

மாமல்லபுரத்தில் ஜூலை 28 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 வரையிலும் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக சென்னையும் மாமல்லையும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
ஏறக்குறைய 95 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட இந்த சர்வதேசப் போட்டியை இந்தியாவில் முதன்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கிவைக்கிறார்.
ஜூன் 19 அன்று புது டெல்லியில் பிரதமர் தொடங்கிவைத்த ஒலிம்பியாட் ஜோதித் தொடரோட்டம், லடாக் பிரதேசத்தின் லே நகரத்திலிருந்து நாட்டின் 75 நகரங்களைக் கடந்து மாமல்லையை வந்தடைய உள்ளது.
ஒலிம்பிக் போட்டிக் கொண்டாட்டத்தில் ஜோதித் தொடரோட்டமும் ஒரு பகுதியாகவே இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியாதான் ஜோதி தொடரோட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வடமுனையிலிருந்து தென்முனை வரைக்கும் 75 முக்கிய நகரங்களை இணைத்திருக்கும் இந்தத் தொடரோட்டம், சுதந்திரத் திருநாளின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டங்களுடன் இணைந்துகொண்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் பங்கெடுத்துக்கொண்டிருப்பது, எல்லைகளைக் கடந்து மாநிலங்களை இணைக்கும் நாட்டுப்பற்றை உலகுக்குத் தெரிவித்துள்ளது.
187 நாடுகள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கவிருக்கின்றன. இதுவரை நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக நாடுகள் கலந்துகொள்ளும் போட்டி என்கிற பெருமையும் சென்னைக்குக் கிடைத்துள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட ஏறக்குறைய 2,000 வெளிநாட்டினர் இந்நிகழ்வுக்கு வருகைதருகிறார்கள்.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரம், இந்த விளையாட்டுப் போட்டியையொட்டி மீண்டும் ஒருமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வரலாற்றுப் பெருமித உணர்வோடு இந்திய வீரர்கள் இந்தப் போட்டியில் வெற்றிவாகை சூடுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவின் சார்பில் ஆண்கள் பிரிவில் மூன்று அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவின் சார்பில் இரண்டு அணிகள் பங்கேற்கவிருந்த நிலையில், தற்போது மூன்றாவது பெண்கள் அணி பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் செஸ் விளையாட்டில் சாதனை படைத்துவருகிறார்கள். அந்தச் சாதனைகளின் எல்லை இன்னும் விரியட்டும்.
செஸ் நாயகர்களில் ஒருவரான விஸ்வநாதன் ஆனந்த், இந்தப் போட்டியில் இந்தியா பதக்கங்களை வெற்றிகொள்ள பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செஸ் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகளை இளைய தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற அவரது நம்பிக்கை நிரூபணமாவதைக் காண விளையாட்டு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான விழாக் கொண்டாட்டம், விரைவில் வெற்றிக் கொண்டாட்டமாகவும் மாறட்டும்.