

காலச்சுவடு இதழின் ஆசிரியராக 1994இல் தன் பயணத்தைத் தொடங்கியவர் கண்ணன். கலகச் செயல்பாடாக இருந்த தீவிர இலக்கியச் சூழலுக்குள், பெங்களூருவில் பொறியியல் படித்த இளைஞராக அவருடைய நுழைவு எளிமையானதாக இருக்கவில்லை. காலச்சுவடு இதழைத் திரும்பக் கொண்டுவர அவர் மேற்கொண்ட பயணங்களும் அனுபவங்களும் ஓர் ஆளுமையாக உருவாவதற்கான திடத்தை அவருக்கு அளித்திருக்கும்.
நாகர்கோவிலின் பிரசித்திபெற்ற தொழில் குடும்பத்தின் வாரிசு என்ற பின்னணியில் கண்ணன் இந்தப் பதிப்பகத் துறையை அணுகவில்லை. அவருக்குப் பிடித்தமான ஆங்கில இதழியல் துறையின் ஒரு மாற்றாக காலச்சுவடை அவர் புனரமைத்தார். இதழியல் மீதான பெருவிருப்பத்தின் வெளிப்பாடுதான் அவரது இம்முயற்சி. காலச்சுவடை இடைநிலை இதழாக வெற்றிகரமாக கண்ணன் உருவாக்கினார். இதன் வழியாக இலக்கியத்துடன் தமிழின் பண்பாட்டு அரசியல் சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து பதிப்பித்தார். என்.டி.ராஜ்குமார், சுகிர்தராணி, மாலதி மைத்ரி போன்ற புதிய இலக்கியக் குரல்களுக்கு அவரைப் பதிப்பாளராகக் கொண்ட காலச்சுவடு தளமானது.
உதிரிச் செயல்பாடாக இருந்த தீவிர இலக்கியப் பதிப்புத் துறையை முறைப்படுத்தினார். எழுத்தாளர்களே வாசகராக இருக்கும் தீவிர இலக்கியச் சூழலைத் தாண்டி, அந்தப் புத்தகங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்ததில் கண்ணனின் பங்கு முக்கியமானது. செம்மையாக்கம், வடிவமைப்பு என ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாகத் தமிழ்ப் புத்தக வடிவமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தினார். பதிப்பக ஒப்பந்த ஒழுங்கு, எழுத்தாளர்களுக்கு ராயல்டி எனத் தொழில்முறையில் தமிழ் இலக்கியப் பதிப்புத் துறையை நெறிப்படுத்தினார்.
கண்ணனின் ரத்தினச் சுருக்கமான பத்தி எழுத்துகள், தொ.பரமசிவன், ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துகளை ஒத்த தனித் தமிழ் நடையும் வாசிப்புச் சுவாரசியமும் கொண்டவை. இதழியல் குறித்த தமிழ் எழுத்துகளில் கண்ணனின் கட்டுரைகள் கவனம்கொள்ளத்தக்கவை. சுந்தர ராமசாமியின் மகன் என்ற தைரியத்தில் இலக்கியம் படைக்கக் கண்ணன் துணியவில்லை. வாசிக்கக்கூடியவராக இருந்தாலும் அது குறித்தான அபிப்ராயத்தைக்கூடக் கண்ணன் எழுதியதில்லை. எழுத்தாளர்களுக்கு மாறாக, நோம் சாம்ஸ்கி போன்ற அரசியல் செயல்பாட்டாளர்களைக் கண்ணன் தன் ஆதர்சமாகக் கொண்டுள்ளார். எகானமிக்கல் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி, தி வயர், தி இந்து போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணன் எழுதியுள்ளார். இந்திய ஆங்கில ஊடக உலகிலும் பதிப்பகத் துறையிலும் அறியப்பட்ட ஒரு பதிப்பாளர் என்ற முகத்தையும், தன் தீவிரமான செயல்பாடுகளின் வழி கண்ணன் உருவாக்கியுள்ளார்.
சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவல் மறுபதிப்பின் மூலம் பதிப்பகத் துறைக்குள் நுழைந்தவர், இன்று 800-க்கும் அதிகமான நூல்களைப் பதிப்பித்துள்ளார். ‘தமிழ் இனி 2000’ மாநாட்டைச் சென்னையில் நடத்தி முன்னுதாரணமானார். ப்ராங்க்பர்ட் சர்வதேசப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் புத்தகத்துக்காக அரங்கு அமைத்த பெருமை கண்ணனுக்கு உண்டு. பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி, ஸ்பானிஷ், சீனம், ரஷ்யா உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து நவீன கிளாஸிக் படைப்புகளை நேரடியாகத் தமிழில் பதிப்பித்துள்ளார். அதுபோல் உலகின் பல மொழிகளுக்குத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டுசேர்த்துள்ளார். காலச்சுவடு அல்லாமல் ஆங்கிலப் பதிப்பகங்களுக்கான தமிழ்ப் பாலமாகவும் இருந்துவருகிறார். ‘கலை, இலக்கியம் உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் தமிழுக்கும் பிற மொழிக்கும் இடையிலான உறவைச் செழுமைப்படுத்தி வருபவர்’ என்ற அடிப்படையில், செவாலியே விருது கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற பிரான்ஸ் அரசின் விருதுக் கூற்றுக்குச் சாலப் பொருத்தமானவர் கண்ணன் எனத் திடமாகக் கூறலாம்.