

சிங்காரவேலர், பெரியார், ஜீவா ஆகியோருடன் இணைந்து 1933-ல் ‘ஈரோடு சமதர்மத் திட்ட’த்தை உருவாக்கியவர்களுள் புதுக்கோட்டை க.முத்துசாமி வல்லத்தரசுவும் ஒருவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அவர், காதல், சாதிமறுப்பு, வைதீகச் சடங்குகள் அற்ற திருமணங்களையும் பெண்கள் மறுமணங்களையும் தாமே முன்னின்று நடத்தியவர்.
1938-ல் ராஜபாளையத்தில் ஜமீன் முறையை ஒழிக்க வலியுறுத்தி, நடைபெற்ற மாநாட்டில் வல்லத்தரசு முக்கியப் பங்காற்றினார். 1945 அக்டோபரில், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற, காங்கிரஸ் கட்சியின் மதராஸ் மாநில கமிட்டிக் கூட்டத்தில், தலைவர் பதவிக்கான தேர்தலில் காமராஜரை வெற்றிபெறச் செய்ததில் அவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
அதே ஆண்டில், திருச்சி திண்ணனூரில் நடந்த காங்கிரஸ் கமிட்டியில் குற்றப் பரம்பரைச் சட்டத்தை நிறுத்திவைப்பதற்காக தீர்மானம் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார். புதுக்கோட்டை சமஸ்தான சட்டமன்றத்துக்குக் குன்றாண்டார்கோவில், திருமயம் ஆகிய தொகுதிகளிலிருந்து 3 முறை தேர்தெடுக்கப்பட்டார்.
மன்றத்தில் ஏழைகளின் குரலாய் ஒலித்தார். புதுக்கோட்டை சமஸ்தான காங்கிரஸ், புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தலைவராகச் செயல்பட்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ராமநாதபுரம்-திருவாடானை சிறையையும், தேவகோட்டை நீதிமன்றத்தையும் தகர்த்து சின்ன அண்ணாமலையை விடுவித்தார். அதனால், தஞ்சாவூர், வேலூர் சிறைகளில் இரண்டரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டையில் பரம்பரை மன்னர் ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்த முன்னோடி இவர். பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க வலியுறுத்தி மக்கள் இயக்கங்களையும் நடத்தியவர். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக, சுதந்திரம் பெற்று சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை, இந்தியாவுடன் இணைந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் (1952) போட்டியிட, காங்கிரஸ் கட்சி வல்லத்தரசுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராககுடிசை வீடு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில்குரல் எழுப்பியவர் வல்லத்தரசு நீர்ப்பாசனபிரச்சனைக்கு நிலையான தீர்வுகாண காவிரி உபரிநீரை புதுக்கோட்டைக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தொலைநோக்குப் பார்வையோடு அன்றே குரல் கொடுத்தவர்.
மொழிவாரி மாநிலப் பிரிப்பு நடந்தபோது நமது மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசியவர்.
தான் வழக்கறிஞராகப் பணியாற்றிய தொடக்க காலத்திலேயே ஏழைகளுக்கு கட்டணமின்றி வழக்காடியதோடு அவர்களின் உணவு, போக்குவரத்துச் செலவுகளுக்கும் உதவி செய்தவர் வல்லத்தரசு. கார்ரல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின்சாரத்தைச் சிறையிலிருந்தவாறே முதன்முதலில்தமிழில் எழுதியவர்.
பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருத்துறைப்பூண்டி சுயமரியாதை மாநாட்டிலிருந்து வெளியேறி, பின் மன்னார்குடியில், ஜீவாவோடு இணைந்து, சுயமரியாதை சமதர்மக் கட்சியை தொடங்கினார். ஏழைகளின் கல்வி, வேலை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மக்களின் பங்கேற்போடு, 25 ஆண்டுகளுக்கான ஒரு வேலைத் திட்டத்தை வகுத்தார்.
நேருவின் பெருந்தொழில் கொள்கைகளுக்கு எதிராக, காந்தி, ஜெ.சி.குமரப்பா ஆகியோரின் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்தார். சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கி சமதர்மக் கொள்கையை நோக்கியதாகஅமைந்தது அவரது அரசியல் பயணம்.
- கசி. விடுதலைக்குமரன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மக்கள் விடுதலை
ஜூலை 30: க.மு.வல்லத்தரசு நினைவு நாள்