 90 பக்கங்களுக்கு விரிவான கட்டுரையாகச் சொல்லியிருக்கிறார். ‘ஒரு திரைப்படத்தை விளக்கி அறிவது கடினம். ஏனென்றால், அது நமக்குச் சுலபமாகப் புரிந்துவிடுகிறது’ என்ற புகழ்பெற்ற திரைப்பட ஆய்வாளரான கிறிஸ்டியன் மெட்ஸின் வாக்கியங்கள் அவருடைய அக்கட்டுரையில் அடிக்கடி மேற்கோளாக வரும். அவர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, ‘ஒரு சினிமாப் பார்வையாளன் தீங்கற்றது, நடுநிலையானது என்று கண்டுகளித்துப் புரிந்துகொள்ளும் காட்சிக்குப் பின்னால், சிக்கலான கருத்தியல்கள் இயங்குகின்றன. அதை அடையாளங்கண்டு வரலாற்றுணர்வுடன் கோட்பாட்டுரீதியாக விளக்க வேண்டியது திரைப்பட விமர்சகனின் வேலையாகும்’ என்று அவர் தீவிரமாக இயங்கியிருப்பது நமக்குப் புலனாகிறது.
தொகுக்கப்படாத கட்டுரைகள்
சக்ரவர்த்திக்கு ஃப்ராய்டின் சிந்தனைகளை மொழியியல் வாயிலாகச் செழுமைப்படுத்தி வாசித்த உளப்பகுப்பாய்வாளரான லக்கானின் அணுகுமுறை மீது தனிப்பட்ட அக்கறை உண்டு. அதன்படி ஒரு திரைப்படப் பார்வையாளன், திரைப்படம் அள்ளித்தரும் காட்சியின்பத்தை ஏன், எதற்கு, எப்படி அள்ளிப் பருகுகிறான் என்ற அடிப்படைக் கேள்விகளைத் திரைப்பட ஆய்வுகளில் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பார் அவர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி, லயோலா விஷுவல் கம்யூனிகேஷன் துறை, ஹைதராபாத் ராமாநாயுடு திரைப்படக் கல்லூரி, எல்.வி.பிரசாத் திரைப்படக் கல்லூரி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயலாற்றியவர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி. 1999இலிருந்து 2000 வரை பினாங்கு மலேசியப் பல்கலைக்கழகத்தில் திரையியல் பிரிவில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். சரியாக வரவில்லை என்றுஅவர் அதிருப்திப்பட்டு ஒதுக்கிவைத்துள்ள கட்டுரைகளே கணிசமாக இருக்கும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அக்கட்டுரைகளைத் திரட்டிப் புத்தகமாக வெளியிட்டால், தமிழ் சினிமா ஆய்வுகளுக்கு அது பெரிய பங்களிப்பாக இருக்கும்.
- சுந்தர் காளி, பேராசிரியர், தொடர்புக்கு: sundarkali@yahoo.co.in
- முகமது சஃபி, மருத்துவ உளவியலாளர், தொடர்புக்கு: safipsy69@gmail.com